தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம், டெல்டா மாவட்டங்களில், அதிகளவில், பண்ணை குட்டைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். காவிரி நீரை நம்பியே, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செய்யப்படுகிறது. ஆனால், காவிரியில் தண்ணீர் திறந்துவிடாமல்,
கர்நாடகம் முரண்டு பிடிப்பது வழக்கமாகிவிட்டது. இதனால், டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பெரிதும்
பாதிக்கப்படுகிறது. கடந்தாண்டு, காவிரியில் இருந்து, கர்நாடகம் வழக்கம்போல் தண்ணீர் தர மறுத்ததால், குறுவை சாகுபடி பாதித்தது. இதோடு, வடகிழக்கு பருவமழையும், ஏமாற்றியதால், சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது. பாசனத்திற்கான, நீர் ஆதாரங்களில் தண்ணீர் இல்லாததால், இவ்வாண்டும், குறுவை சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது.
வாழ்வாதாரம் பாதிப்பு : இதனால், டெல்டா மாவட்ட விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய கூலி தொழிலாளர்கள், வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு செல்ல முடிவெடுத்து உள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில், வரும் காலங்களில், சாகுபடி நடக்க வேண்டும் என்றால், அதற்காக, இப்போதே, அரசு பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக, நீர் மேலாண்மை திட்டங்களை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்.
இதற்காக, அரசு தரப்பில், பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டாலும், அவற்றை பயன்படுத்தி, முறையாக பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு அனைத்து ஆட்சியிலும் உள்ளது. எனவே, இவ்விஷயத்தில், இந்தாண்டு முதல், முதல்வர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
விவசாயிகள் எதிர்பார்ப்பு : முதற்கட்டமாக, டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில், பண்ணை குட்டைகளை, அதிகளவில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மாவட்ட கலெக்டர்களிடம், இதுகுறித்து விவசாயிகள் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர். தற்போது, சாலை அமைத்தல், குளம் சீரமைப்பு, வாய்க்கால் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம், பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என, விவசாய சங்கங்கங்களின் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் பணிகளை மேற்கொள்வதால், வறட்சியால் வருமானம் இழந்துள்ள விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும்.இதன் மூலம், குடும்பத்திற்கான நிதியை திரட்டிக்கொள்ளவாய்ப்பு உருவாகும்.
இதுகுறித்து டெல்டா மாவட்ட விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துபோனதால், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மட்டுமே, விவசாய தொழிலாளர்களுக்கு வருமானம் தந்து வருகிறது. ஆனால், 100 நாட்கள் மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதால், அதன்பின், தொழிலாளர்களுக்கு வருவாய் கிடைக்காது. எனவே, பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை, இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனால், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு வருவாய் கிடைப்பதுடன், வரும் காலங்
களில், சாகுபடிக்கு தேவையான நீரும் கிடைப்பதற்கு வாய்ப்பு உருவாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.