சென்னை : சீருடைப் பணியாளர்களுக்கு முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட, "உங்கள் சொந்த இல்லம்' திட்டம், வெறும் கனவாகி வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்த விவரம் வருமாறு: காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில், சீருடைப் பணியாளர்களுக்காக, "உங்கள் சொந்த இல்லம்' திட்டத்தின் கீழ், 2,673 குடியிருப்புகள், இரண்டடுக்கு, மூன்று மற்றும் ஐந்தடுக்கு என, வெவ்வேறு வகையில் கட்டப்படவுள்ளன. குடியிருப்பு கட்டுவதற்கான விழா, முதல்வர் தலைமையில் நடந்தது.
திட்டத்திற்காக, போலீசாரிடம் விருப்ப மனு பெறப்பட்டது. ஒரு விண்ணப்பத்தின் விலை, 20 ஆயிரத்து, 100 ரூபாய். மனு கொடுக்க, துவக்கத்தில் போலீசார் அதிக அக்கறை கொள்ளவில்லை. சென்னை வடக்கு மண்டலத்தில் மட்டும், சொற்ப அளவில் மனுக்கள் விற்பனை ஆகின. இதனால் காவலர் வீட்டு வசதிக் கழகத்தினர், ஆங்காங்கே கூட்டம் நடத்தி, "வங்கி கடனை, அரசே ஏற்பாடு செய்து தரும்' என்றும், "சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும்' என்றும் கூறி, போலீசாரை சம்மதிக்க வைத்தனர். ஆனால் தற்போது, போலீசாரே தனியார் வங்கிகளில் கடன் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுவதால், முதல்வர் துவக்கி வைத்த, போலீசாருக்கான, "உங்கள் சொந்த இல்லம்' கனவாகி வருகிறது.
வடக்கு மண்டல காவலர்கள் சிலர் கூறியதாவது: துவக்கத்தில் குடியிருப்புக்கான பணம், சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்றும், ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தவிர, வீட்டுக்கான கடனை அரசே ஏற்பாடு செய்யும் எனவும் கூறினர். வீட்டுக்கான முன்பணமாக, சாதாரண காவலர்களுக்கு, 1.5 லட்ச ரூபாயும், காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு, 2 லட்ச ரூபாயாகவும், உதவி ஆணையர்களுக்கு, 2.5 லட்ச ரூபாயும் கட்ட வேண்டும் என்றனர். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும், 2,000க்கும் அதிகமானோர் விருப்ப மனுக்களை அளித்தனர். ஆனால் தற்போது முன்பணமாக, 4 முதல், 5 லட்சம் வரை கட்ட வேண்டும் என்றும், வீட்டுக்கான வங்கி கடனை, போலீசாரே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர். மேலும், இடத்திற்கான எந்த ஆவணங்களையும் தரவில்லை.
மனுக்களின் நகலை வைத்தே, தனியார் வங்கியில் கடன் பெற அறிவுறுத்துகின்றனர். இதை அடமானமாக வைத்து, தனியார் வங்கியில் எப்படி கடன் பெற முடியும்? தனியார் வங்கிகளில் போலீசாருக்கு கடன் என்றால், "காத' தூரம் ஓடும் நிலை இன்றும் உள்ளது. மேலும் தனியார் வங்கியில் குறைந்தபட்சம், 10 சதவீத வட்டியில் தான், கடன் பெற முடியும். இதனால் முதல்வர் துவக்கி வைத்த, போலீசாருக்கான சொந்த இல்லம், கனவு இல்லமாகி விட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால், "முடியவில்லை என்றால், விருப்ப மனுவையும், மனு கட்டணத்தையும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்' என்கின்றனர். இவ்வாறு போலீசார் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.