சென்னை: ஐந்தாண்டுகளுக்கு மேல், நத்தம் புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு பட்ட வழங்கும் திட்ட காலத்தை, மேலும் நீட்டிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, 2012 செப்., 30ல் முடிந்த, பட்ட வழங்கும் திட்ட காலம் நீட்டிக்கப்படுகிறது. கிராமங்கள், நகராட்சி, மாநகராட்சியில், பல ஆண்டுகளாக, நத்தம் புறம்போக்கில் வசிப்போர், பட்டா இல்லாமல் உள்ளனர். இதனால், சொத்தின் உரிமை பறிபோவதோடு, பெருவாரியான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நத்தம் புறம்போக்கில், ஐந்தாண்டுகளுக்கு மேல் தொடர்ந்து வசிப்போருக்கு, கிராமங்களில் மூன்று சென்ட், நகராட்சியில் இரண்டு சென்ட், மாநகராட்சியில் ஒரு சென்ட் என, குடியிருப்பு நிலங்களுக்கு, பட்டா அளிக்கப்படும் என, அரசு அறிவித்தது. இத்திட்டத்தில், ஆண்டுதோறும், ஒரு லட்சம் பட்டா வழங்கப்படும் என்றும், 2012 செப்., 30ம் தேதி வரை, இதற்கான கெடுவும் நிர்ணயிக்கப்பட்டது.
விரைவில் ஆணை : அரசின் இந்த நடவடிக்கையின் மூலம், பட்டா அளிக்கப்பட்டது எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை. ஆயிரக்கணக்கானோர் இன்னும் பட்டா பெற முடியாமல் உள்ளனர் என, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, பட்டா வழங்கும் காலத்தை மேலும் நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து, கோட்டாட்சியர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய்த் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பேசியதாவது: பட்டா இல்லாமல், தற்கொலைக்கு கூட மக்கள் செல்கின்றனர். எனவே, நத்தம் புறம்போக்கில் வசிப்போருக்கு பட்டா வழங்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும். பட்டா வழங்கும் காலம், 2012 செப்., 30ம் தேதியோடு முடிந்து விட்டது. ஆனால், பல ஆயிரம்பேர் பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளதால், பட்டா வழங்கும் காலத்தை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. விரைவில், இதற்கான ஆணை வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
வழக்குக்காக... : கோர்ட்டில் வழக்குள்ளதை சுட்டிக் காட்டி, பட்டா மாறுதல் செய்வதை மறுக்கக் கூடாது. கோர்ட்டின் தீர்ப்பு வரும் வரை, பட்டா மாறுதல் செய்ய தடையில்லை. கோர்ட் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வருகிறதோ, அதை கொண்டு, மற்றொரு பட்டா மாறுதலை செய்யலாம் எனவும், கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. மாநிலத்தின் பல பகுதிகளில் அரசு சர்வேயர் பணியிடம் காலியாக உள்ளன. இதை நிரப்ப, 1,000 சர்வேயர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், 400 பேர்தான், பணியில் சேர்ந்துள்ளனர். மற்றவர்கள்,பணியில் சேரவில்லை. எனவே, சர்வேயர் பணியை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என, வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
15 நாளுக்கு ஒரு கூட்டம் : சொத்துக்களை பதிவு செய்வது மற்றும் பட்டா வழங்குவது குறித்து, பதிவுத்துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் இணைந்து செயல்பட வேண்டும். இந்த, ஒருங்கிணைப்பு இல்லாததால், பட்டா வழங்குவதில் பெரும் பின்னடைவு நிலவுகிறது. சொத்துக்களை பதிவு செய்வது தொடர்பாக, பதிவுத் துறை ஒரு புள்ளி விவரத்தையும், வருவாய் துறை ஒரு புள்ளி விவரத்தையும் கொண்டுள்ளனர். இதனால்,சொத்துக்கள் தொடர்பான வில்லங்கங்கள் அதிகரித்து வருகிறது. யார் வேண்டுமானலும், ஒரு சொத்தை ஆவணப்படுத்திக் கொள்ளும் நிலை, தற்போது நிலவுகிறது.
எனவே, சொத்துக்கள் பதிவு, பட்டா வழங்குதல் குறித்து, வட்டம், கோட்டம், மாவட்ட அளவில் பதிவுத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் கூட்டத்தை,15 நாள்களுக்கு ஒரு முறை நடத்தி, தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என, வருவாய் அதிகாரிகளுக்கு, அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.