மதுரை : திருநெல்வேலி களக்காடு அருகே கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகள் கொலையான வழக்கில், 2 பேருக்கு கீழ்கோர்ட் விதித்த தூக்குத் தண்டனையை எதிர்த்து தாக்கலான மேல்முறையீடு வழக்கில், "போலீசாரின் விசாரணை
அதிருப்தி அளிக்கிறது. போலீசாருக்கு சட்டம் பற்றிய பொது அறிவு இல்லை என்பதை காட்டுகிறது,' என, மதுரை ஐகோர்ட் கிளை கடும் கண்டனம் தெரிவித்தது. களக்காடு மீனவன்குளம் ஜெயக்குமார், 45. அதேபகுதியை சேர்ந்தவர் காட்டுராஜா, 27. தன் மனைவிக்கும், ஜெயக்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக காட்டுராஜா சந்தேகமுற்றார். இந்த விரோதத்தில் 2007 ஏப்., 19 ல் ஜெயக்குமார், மனைவி சண்முகத்தாய், மகள்கள் இந்திரா, 10, சித்ரா, 8, ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.
இதில் ஈடுபட்டதாக காட்டுராஜா, வெட்டும்பெருமாள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 2 பேருக்கும் திருநெல்வேலி கோர்ட் தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர்கள், மேல்முறையீடு மனு செய்தனர்.
நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், எஸ்.நாகமுத்து முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் ஐ.சுப்பிரமணியன், கதிர்வேலு, வக்கீல் பிரபு ஆஜராயினர். டி.ஐ.ஜி., சுமித்சரண், எஸ்.பி., விஜயேந்திரபிதாரி மற்றும் டி.எஸ்.பி.,கள், இன்ஸ்பெக்டர்களும் ஆஜராயினர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வழக்கு விசாரணையை பார்க்கையில், போலீசாருக்கு சட்டம் பற்றிய பொது அறிவு இல்லை என்பதை காட்டுகிறது. நீதிபதிகளுக்கு சட்டம் குறித்து புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. போலீசாருக்கும் பயிற்சி அளிக்க டி.ஜி.பி.,யிடம் வலியுறுத்தியுள்ளோம். ஒரு வழக்கு எனில், விசாரணை அதிகாரியை எஸ்.பி., சரியாக கண்காணிப்பதில்லை. ஏட்டுவிடம் ஆவணங்களை தருகின்றனர். அவர் கூறுவதை வைத்து, அரசு வக்கீலும் வழக்கை கையாள்கிறார். பல வழக்குகளில், குற்றவாளிகள் விடுதலையாக இதுதான் காரணம். சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். ரோட்டில் நிற்பது, பாதுகாப்பு அளிப்பது மட்டும் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது என அர்த்தம் அல்ல. உண்மையான குற்றவாளிகளுக்கு கோர்ட் மூலம் தண்டனை பெற்றுத்தர வேண்டும். குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டால், சமுதாயத்திற்கு பாதிப்பு ஏற்படும் என போலீசார் உணர வேண்டும். வழக்கில், அரசு வக்கீலின் கேள்விகளுக்கு, விசாரணை அதிகாரிகளால் விளக்கம் தர முடியவில்லை. போலீசாரின் மோசமான விசாரணை அறிக்கையின் அடிப்படையில், அரசு வக்கீலின் பலவீனமான வாதத்தால் குற்றவாளிகள் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது. வழக்கில் சாட்சிகளை சேர்த்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது மட்டும் விசாரணை என போலீசார் நினைக்கின்றனர். போதிய பயிற்சி இன்மையை இது காட்டுகிறது. இவ்வழக்கில், கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்துள்ளனர். போலீஸ் விசாரணையில், ஏராளமான ஓட்டைகள் உள்ளன. சாட்சிகளையும் முழுமையாக விசாரிக்கவில்லை. ஒரு குற்றவாளி கோர்ட்டில் சரணடைந்த பின், அவர் சம்பந்தப்பட்டுள்ளார் என விசாரணை அதிகாரிக்கு தெரிந்துள்ளது. போலீசாரின் விசாரணை அதிருப்தி அளிக்கிறது. இது மாதிரி விசாரணையை எங்கள் பணிக்காலத்தில் சந்தித்ததில்லை. கீழ்கோர்ட் உத்தரவை ரத்து செய்வது என்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு அநீதியை ஏற்படுத்தும். கோர்ட் மீது நம்பிக்கை இன்மையை ஏற்படுத்தும். வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும். ஏ.டி.எஸ்.பி., மகேந்திரனிடம் அனைத்து ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும். தேவையான வசதிகளை டி.ஐ.ஜி., செய்ய வேண்டும். சுதந்திரமான விசாரணை மேற்கொண்டு 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆயுள் மற்றும் தூக்குத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வழக்குகள் விசாரணைக்கு வரும்போது, பொறுப்பான அதிகாரிகள் அரசு வக்கீலுக்கு உதவுமாறு டி.ஜி.பி., உத்தரவிட வேண்டும். கொலை, பாலியல் பலாத்
காரம் போன்ற கடும் குற்ற வழக்குகள், கோர்ட்டில் விசாரணைக்கு வரும்போது டி.ஐ.ஜி.,- எஸ்.பி.,கள் கண்காணிக்க வேண்டும். விசாரணை ஏப்., 19 க்கு தள்ளிவைக்கப்படுகிறது, என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.