தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி, "தானே' புயலில் பாதித்த முந்திரி விவசாயிகளுக்கு, மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைத்துத் தராததால், உற்பத்தி செய்யப்பட்ட, ஏழு லட்சம் வீரிய ரக முந்திரி கன்றுகள் கருகி வருகின்றன.
கடந்த, 2011 டிச., 30ம் தேதி வீசிய, தானே புயலில், கடலூர் மாவட்டத்தில், 73 ஆயிரத்து, 750 ஏக்கர் முந்திரி மரங்கள் முறிந்து சேதமடைந்தன. முந்திரி விவசாயிகளின் மறு வாழ்விற்காக, 725 கோடி ரூபாய் ஒதுக்கி, சிறப்பு திட்டங்களை முதல்வர் ஜெ., கடந்த பிப்., 4ம் தேதி அறிவித்தார். "ஹெக்டேருக்கு, 9,000 ரூபாய் இழப்பீடு; சேதமடைந்த மரங்களை வெட்டி அகற்ற, ஹெக்டேருக்கு, 25 ஆயிரம் ரூபாய்; 20 லட்சம் வீரிய ரகம், வி.ஆர்.ஐ., - 3 ஒட்டு ரக முந்திரி கன்றுகள் வழங்குவது; பாசனத்திற்கு ஆழ்குழாய் கிணறு தனி நபருக்கு, 50 சதவீதமும், கூட்டுக் குழுவிற்கு, 75 சதவீதம் மானியம் வழங்கப்படும்' என, கூறியிருந்தார். சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க, 75 சதவீதம் மானியம், முந்திரி கன்றுகளை, ஐந்தாண்டிற்கு பராமரிக்க, ஊக்கத் தொகை மற்றும் ஐந்தாண்டிற்கு வருவாய் ஈட்டும் வகையில், இலவசமாக ஊடு பயிர் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இந்த சிறப்பு திட்டத்தில், முதலாண்டில், 390 கோடி ரூபாய் செலவிடப்படும் எனவும்; அதில், முந்திரி விவசாயிகளின் பாசன வசதிக்காக, ஆழ்குழாய் அமைக்க, 27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், முதல்வர் அறிவித்தார். அதன்படி, விருத்தாசலத்தில் உள்ள முந்திரி மண்டல ஆராய்ச்சி நிலையம், தோட்டக்கலைத் துறை பண்ணை மற்றும் தனியார் பண்ணைகளில், 20 லட்சம் வீரிய ரக முந்திரி கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டன; இவற்றில், ஏழு லட்சம் வீரிய ரக முந்திரி கன்றுகள், விவசாயிகளிடம் கொடுக்கப்பட்டன. முதல்வரின் அறிவிப்பால், நம்பிக்கை கொண்ட முந்திரி விவசாயிகள் பலர், தங்கள் நிலத்தில் புயலில் தப்பிய மரங்களையும் வெட்டி அகற்றி, அரசு வழங்கும் வீரிய ரக முந்திரிக் கன்றுகள் நட முன் வந்தனர். மாவட்டத்தில், 4,000 ஏக்கரில் முழுமையாகவும், 17 ஆயிரம் ஏக்கரில் பகுதியாக, மரங்கள் வெட்டி, வீரிய ரக முந்திரி கன்றுகள் நடுவதற்கு முன்பாக, பாசன வசதி ஏற்படுத்த, ஆழ்குழாய் கிணறு அல்லது சொட்டுநீர் பாசன வசதி ஏற்படுத்த விண்ணப்பித்துள்ளனர். இதுவரை, எந்த விவசாயிக்கும் ஆழ் குழாய் கிணறு அமைத்து தரப்படவில்லை. முதல்வர் அறிவித்து ஓராண்டாகியும், இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை. இதன் காரணமாக, இத்திட்டம் செயல்படுத்தாமல் உள்ளது. அரசின் அறிவிப்பை நம்பி, உயிர் மரங்களையும் வெட்டி அகற்றி விட்டதால், வாங்கிய மரக்கன்றுகளையும் நடாமல், இந்தாண்டு கிடைக்க வேண்டிய வருவாயும் இழந்து, முந்திரி விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.