மதுரை: மதுரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில், குளறுபடிக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தயாராகிவரும் நிலையில், அதே அதிகாரிகளை மீண்டும் பணி அமர்த்த, மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. மாநகராட்சி வழங்கிய கட்டட அனுமதியில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. குறிப்பாக, கடந்த ஆட்சியில் வழங்கிய பெரும்பாலான கட்டட, வரைபட அனுமதிகள், விதிகளுக்கு மாறாகவும், அரசு உத்தரவுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ளது. 2,000 சதுர அடிக்குள் உள்ள வணிக கட்டடங்களுக்கும், 4,000 சதுரஅடிக்குள் உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு மட்டுமே, மாநகராட்சி அனுமதி வழங்கமுடியும். அதற்கு மேல் இருந்தால், உள்ளூர் திட்டக்குழுமம் மற்றும் அரசின் அனுமதி பெற வேண்டும். அதை மீறி, ஆயிரக்கணக்கான கட்டடங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக, ஆய்வில் தெரியவந்தது. இது தொடர்பாக, உள்ளூர் திட்டக்குழு தலைவரான கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நடவடிக்கைக்கு முன்வந்தார். முறைகேடாக அனுமதி பெற்ற கட்டடங்களுக்கு "சீல்' வைத்தார். கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கையை, உரிமையாளர்கள் எதிர்பார்க்கவில்லை. மாநகராட்சியிடம் பெற்ற அனுமதியை முன்வைத்து, கட்டட உரிமையாளர்கள் ஐகோர்ட்டில் மனு செய்தனர். விசாரித்த கோர்ட், "கட்டட உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தவறாக அனுமதி வழங்கியவர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்கலாம்,' என, அறிவுறுத்தியது. இதை தொடர்ந்து, கட்டட விதிமீறலுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, கலெக்டர் முடிவு செய்தார். அதற்கான பரிசீலனை தொடங்கி, கடந்த ஆட்சியில் நகரமைப்பு பிரிவில் இடம்பெற்ற அதிகாரிகளை கொண்ட பட்டியலும் தயாரானது. சம்மந்தப்பட்ட சில அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் "சஸ்பெண்ட்' நடவடிக்கையில் உள்ளனர். அவர்கள் மீதான நடவடிக்கைக்கு, அரசின் அனுமதியை கலெக்டர் எதிர்நோக்கியுள்ளார். இது ஒருபுறம் இருக்க, கலெக்டர் பட்டியலில் உள்ள அதிகாரிகளை, மீண்டும் பணிக்கு கொண்டு வர மாநகராட்சி மும்முரம் காட்டி வருகிறது. அதற்கான அனுமதி கேட்டு, அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது. மாநகராட்சியின் இந்த முடிவு, விதிமீறலில் ஈடுபடுவோரை பாதுகாக்கும் நடவடிக்கையாக தெரிகிறது. இதே போல் தான், நடக்காத பணியை நடந்ததாக கூறி, ரூ.1.50 கோடி முறைகேடு செய்த மாநகராட்சி பணியாளர்களை "சஸ்பெண்ட்' செய்து, சில வாரங்களிலேயே, அவர்களுக்கு நிர்வாகம் பணியை வழங்கியது. அதே பாணியில், தொடர்ந்து, தவறு செய்தவர்களை தண்டிக்காமல், காப்பாற்றும் வேலைகள் தான், மாநகராட்சியில் நடந்து வருகின்றன. இந்நிலை தொடர்ந்தால், விதிமீறலும், முறைகேடும், ஊழலும், மாநாகராட்சியிலிருந்து விலகுவது சிரமம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.