டில்லியில், ஒன்பதாம் வகுப்பு மாணவி கற்பழிக்கப்பட்டு, கொடூர தாக்குதலுக்கு உள்ளானதால், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. "பெண்கள் பாதுகாப்புக்கு, உத்தரவாதம் இல்லாத நகரமாக, டில்லி மாறி வருகிறது' என, முதல்வர் ஷீலா தீட்ஷித் தெரிவித்துள்ளார். அவர், "பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, பாரதிய ஜனதா வலியுறுத்தி உள்ளது.
டில்லியில், டிசம்பர் மாதம், மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில், ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, டில்லியில் போராட்டங்கள் நடந்தன. அதன் விளைவாக, பாலியல் வன்முறைகளுக்கு எதிராக, கடுமையான தண்டனை அளிக்கும், அவசர சட்டம், சில நாட்களுக்கு முன், பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில், டில்லியில் மீண்டும் பயங்கர கற்பழிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. லஜ்பத்நகரில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி கற்பழிக்கப்பட்டுள்ளதுடன், தொண்டையில் இரும்பு கம்பியால் குத்தப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் குறித்து, டில்லி முதல்வர், ஷீலா தீட்ஷித்திடம், நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஷீலா,""தலைநகர் டில்லியில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களின் பாதுகாப்புக்கு, உத்தரவாதம் இல்லாத நகரமாக, டில்லி மாறி வருகிறது. பாதுகாப்பு அளிக்க போலீசார் உள்ளனர். எனினும், அவர்கள், பெண்கள் பாதுகாப்பை, உறுதிபடுத்த தவறி வருகின்றனர்,'' என்றார்.
டில்லி முதல்வரின் பதில், தலைநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு, பல தரப்பில் இருந்தும், எதிர்ப்பும், கண்டனமும் கிளம்பியுள்ளன.
இது குறித்து, பா.ஜ., மகளிர் பிரிவு நிர்வாகி, மீனாட்சி லேகி கூறியதாவது: ஷீலா தீட்ஷித் பேச்சு, மிகவும் வேதனை அளிக்கிறது. அவரது பேச்சு, பொறுப்பற்ற வகையில் இருக்கிறது. தலைநகரத்தை ஆளும் பொறுப்பில் இருக்கும் அவர், பெண்ணாக இருந்த நிலையிலும், கடமையை தட்டி கழிக்கும் வகையில் பேசியிருப்பது ஆபத்தானது.கடந்த, 12 ஆண்டுகளாக, டில்லியின் முதல்வராக உள்ளார். ஆனாலும், அவரால் இந்த பிரச்னைக்கு, உரிய தீர்வு காண முடியவில்லை. மாறாக, தனது தோல்வியில் இருந்து தப்பிக்க, ஏதேதோ கூறுகிறார்.
டில்லியின் சட்டம், ஒழுங்கு, மத்திய உள்துறையின் கையில் உள்ளது என்பதை, திரும்ப திரும்ப சொல்கிறார். இதையே காரணம் காட்டி, முதல்வருக்குரிய கடமையை செய்ய மறுக்கிறார். அப்படியே, பார்த்தாலும் கூட, உள்துறை, அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் வசம் தான் உள்ளது.இனி மேலும் தாமதம் செய்யாமல், முதல்வர் பதவியில் இருந்து, ஷீலா தீட்ஷித் ராஜினாமா செய்ய வேண்டும். அப்போது தான், டில்லியில், பெண்களுக்கு பாதுகாப்பை, உறுதி செய்ய தகுந்த முயற்சிகளை எடுக்க முடியும்.இவ்வாறு மீனாட்சி கூறினார்.
- நமது டில்லி நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
டெல்லிக்கு அருகில் உள்ள உபி பீகார் பகுதிகளில் வேலை வைப்பு இல்லாததால் வருடம் பல லட்சம் அரைகுறைப் படிப்பு இளைஞர்கள் டெல்லிக்குப் படை எடுக்கின்றனர். அவர்கள்தான் இப்படிப்பட்ட குற்றங்களுக்குக் காரணம். ஆகமொத்தம் டெல்லிக்குள் குடியேறுவதை முறைப்படுத்தவேண்டும். உலகிலேயே அடையாள அட்டை இல்லாமல் மக்கள் நடமாடவிடப்படும் ஒரே தலைநகரம் டெல்லிதான்.
சோனியா ஊழலைப்பற்றி கவலைப் படுகிறார், பிரதமர் திறமை குன்றி வருகிறது என்று கவலைப் படுகிறார், நீங்களோ பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கவலை படுகின்றீர், என்ன எல்லோரும் கவலை பட ஆரம்பித்துவிட்டீர்கள்? உள்ளுக்குள் மீண்டும் ஆட்சியை பிடிக்கமுடியாது என்ற உங்களின் கவலையின் வெளிப்பாடு தான் இது என்று எங்களுக்கு புரிகிறது.
எல்லா ஊர்களிலும் பெண்களுக்கு தொல்லைகள் உண்டு. நியூயார்க்கில் பல இடங்களில் மாலை 6 மணிக்கு மேல் ஆண்கள் கூட போக முடியாது. காரணம் நம்மிடம் உள்ள சொற்ப பணத்திற்காக கொலையே பண்ணிவிடுவார்கள். பெண்கள் பாடு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நான் அங்கே போய்த் தான் தீருவேன் என்றால் யாரும் நம் உயிருக்கு உத்திரவாதம் தரமாட்டார்கள். அல்லது நகரத்தின் பாதுகாப்பான பகுதியில் வலம் வரலாம். இதைத் தான் நம் பெற்றோர்கள் வீட்டிற்கு சீக்கிரம் வந்துவிடு என்று பொதுவாகக் கூறுவார்கள்.... இதை இக்காலப் பெண்களிடம் சொன்னால் பெண்ணடிமைத் தனம் என்கிறார்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.