ஊட்டி : "ஊட்டி நகரில், தண்ணீர் தட்டுப்பாடை களைய, பாழடைந்து கிடக்கும் கிணறுகளை தூர்வாரி, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்; காணாமல் போன நகராட்சியின் கிணறுகளையும் கண்டறிய வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி நகராட்சியில், ஒன்றரை லட்சம் பேர் வசிக்கின்றனர். தவிர, ஆண்டு முழுவதும் வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 22 லட்சம். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பார்சன்ஸ் வேலி, டைகர்ஹில், மார்லிமந்து, கோடப்பமந்து அணைகள் தான், நகர மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. இதில், 58 அடி கொள்ளளவு கொண்ட பார்சன்ஸ் வேலி அணை தான், பிரதான நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
வானம் பார்க்கும் அணைகள் கடந்தாண்டு, ஊட்டியில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. குறிப்பாக, மே மாதம் பெய்ய வேண்டிய கோடை மழை, ஜூன், ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய பருவ மழை ஏமாற்றியது. விளைவாக, நகரில் உள்ள அணைகளில் நீர் இருப்பு மெல்ல, மெல்ல குறைந்து, தரை தட்டும் நிலைக்கு வந்துள்ளன. பார்சன்ஸ் வேலி அணையில் உள்ள நீர் மட்டுமே, நகர மக்களின் தாகத்தை தீர்த்து வருகிறது. இதனால், பல இடங்களில் நீர் தட்டுப்பாடு தலைதூக்க துவங்கியுள்ளது.
பாழடைந்த கிணறுகள் :
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், ஊட்டி சாந்தி விஜய் பள்ளி மைதானம், மார்க்கெட் டவுன் பஸ் ஸ்டாண்டு, காந்தல் பழைய பாறை முனீஸ்வரர் கோவில், பிங்கர் போஸ்ட் முத்துமாரியம்மன் கோவில், தோப்பு லைன் செல்லும் வழி, ஆர்.கே., புரம், பர்ன்ஹில், முள்ளிக்கொரை, ஸ்டீபன் சர்ச் என, பல இடங்களில் அரசு நிதியுதவியுடன், கிணறுகள் அமைக்கப்பட்டு, ஆங்காங்கே உள்ள மக்களுக்கு கிணற்று நீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. நகரில் உள்ள அனைத்து இந்து கோவில்களிலும் கிணறுகள் இருந்தன. கடந்த 1990 வரை, பல இடங்களில் கிணற்று நீர் பயன்பாட்டில் இருந்தது. பார்சன்ஸ்வேலி அணை நீர் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, கிணற்று நீர் பயன்பாடு மெல்ல, மெல்ல குறைந்தது.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கிணறு இருந்த இடத்தில், தற்போது கடைகள் முளைத்துள்ளன. கடந்த 2002-03ம் ஆண்டில், ஊட்டி நகராட்சி சார்பில் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் தூர்வாரி, பராமரிக்கப்பட்ட கிணறுகள், தற்போது பாழடைந்து, குப்பை தொட்டிகளாக மாறியுள்ளன. மீண்டும் வருமா? : நகரில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், தனியார் நிறுவனங்களிடம், சில ஆயிரங்களை கொடுத்து, நீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். "நகரில் உள்ள கிணறுகளை தூர் வாரி, சுத்தம் செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்; காணாமல் போன கிணறுகளையும் கண்டுடிக்க வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
ஊற்று நீர் சுரக்கும்:
"நெஸ்ட்' அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவதாஸ் கூறுகையில், ""கடந்த காலங்களில் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டிருந்த கிணறுகளில், ஊற்று நீர் சுரக்கும்; விவசாயத்துக்கு போக, குடிநீராகவும் விவசாய குடும்பங்கள் பயன்படுத்தி வந்தன. விவசாய நிலங்களில் அதிகரித்து விட்ட ரசாயன உர பயன்பாடால், கிணற்று நீரும் விஷத்தன்மை அடைந்துவிட்டது; விளைவு, அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நகரில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்து, நீரை பரிசோதித்து, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க, புதிய திட்டத்தை தயாரிக்க வேண்டும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.