அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், தனிநபர் கழிப்பறை கட்ட
கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.மத்திய அரசின் சுகாதார பாரத இயக்கம்
(நிர்மல் பாரத் அபியான்) திட்டத்தின் கீழ், எஸ்.சி., எஸ்.டி., சிறு மற்றும்
குறு விவசாயி, நிலம் அற்றவர்கள், மாற்று திறனாளிகள், பெண் குடும்ப தலைவி
ஆகியோருக்கு, தனி நபர் கழிப்பறை கட்டி தரப்பட உள்ளது. மத்திய, மாநில
அரசுகள் மானிய தொகையாக 5 ஆயிரத்து 700 , பயனாளிகள் தொகையாக 900 என, 6
ஆயிரத்து 600 ரூபாய் தளவாடச் சாமான்களுக்கும், கூலி தொகையாக 4 ஆயிரத்து 500
ரூபாய் சேர்த்து, ஒரு கழிப்பறை கட்ட 11 ஆயிரத்து 100 ரூபாய்
வழங்கப்படுகிறது. கழிப்பறையை மகாத்மா காந்தி தேசிய ஊரக
வேலை வாய்ப்பு
திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ளது. இதற்காக,அருப்புக்கோட்டை ஊராட்சி
ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ராமானுஜபுரம் ஊராட்சியில் 70, கஞ்சநாயக்கன்பட்டியில் 130 ,
சிதம்பரரபுரத்தில் 79 , தும்மகுண்டுவில் 148, சேதுராஜபுரத்தில் 114 ,
கோவிலாங்குளத்தில் 153 பேர் என, 694 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மற்ற ஊராட்சிகளில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கென வட்டார
ஒருங்கிணைப்பாளரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தலைமையில், ஊராட்சி
உதவியாளர்கள் கணக்கெடுக்கும் பணியில் உள்ளனர்.