புதுக்கோட்டை: அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி, பெற்றோர்களுடன், மாணவிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அரிமளம் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சேர்ந்த, 400 மாணவிகள் படித்து வருகின்றனர். 18 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் இப்பள்ளி மாணவிகள் ஆண்டுதோறும், அதிக மதிப்பெண்கள் பெற்று, கல்வி மாவட்ட அளவில் சாதனை படைத்து வருகின்றனர். இவர்கள் ப்ளஸ்1 படிக்க வேண்டுமானால், அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு (கோ-எஜூகேஷன்) செல்ல வேண்டியுள்ளது.
எஸ்.எஸ்.எல்.ஸி., வரை மகளிர் பள்ளியில் படித்தபின், மேல்நிலை வகுப்புக்காக, இருபாலர் பள்ளிக்கு சென்று படிப்பதை மாணவிகள், மட்டுமின்றி பெற்றோர்களும் விரும்பவில்லை. இதனால் மாணவிகள் பலர் புதுக்கோட்டை, திருமயம், அறந்தாங்கி ஆகிய தொலைதூர பகுதிகளுக்கு சென்று, ப்ளஸ் 1, ப்ளஸ் 2 படிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தொலைதூர பகுதிகளுக்கு சென்று படிக்க விரும்பாத மாணவிகள், எஸ்.எஸ்.எல்.ஸி.,யோடு படிப்பை இடையில் நிறுத்துகின்ற அவல நிலையும் தொடர்கிறது.
மாணவிகளின் நலன்கருதி, அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தவேண்டும் என, மாவட்டக் கலெக்டர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் சார்பில், கடந்த, 5 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. கல்வித்துறையின் வேண்டுகோளுக்கு இணங்க, உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில், இரண்டு லட்சம் ரூபாய் பங்களிப்பு தொகையும் செலுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, 2011ம் கல்வியாண்டில் அரிமளம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என, மாவட்ட கல்வித்துறையினர் உறுதியளித்திருந்தனர். ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும், , உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த மாணவிகள் அனைவரும், நேற்று வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, பெற்றோர்களுடன் இணைந்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளியின் முன்பு நடந்த இப்போராட்டத்தால் நேற்றுக்காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. போராட்டத்தை கைவிடுமாறு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தியும், ஏற்க மறுத்த மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
பெண் குழந்தைகளுக்கு கல்வி கட்டாயம் என்பதற்காக, ஒருபக்கம் நாடு முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், மறுபக்கம் கல்வித்துறையின் அலட்சியப் போக்கால் மேல்நிலை கல்விக்காக மாணவிகள் வீதியில் இறங்கி போராடவேண்டிய கட்டாய நிலையும் உள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, கலெக்டர் மனோகரன் ஆகியோர் இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.ஸி.,யோடு படிப்பை நிறுத்த வேண்டிய சூழலுக்கு ஆளாகாமல் இருக்க, உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மாணவிகளின் பெற்றோர் விரும்புகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.