கரூர்: ""குடிநீர் கட்டணம் செலுத்தாமல் காலம் தாழ்த்தினால், இணைப்பு துண்டிக்கப்படும்'' என, கரூர் நகராட்சி கூட்டத்தில் தலைவர் செல்வராஜ் தெரிவித்தார்.
கரூர் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் செல்வராஜ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
கமலா (அ.தி.மு.க.,): நகராட்சி பகுதியில் உள்ள நாய்களை பிடித்து அறுவை சிகிச்சை செய்த பிறகு, அதே இடத்தில் விடாமல், வேறு இடத்தில் விட வேண்டும். (கூட்டத்தில் பலத்த சிரிப்பு)
தலைவர்: நாய்களை பராமரிப்பது குறித்து, சில சட்ட விதிமுறைகள் உள்ளது. அதை மீறி செயல்பட முடியாது.
நாராயணன் (தி.மு.க.,): குடிநீர் சப்ளை செய்வதில், இன்னும் நிலைமை சீரடையவில்லை. இதனால், பொதுமக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை.
துணைத்தலைவர்: 68 கோடி ரூபாய் மதிப்பில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. விரைவில் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தலைவர்: நீங்கள் (நாராயணணை பார்த்து) வார்டுக்கு ஒழுங்காக செல்வது இல்லை. இதனால், வார்டில் நடக்கும் பணிகள் உங்களுக்கு தெரியவில்லை. உங்கள் வார்டில் கடந்த வாரம் அமைச்சர் செந்தில்பாலாஜி, நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.
நாராயணன் (தி.மு.க.,): மக்களுக்கு தேவையான பணிகளை செய்ய தவறிவிட்டீர்கள். இதனால் வார்டுக்குள் செல்ல முடியவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், அ.தி.மு.க., வெற்றி பெற்ற வார்டுகளுக்குதான் அதிக நிதி ஒதுக்கியுள்ளீர்கள். நீங்கள் ஒழுங்காக பணிகளை செய்தால், நான் காலரை தூக்கி விட்டு கொண்டு செல்வேன்.
(அப்போது கூட்ட அரங்கில் தி.மு.க., கவுன்சிலருக்கும், அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது)
ஸ்டீபன்பாபு (காங்.,): கரூர் நகராட்சிக்கு வரவேண்டிய வரி நிலுவை அதிகமாக உள்ளது. அதை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்: குடிநீர் வரியை செலுத்த விட்டால், இணைப்பு துண்டிக்கப்படும். இன்னும் மூன்று மாதங்களில், நகராட்சிக்கு வரவேண்டிய வரியினங்கள் முழுமையாக வசூலிக்கப்படும்.
ஜெகதீஸ் (காங்.,): எனது வார்டில் பல்வேறு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. காண்ட்ரக்டர்கள் சரிவர செயல்படாமல் உள்ளனர்.
தலைவர்: வேலைகளை விரைந்து முடிக்கப்படும். செயல்படாத காண்ட்ரக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சத்திய மூர்த்தி (ம.தி.மு.க.,): எனது வார்டில் பல லைட்கள் எரியவில்லை. புகார் தெரிவித்தால் அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை.
தலைவர்: விரைவில் அனைத்து பகுதிகளிலும் பழுதடைந்த பல்புகளுக்கு பதிலாக, புதிய பல்புகள் போடப்படும்.
காளியம்மாள் (அ.தி.மு.க.,): குடியரசு தின விழாவுக்கு, கவுன்சிலர்களுக்கு அழைப்பு வரவில்லை. ஆனால், நகராட்சி தரப்பில் செலவு செய்யப்பட்டுள்ளதாக, தீர்மானம் இடம் பெற்றுள்ளது.
தலைவர்: எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், நகராட்சி துணைத்தலைவர் உள்பட கவுன்சிலர்களுக்கு முறையான அழைப்பு வராததால், நானும் குடியரசு விழாவுக்கு செல்லவில்லை. வரும் காலத்தில், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காத வகையில் மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
அதிகரிக்கும் அய்யா கோஷம்!
கரூர் நகராட்சி கூட்டத்தில், நகராட்சி தலைவர் செல்வராஜை, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கூட அய்யா என மரியாதையாக அழைத்து பேசுவதில்லை. ஆனால், சமீப காலமாக தி.மு.க., காங்., ம.தி.மு.க., தே.மு.தி.க., உள்ளிட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் அய்யா, அய்யா என, வார்த்தைக்கு வார்த்தை மரியாதையுடன் அழைத்து பேசுகின்றனர். எதிர்க்கட்சி கவுன்சிலர்களின் ஐஸ் மழை பேச்சை கேட்டு, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சங்கடத்தில் நெளிகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.