வறட்சியால் பாதித்த விவசாய நிலங்களில், பார்த்தீனியம், வேலிகாத்தான் செடிகள் முளைத்து வருவதால், தொடர்ந்து விவசாயம் செய்யமுடியுமா என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர். வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால், மாநிலம் முழுவதும், 25 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, கரும்பு, எண்ணெய்வித்துக்கள், பருப்பு வகை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், 11.20 லட்சம் ஏக்கரில் நடந்த சம்பா சாகுபடி, 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட மற்ற பயிர்கள் பாதிப்பு அடைந்துள்ளன. வறட்சியால், விவசாயத்தை இழந்த விவசாயிகள், அரசின் நிவாரணத்தை எதிர்பார்த்து உள்ளனர். கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என்பதால், குறுவை சாகுபடியும் நடக்க வாய்ப்பில்லை. எனவே, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரண உதவிகளை மத்திய அரசு வழங்கவேண்டும் என, விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
வறட்சியால் பாதித்த பகுதிகளை சேர்ந்த, கூலித்தொழிலாளர்கள் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர், வெளிமாநிலங்களுக்கு வேலைக்கு செல்ல தயாராகியுள்ளனர். இதனால், விவசாயிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர். விவசாயிகளுக்கு மேலும் கவலையளிக்கும் வகையில், சாகுபடி பாதித்த நிலங்களில்,பார்த்தீனியம், வேலிகாத்தான் போன்ற செடிகள் வளரத்துவங்கி யுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில், வேலிகாத்தான் செடிகள் அதிகளவில் வளர்ந்து வருகின்றன. நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இவற்றோடு, பார்த்தீனியம் செடிகள் வளரத்துவங்கியுள்ளது. சமீபத்தில், நாகை மாவட்டத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில், இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் முறையிட்டுள்ளனர்.
அதற்கு கலெக்டர், பார்த்தீனியம் செடி இருந்தால், அவை உடனடியாக அகற்றப்படும் என, உறுதியளித்துள்ளார்.வறட்சி பாதித்த விருதுநகர், கன்னியாகுமரி, சிவகங்கை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், பார்த்தீனியம் மற்றும் வேலிகாத்தான் செடிகள் வளரும் அபாயம் உள்ளது. இவற்றை உடனுக்குடன் அகற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்துறையினர் தனிக்கவனம் செலுத்தவேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்கின்றனர்.
இதுகுறித்து வேளாண் ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியதாவது: விவசாய நிலங்களுக்கு கேடு விளைவிப்பதில், வேலிகாத்தான், பார்த்தீனியம் முன்னுரிமை வகிக்கின்றன. இவை வளர்ந்துவிட்டால், அந்த நிலங்களில் சாகுபடி செய்ய முடியாதபடி, மண்ணின் தன்மை விஷமாகிவிடும். அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட பார்த்தீனியம் செடிகள் கார்த்திகை மாதத்திற்கு பின், அடர்ந்து வளரக்கூடியது. இவை பூந்தாதுக்களை அதிகமாக உற்பத்தி செய்வதால், அவை காற்றில் கலந்து மனிதன், விலங்குகளின் சுவாச குழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது, விளைநிலங்களை மட்டுமின்றி வளிமண்டலத்தையும் பாதிக்கும். பல தாவரங்கள் அடியோடு அழிவதற்கும் பார்த்தீனியம் செடிகள் காரணமாக அமைகின்றன. வறட்சியிலும், நிலத்தின் அடியில் இருந்து தண்ணீரை உறிஞ்சி வரும் வேலிகாத்தான் செடிகள், விவசாய நிலங்களையும் பாதிக்கிறது.
கேரள மாநில வனத்துறை மூலம், வேலிகாத்தான் மரங்களை அழிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால், கேரளாவில் இந்த மரங்களை வளரவிடுவது இல்லை. மரத்தை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ, அதைவிட வேலிகாத்தானையும், பார்த்தீனியத்தையும் வெட்டி அகற்றுவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
-நமது நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.