"லோக்பால்' மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. அதில், "லோக்பால் அதிகார வரம்பிற்குள், சி.பி.ஐ., அமைப்பை கொண்டு வர முடியாது' என, மத்திய அரசு தெரிவித்து விட்டது. அது போல், அன்னா ஹசாரே கோரிய அம்சங்களும் அதில் இடம் பெறாததால், அந்த மசோதாவை, "பல் இல்லாத அமைப்பு' என அவர் கிண்டலடித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம், டில்லியில் நேற்று கூடியது. அதில், லோக்பால் மசோதாவை, வரும் பட்ஜெட் கூட்டத்தில், பார்லிமென்டில் நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் படி, பார்லிமென்ட் தேர்வு குழு அளித்த அறிக்கையை அடிப்படையாக வைத்து, ஏற்கனவே அரசின் பரிசீலனையில் இருந்து வரும் லோக்பால் மசோதாவில், குறிப்பிட்ட சில திருத்தங்களை மேற்கொண்டு, அவற்றுக்கு அமைச்சரவை கூட்டம் ஒப்பதலும் அளித்தது.
அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, லோக்பால் மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்து, பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமி, நிருபர்களிடம் விளக்கினார்.
லோக் ஆயுக்தா இல்லை:அவர் கூறியதாவது:பழைய லோக்பால் மசோதாவின் படி, லோக்பால் அமைப்போடு சேர்ந்து, லோக் ஆயுக்தா விசாரணை அமைப்பு அமைப்பதற்கு, வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஊழல்களை விசாரிப்பதற்காக, ஏற்படுத்தப்படும் லோக்பால் அமைப்பும், மாநில அரசின் ஊழல்களை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்படும், லோக் ஆயுக்தா அமைப்பும் தனித்தனியாக இருக்கும்.இருப்பினும், லோக்பால் மசோதா, பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்ட, 365 நாட்களுக்குள், லோக் ஆயுக்தா அமைப்பையும், மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என, திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
சி.பி.ஐ., விசாரணை அமைப்பு, சுதந்திரமாக இயங்க கூடியது. நாட்டின் மிக முக்கிய விசாரணை அமைப்பான, சி.பி.ஐ.,யின் சுதந்திரத்தை கட்டுப்படுத்த கூடாது. தொடர்ந்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் செயல்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை."யார் யார் உறுப்பினர்கள்?'லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களை, தேர்வு செய்யும் குழு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. அரசியல்வாதிகள் யாரும் உறுப்பினராக இருக்கக் கூடாது என, இருந்த நிலையை மாற்றி, சம்பந்தப்பட்ட உறுப்பினர், எந்தவொரு கட்சியிலும், அதிகாரப்பூர்வமாக உறுப்பினராக இருக்க கூடாது என, விதி மாற்றப்பட்டு உள்ளது.
லோக்பால் தேர்வு குழுவில் இடம் பெற போகும் தலைவர், செயலர், உறுப்பினர்கள் என, அனைவரையும் தேர்வு செய்யும் அதிகாரம், பிரதமர், லோக்சபா சபாநாயகர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என, நான்கு பேர் வசம் இருக்கும்.ஐந்தாவதாக நியமிக்கப்படும், உறுப்பினர் யார் என்பதை, மத்திய அரசு முடிவு செய்யும் என இருந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி, ஐந்தாவது உறுப்பினரை, இந்த நான்கு பேர்களின் ஆலோசனையை கேட்டு, இறுதியாக ஜனாதிபதி நியமனம் செய்வார்.தொண்டு நிறுவனங்கள் அனைத்தும், லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் வரவு செலவு கணக்குகள், லோக்
பாலுக்குள் வராது. அவற்றை ஆராய போதுமான சட்டங்கள் உள்ளன.அரசு ஊழியர் மீது, குற்றச்சாட்டு எழுந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கும் முன், அரசின் அனுமதியை பெற்றாக வேண்டுமென்ற நிலை, தற்போது உள்ளது. இனி, லோக்பால் அமைப்பின் அனுமதியே போதுமானது என, தீர்மானிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
இதற்கு, சமூக ஆர்வலரும், "லோக்பால் மசோதா நிறைவேற்ற வேண்டும்' என போராடியவருமான, அன்னா ஹசாரே, 75, எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "மத்திய அரசு, பல் இல்லாத, இந்த நோஞ்சான் மசோதாவை வாபஸ் பெற வேண்டும்; இல்லையேல், மீண்டும் போராட்டம் நடத்துவேன்' என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்."இனியும் நம்ப மாட்டேன்'இது குறித்து அவர் கூறியதாவது:இனிமேலும் நான், சோனியாவையும், பிரதமர் மன்மோகன் சிங்கையும் நம்ப போவதில்லை. இரண்டு ஆண்டுகளாகியும் அவர்களால், எனக்கு உறுதி அளித்தபடி மசோதா தயாரிக்க முடியவில்லை.சி.பி.ஐ.,யையும், சி.வி.சி.,யையும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விலக்க வேண்டும் என்ற என் கோரிக்கை, மதிக்கப்படவில்லை. மக்களை இந்த அரசு முட்டாளாக்க பார்க்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.பா.ஜ.,வும், புதிய லோக்பால் மசோதாவுக்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர், ரவிசங்கர் பிரசாத், ""சி.பி.ஐ., மத்திய அரசிடம் இருந்து விலக்கப்பட வேண்டும். லோக்பால் நியமனங்கள், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. அது போல உறுப்பினர் தேர்வு குழுவும், அரசிடம் இருக்கக் கூடாது. இந்த மசோதா, ராஜ்யசபாவில் விவாதத்திற்கு வரும் போது, எங்கள் எதிர்ப்பை பதிவு செய்வோம்,'' என்றார்
- நமது டில்லி நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அன்ன ஹசாரே தேர்தலில் நிற்க வழிமுறைகளை வகுக்க வேண்டும் அல்லது அவரது நம்பிக்கைக்கு உரிவர்களை கட்சி ஆரம்பிக்க வைக்க வேண்டும் லோக்பால் உறுப்பினர்களை யார் தான் நியமனம் செய்வது.அரசியல் சார்பு இல்லாதவர்களை நியமனம் செய்ய வேண்டும் என்ற கருத்து சரியானதே.ஆனால் இருக்கும் அரசு தானே மக்கள் சபை மூலமாக செய்ய முடியும் நீங்கள் அமைத்த அமைப்பே கருத்து மாறுபாடுடன் விளங்கும்போது நம் நாட்டு அரசியல் கட்சிகள் தேவைக்கேற்றபடி மாறிக் கொள்வர்.ஆட்சியில் ஓட்டை என்பார்கள் அவர்களோடு கூட்டணி வைப்பார்கள்
மிகவும் நெருக்கமாக இருந்து ஆட்சியிலும் பங்கு கொள்வர். பிறகு திடிரீன நெருக்கடி தருவார்கள் எக்கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும் எப்போது இருக்கின்ற விதிகளை ஒழுங்காக கடைபிடிக்க முன் வருவார்களோ அப்போதுதான் நம் நாடு முன்னேறும் இருக்கின்ற வழக்குகளை இழுத்தடிக்கும் பழக்கம் இருக்கும் வரை ,நடைபாதைகளை,சாலைகளை,நீர் ஆக்கிரமிப்புகளை கடை, வீடு,சிலைகள் ,தொழுகை இடம் என வைத்துக்கொண்டு ஏமாற்றுவதை மணல்,கல் கொள்ளை அடிப்பதை சரி செய்யும் வரை,கல்வி கூடங்களை இஷ்டப்படி சேர்க்கை செய்வதை தடுக்கும், வரை,,வரைபட விதிகளின் படி கட்டுமானம் கட்டுவதை கட்டாயமாக்கும் வரை அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை முறையாக கிடைக்காத வரை, நம் நாட்டில் எத்துனை மசோதாக்கள் கொண்டு வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது
இந்த அரசு எந்த சட்டம் கொண்டுவந்தாலும் அரசியல் வாதிகளை பாதுகாக்கும் வகைல தான் இருக்கும். அதனால் தான் இங்குள்ள பணக்காரர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு அரசியல் பிளாட்பாரம் வைத்து தங்கள் சொத்துகளை பாதுகாத்துகுவாங்க. இவுங்க போடுற சட்டம் அரசு அலுவலர்கள் சிபிஐ எல்லாம் இந்த அரசியல் வாதிகள் கட்டுபாட்டில்வைது கோலம் போடுவானுக படம் காட்டுவானுக்க.மக்கள் பணத்துல. இது தான் இன்றைய நாட்டு நடப்பு. இடைல இந்த நாரயணன் கொசு தொல்லையும் சகிதுக்கோணும்.
பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்னவென்றால் சாதாரணமாக இவர் சென்னை விமான நிலையத்தில்தான் எல்லாமே பேசுவதாக செய்திகள் வெளிவரும், முதன்முறையாக டெல்லியிலிருந்து பேசியிருக்கிறார்? ஒரு சந்தேகாம், இவர் மூன்று முறை கூறிவிட்டார் கூடங்குளம் மின்சாரம் பற்றி இது இந்த மடக் கடைசிக்குள் மின்சாரம் முழு அளவில் உற்பத்தி செய்யப்படும் என்று? மாதங்கள் ஆகிவிட்டன? லோக்பால் மசோதாவைப் பற்றீ தற்போதுதான் முதல் முறையாகப் பேசி இருக்கிறார்? முதலில் கூடன்குலமா அல்லது மசோதாவா? வந்தே மாதரம்
மேலே உள்ள படம் லோக்பாலை நாராயணசாமி உருட்டி போடுவது போல் உள்ளது. எதுவாக இருந்தாலும் சரி அதை முதலில் சட்டத்திற்கு கொண்டு வந்துவிட்டு பிறகு நடை முறைகளை பார்த்து 1 அல்லது 2 வருடம்களில் திருத்தங்கள் செய்யவேண்டும். அது தான் சரியான முறைப்பாடு. அதை விட்டுவிட்டு முதலிலே எண்ணை தேய்த்தால் தான் குளிக்கவே இறங்குவேன் என்று பிடிவாதம் பிடிப்பது தவறு .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.