சேலம் : சேலத்தில், கேபிள் ஆபரேட்டர்கள், அரசுக்கு மாதாந்திர கட்டணத்தை செலுத்தாததால், மாவட்டம் முழுவதும், நேற்று காலை அரசு கேபிள் ஒளிபரப்பு சேவை நிறுத்தப்பட்டது. உயர் அதிகாரிகள் எச்சரிக்கையையடுத்து, மீண்டும் ஒளிபரப்பு துவங்கியது. தமிழகத்தில், அரசு கேபிள், "டிவி' கார்ப்பரேஷன் மூலம், இரண்டு கோடி இணைப்பு பயன்பாட்டில் உள்ளன. மாதந்தோறும், ஒரு இணைப்புக்கு, 70 ரூபாய் வீதம் வசூலிக்கப்படுகிறது. வாடிக்கையாளரிடம் வசூலிக்கும் தொகையில், 20 ரூபாயை அரசுக்கு செலுத்த வேண்டும். பெரும்பாலான கேபிள் ஆபரேட்டர்கள், தங்களுடைய இணைப்பு எண்ணிக்கை அடிப்படையில், கட்டணத்தை செலுத்தி விடுகின்றனர். பணம் செலுத்தாத பட்சத்தில், ஆபரேட்டர் சிலரின், கேபிள் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில், 2.95 லட்சமாக இருந்த, கேபிள் இணைப்பு, தற்போது, 4.50 லட்சமாக உயர்ந்துள்ளது. பணம் செலுத்தாத ஆபரேட்டர்களின் இணைப்புகளை, நேரடியாக சென்று துண்டிக்கும் பணியை, கேபிள் தாசில்தார் மேற்கொள்வதில்லை. அலுவலகத்தில் இருந்து கொண்டே, பணம் செலுத்திய ஆபரேட்டரின் இணைப்புகளையும், துண்டித்து விடுகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், நேற்று காலை, 11:00 மணியளவில், மாவட்டம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு திடீரென நிறுத்தப்பட்டது. பொதுமக்கள், கேபிள் ஆபரேட்டர்களை முற்றுகையிட்டு, ஒளிபரப்பை வழங்கக்கோரி வலியுறுத்தினர். இதனால், கேபிள், "டிவி' கார்ப்பரேஷன் தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோருக்கு புகார் பறந்தது. தொடர்ந்து, நிர்வாக இயக்குனர் எச்சரிக்கையை அடுத்து, கேபிள் சேவை மீண்டும் வழங்கப்பட்டது.
சி.டி.என்., கேபிள் நிறுவனத்தைச் சேர்ந்த ரமேஷ் கூறியதாவது: காலை முதல் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. பணம் செலுத்தாத ஆபரேட்டர்களின் இணைப்புகளை துண்டிக்காமல், மொத்தமாக மாவட்டம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பை நிறுத்தியுள்ளனர். தாசில்தாரிடம் கேட்டால், இல்லாத காரணங்களை கூறுகிறார், என்றார்.
கேபிள் தாசில்தார் சந்திரசேகரனிடம் கேட்டபோது, ""கேபிள் கட்டுப்பாட்டு அறையில் உள்ள, "ஏசி' மிஷின் பழுதாகி விட்டது. அதை சரிசெய்வதற்காக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. பணம் செலுத்தாத ஆபரேட்டர்களின் இணைப்புகள் கட்டாயம் துண்டிக்கப்படும்,'' என்றார்.
"சேலம் மாவட்டத்தில், கேபிள் ஆபரேட்டர்களுக்கும், தாசில்தாருக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. குறிப்பிட்ட ஒரு கேபிள் நிறுவனத்துடன், நட்பை வளர்த்து, காரியம் சாதித்து வருகிறார். சாதாரண கேபிள் ஆபரேட்டர்கள் பலர் பாதிப்படைகின்றனர். அரசு கேபிள், "டிவி' நிர்வாக இயக்குனர், இப்பிரச்னையில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆபரேட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.