சென்னை : பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில்,நேற்று, சளி, இருமல் பிரச்னைக்கு, அதிகம் பேர் சிகிச்சைக்கு வந்திருந்தனர். இதயம் மற்றும் நரம்பியல் கோளாறுகளுக்கு, மேல்சிகிச்சை தேவைப்பட்டோர், அரசு பொது மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைக்கப்பட்டனர். சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், நேற்று முன்தினம் செயல்பட துவங்கிய, பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில், நேற்று, 250 வரை, சிகிச்சை பெற்றனர்.
இவர்களில் பெரும்பாலோர், "தங்களுக்கு, நீண்ட நாட்களாக உள்ள, சளி, இருமல், மூச்சு திணறல் பிரச்னைக்கு சிகிச்சை தர வேண்டும்' என, மருத்துவர்களிடம் கூறினர். இதயம் மற்றும் நரம்பியல் கோளாறுகளுக்கு, பரிந்துரை சிகிச்சை அளிக்கப்படும் என, அறிவித்தப்பின்பும், சளி, இருமலுக்கு சிகிச்சை கேட்கிறார்களே என, நொந்துக் கொண்ட மருத்துவர்கள், வேறு வழியின்றி அவர்களுக்கும் சிகிச்சை அளித்தனர். இதயம் மற்றும் நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு, உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட வேண்டியவர்கள், ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைக்கப்பட்டதால், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். வில்லிவாக்கம், சிட்கோ நகரைச் சேர்ந்த செல்வி கூறுகையில், ""சளி, இருமல் சிகிச்சைக்காக, காலை, 8:00 மணிக்கு, மருத்துவமனைக்கு வந்தேன். பரிசோதித்த மருத்துவர்கள், சத்து மாத்திரையை மட்டும் கொடுத்தனர். திரும்ப கேட்டபின், சளிக்கான மாத்திரையை கொடுத்தனர்,'' என்றார்.
வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கல்யாணி கூறுகையில், ""இரண்டு வாரங்களாக, மூச்சு திணறலுடன், கைவலியும் உள்ளது.தகவல் அறிந்து இங்கு வந்தேன். கைவலிக்கு மருந்து இல்லை எனக் கூறி, மூச்சுத் திணறலுக்கு மட்டும் ஒரு மாதத்திற்கு மாத்திரை தந்தனர்,'' என்றார்.
கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் கூறியதாவது: ஒரு ஆண்டிற்கு மேலாக, வலது கைப் பகுதியில் நரம்பு கோளாறு உள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து நிலையில், பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தேன். இங்கு, தற்போதைக்கு உள்நோயாளியாக சிகிச்சைப் பெற முடியாது என, மருத்துவர்கள் கூறியது ஏமாற்றமாக உள்ளது. மேல்சிகிச்சைக்காக, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்துள்ளனர்.
மருத்துவக் கல்வி இயக்குனர் வம்சதாரா கூறியதாவது: பொதுமக்கள் வசதிக்காக, பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு, காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 வரையிலும், மாலை, 3:00 மணி முதல், 5:00 வரையிலும் இயங்கும். நோயாளிகளின் எண்ணிக்கையை பொருத்து, கூடுதல் சிகிச்சை அறைகள் திறக்கப்படும். இங்கு, எந்தெந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என அறிந்து, பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்தால் நல்லது. இவ்வாறு வம்சதாரா கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.