அரியலூர்:
"ஆலத்தியூரில், 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க
தொட்டி சிதிலமடைந்துள்ளதால், அங்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள வெள்ளாற்றிலிருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர்
வழங்கிட, கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, கிராம மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா,
ஆலத்தியூர் பஞ்சாயத்துக்குட்பட்ட முள்ளுக்குறிச்சி, ஆலத்தியூர், தெத்தேரி,
கோட்டைக்காடு, கச்சிராம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மொத்தம், 4,100 பேர்
வசிக்கின்றனர். இதில் ஆலத்தியூர் கிராமத்தில் மட்டும், 1,500 பேர்
வசிக்கின்றனர். மேற்கண்ட ஆலத்தியூர் கிராம மக்களுக்கு சொந்தமாக இருந்த,
நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம், அருகில் உள்ள மதராஸ் சிமெண்ட்ஸ்
மற்றும் இந்தியா சிமெண்ட் ஆலைகள் சார்பில், பல ஆண்டுகளுக்கு முன்பு
கொள்முதல் செய்யப்பட்டு, சுண்ணாம்புக்கல் சுரங்கங்களாக மாற்றப்பட்டுள்ளது.
இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் விவசாயத்தையும், விவசாய வேலையால்
கிடைத்த கூலி வருவாயையும் இழந்துள்ளனர்.
இந்நிலையில் ஆலத்தியூர்
கிராமத்தின் நடுவில், 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை
நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. தொட்டியின் உள்பகுதியில் உள்ள கான்கிரீட்
தளம் மற்றும் சுற்றுப்பகுதிகள் சேதமடைந்துள்ளது. இதனால் இரும்பு கம்பிகள்
துறு பிடித்து, வலு குறைந்து உள்ளதால், கிராம மக்களின் தேவைக்கேற்ப தண்ணீரை
சேகரித்து வைக்க முடியாத நிலை உள்ளது. மேலும் ஆலத்தியூர் கிராமத்தில்
கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரண்டு அல்லது, மூன்று
நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே, அந்த கிராம மக்களுக்கு தண்ணீர்
வழங்கப்படுகிறது.தங்களது கால்நடைகளுக்காகவும், இதர தேவைகளுக்காகவும், அங்கு
பாசி படிந்துள்ள குளத்து நீரை எடுத்து வந்து, பயன்படுத்த வேண்டிய நிலை
பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆலத்தியூர் கிராமத்து மக்களின் விவசாய
நிலத்தை வாங்கி, சுண்ணாம்புகல் சுரங்கமாக மாற்றியுள்ள, சிமெண்ட் ஆலைகள்
இரண்டும், கிராம மக்களின் குடிநீர் தேவையை போக்க முன்வரவில்லை. மேலும்
அப்பகுதியில் வெடி வைத்து, ஆழமாக தோண்டப்படும் சுண்ணாம்புக்கல்
சுரங்கத்தால், ஆலத்தியூர் கிராமத்தின் நிலத்தடி நீர்மட்டமும் கீழே சென்று
கொண்டிருக்கிறது.சுண்ணாம்புக்கல் சுரங்கத்திலிருந்து மோட்டார் பம்பு செட்
மூலம் வெளியேற்றப்படும் தண்ணீரை கூட, ஆலத்தியூர் கிராம மக்களின்
பயன்பாட்டுக்கு திருப்பி விட மனமில்லாத சிமெண்ட் ஆலை நிர்வாகத்தினர்,
அவற்றை அருகில் உள்ள வெற்றாற்றுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இதுபற்றி
ஆலத்தியூர் கிராம மக்கள் கூறியதாவது:ஆலத்தியூர் கிராமத்தை சுற்றிலும்
சுண்ணாம்புகல் சுரங்கம் உள்ளதால், இங்குள்ள போர்வெல்களில் நிலத்தடி
நீர்மட்டம் குறைந்து கொண்டிருக்கிறது. காலாவதியாகி கொண்டிருக்கும் மேல்நிலை
நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு, அதிக கொள்ளளவு கொண்ட புதிய
நீர்த்தேக்க தொட்டி ஒன்று கட்டப்பட வேண்டும். மேலும் எதிர்கால குடிநீர்
தேவையை கருத்தில் கொண்டு, இரண்டு கி.மீ., தூரத்தில் உள்ள
வெள்ளாற்றிலிருந்து, எங்களது பஞ்சாயத்துக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்
வழங்கிட, அரியலூர் கலெக்டர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு
அவர்கள் கூறியுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.