தாம்பரம் : சகோதரருடன் காரில் வந்த, காஞ்சிபுரம் மாவட்டம், சேத்துப்பட்டு ஊராட்சித் தலைவர், மர்ம கும்பலால் நேற்று வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம், தாம்பரம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சேத்துப்பட்டு ஊராட்சித் தலைவர் சங்கர், 50; தி.மு.க.,வைச் சேர்ந்தவர். இவரது மனைவி தமிழ்ச்செல்வி, 42. இவர்களது மகன் கவுதம், 13; தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார்.
சங்கர், சேத்துப்பட்டில் கல் குவாரி நடத்தி வந்தார்; ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். சங்கருக்கும், அவரது உறவினர் ஆனந்த் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி, சங்கரின் காரில் அவரது சகோதரர் வாசு, மாவட்ட கனிம வளத்துறை அதிகாரி சிவகுமார், அவரது உதவியாளர் சிவலிங்கம், கார் ஓட்டுனர் கார்த்திகேயன் ஆகியோர் வந்தனர்.
மலைப்பட்டு என்ற இடத்தில் வந்த போது, மர்ம கும்பல் அந்த கார் மீது வெடிகுண்டு வீசியது. இதில், கார் ஓட்டுனர் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மாவட்ட கனிம வளத்துறை அதிகாரி சிவகுமார், சிவலிங்கம், வாசு ஆகியோர் படுகாயமடைந்தனர். காரில் வராததால் சங்கர் உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக, ஐந்து பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளி ஆனந்த் தலைமறைவாக இருந்தார். சங்கர் உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவரை எச்சரிக்கையுடன் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். சங்கர் தனது பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கியும் வைத்திருந்தார்.
இந்நிலையில், சங்கர் எங்கு சென்றாலும், தனக்கு சொந்தமான காரை பயன்படுத்தாமல், தினம் ஒரு வாடகை காரை பயன்படுத்தி வந்தார். நேற்று காலை, சுங்குவார்சத்திரத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் ஒன்றில், "இன்டிகோ' காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, சங்கர் தன் சகோதரர் வாசுவுடன் கிழக்கு கடற்கரை சாலைக்கு சென்றார்.
அங்கு பணியை முடித்துவிட்டு, காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காரின் பின்பக்க இருக்கையில் சங்கரும், வாசுவும் அமர்ந்திருந்தனர். கார் முடிச்சூர் - மணிமங்கலம் சாலையில் மாலை 3:30 மணிக்கு வந்து கொண்டிருந்தது. பி.டி.சி., குவாட்டர்ஸ் கடந்து வளைவில் கார் திரும்பிய போது, அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல், கார் மீது நாட்டு வெடி குண்டுகளை வீசியது.
இதில், கார் ஓட்டுனர் முருகன் நிலைதடுமாறி காரை நிறுத்தினார். கார் நின்றதும், மர்ம கும்பல், சங்கர் அமர்ந்திருந்த இருக்கை மீது மற்றொரு வெடிகுண்டை வீசினர். இந்த குண்டு வெடித்ததும், சங்கரும், வாசுவும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். சங்கரை காரில் இருந்து கீழே இறக்கிய கொலை வெறி கும்பல், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. சங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார்; வாசு படுகாயமடைந்தார்.
கொலை கும்பல் வந்த இரண்டு இருசக்கர வாகனங்களில் ஒன்று, சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது. ஒரு பைக்கில் நால்வர் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த காஞ்சிபுரம் எஸ்.பி., சேவியர் தன்ராஜ், ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி., கஜேந்திரகுமார் மற்றும் மணிமங்கலம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சங்கரின் உடலை பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த வாசு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த கொலைக்கும், மலைப்பட்டில் நடந்த கொலை வெறி தாக்குதலுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர் விசாரணை நடந்து வருகிறது.
சிதறி கிடந்த பல லட்சம் ரொக்கம்! : சங்கர் வந்த டிராவல்ஸ் காரின் பின்பக்கம், அவரது கைத்துப்பாக்கியும், பல லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் சிதறிக் கிடந்தன; சாலையிலும் ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடந்தன. பள்ளத்தில் பைக் விழுந்திருந்த இடத்திலும் ரொக்கம் மீட்கப்பட்டது. போலீசார் அவற்றை கைப்பற்றினர். சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த கட்டடத்தில், கத்தி ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.
மூன்று மாதமாக நோட்டம்! : காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊராட்சித் தலைவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வந்த நிலையில், மாவட்ட நிர்வாகம், கொலை மிரட்டல் உள்ள ஊராட்சித் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. சில ஊராட்சித் தலைவர்கள் கொடுத்த புகாரை அடுத்து, சிலரை கைதும் செய்தது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம், சங்கர் கார் மீது வெடிகுண்டு வீசப்பட்டதும், சங்கரை உஷாராக இருக்குமாறு போலீசார் எச்சரித்தனர். இந்த சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு, சங்கர் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக நோட்டமிட்டு, இந்த கொலையை கொலை வெறி கும்பல் அரங்கேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.