ஒட்டன்சத்திரம்:
நகராட்சி கூட்டத்தை நடத்தாமலே, நடந்து முடிந்து விட்டதாக கூறியதற்கு
எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சி கமிஷனர்
ஜோதிக்குமாரை முற்றுகையிட்டனர். ஒட்டன்சத்திரம் நகராட்சி கூட்டம், நேற்று
காலை 10.30 மணிக்கு நடப்பதாக இருந்தது. தி.மு.க., கவுன்சிலர்கள் ஆறு பேர்
மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் மூவர், நகராட்சி தலைவர் பழனியம்மாள்
மற்றும் கமிஷனர் ஜோதிக்குமார் ஆகியோர் கவுன்சில் கூட்டத்தில் உட்கார்ந்து
இருந்தனர். விவாதம் நடத்தாமலேயே சிறிது நேரத்தில் கூட்டம் நடந்து
முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.,
கவுன்சிலர்கள், கமிஷனர் அறைக்கு சென்று அவரை முற்றுகையிட்டனர். பின்னர்
அவர் கார் முன்பு வாயில் கருப்புதுணி கட்டி அமர்ந்தனர். நகராட்சி தலைவர்
மற்றும் கமிஷனரை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்
செய்தனர்.நகராட்சி தலைவர் பழனியம்மாள்:
நகராட்சி கூட்டம் சரியாக 10.30
மணிக்கு தொடங்கியது. கூட்டம் நடத்த ஏழு கவுன்சிலர்கள் இருந்தால் போதும்.
அப்போது 12 கவுன்சிலர்கள் இருந்ததால் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.
அதற்கு பின்னர் தான் தி.மு.க., கவுன்சிலர்கள் வந்தனர். வருகைபதிவேட்டில்,
இரண்டு தி.மு.க., கவுன்சிலர்களே கையெழுத்து போட்டுள்ளனர்.நகராட்சி கமிஷனர்
ஜோதிக்குமார்:கூட்டம் நடத்த எனக்கு அதிகாரம் இல்லை. கூட்டத்தில்
கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்வது மட்டுமே என்னுடைய
வேலை.கவுன்சிலர் பாண்டியராஜன்(தி.மு.க.,):
இரண்டு மாதங்களாகவே நிர்வாக
சீர்கேடு நடந்து வருகிறது. பாதயாத்திரை பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து
தர 7 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளதாக கூறி உள்ளனர். இதில் ஊழல்
நடந்துள்ளது. 25 லட்சம் ரூபாய் செலவில் குடிநீரை சுத்திகரிப்பு செய்வதாக
கூறினர். இதுவரை நடக்கவில்லை. இதனை கவுன்சிலர் கூட்டத்தில் கேட்கலாம்
என்றால், வந்து உட்கார்ந்தவுடன் கூட்டம் முடிந்து விட்டதாக கூறிவிட்டனர்.
மக்கள் பிரச்னைகள் குறித்து பேச விடாமல் செய்கின்றனர். இதனால் முற்றுகை
ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம், என்றார்.