புதுடில்லி:""நாட்டில் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம்; அவர்களை இளம் வாக்காளர்களாக மட்டும் பார்க்க வேண்டாம்,'' என, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி கூறினார்,
குஜராத், முதல்வராக நான்காவது முறையாக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, நேற்று டில்லி வந்தார். பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். பின், டில்லியில் உள்ள, நாட்டின் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றான, ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் உரையாற்றினார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லூரிக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த எதிர்ப்பை மீறி, கல்லூரியில் நடந்த விழாவில் பங்கேற்ற மோடி, "சர்வதேச சூழலில் வளர்ந்து வரும் வியாபார மாடல்கள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அப்போது, அவர் கூறியதாவது: மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல் பிறந்த மண்ணிலிருந்து இங்கு வந்துள்ளேன். சுதந்திரம் அடைந்து, 60 ஆண்டுகள் ஆகியும், சுயாட்சி அடையாதவர்களாக இருக்கிறோம். நான், சுயாட்சி என்று குறிப்பிட்டது, சிறந்த நிர்வாகத்தை. நாட்டில் எங்கு பார்த்தாலும், அவநம்பிக்கை நிலவுகிறது. இதை மாற்ற முடியும்.குஜராத்தில் நான்காவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளேன். என் அனுபவத்தில் சொல்கிறேன்... தற்போதுள்ள நடைமுறையிலேயே நிறைய சாதிக்க முடியும். நாம் மிகப்பெரிய இளைஞர் சமுதாயத்தை கொண்டுள்ளோம். அவர்களை, இளம் வாக்காளர்களாக மட்டும் பார்க்காமல், அவர்கள் உதவியுடன், நிறைய சாதிக்க வேண்டும்.
இந்த நாடே ஓட்டு வங்கியை பிரதானமாக கொண்டு செயல்படுகிறது. இது மாற வேண்டும். நாட்டின் வளர்ச்சியை பிரதானமாக கொண்ட அரசியல் வேண்டும். இளைஞர்கள் படித்து முடித்ததும், சிறந்த வேலைக்காக வெளிநாடு செல்வதை நோக்கமாக கொண்டு உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும். கிடைக்கக் கூடிய வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
நம் மக்கள் தொகையில், 65 சதவீதத்தினர், 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். அவர்கள் தான், நம் தேசத்தின் பலம். அவர்களை சரியான முறையில் பயன்படுத்தினால், இந்தியா உலகை வழிநடத்தும். நம் நாடு, ஏழை நாடல்ல; இயற்கை வளங்களை அதிகம் கொண்டுள்ள நாடு. அதை நாம் சரியாக பயன்படுத்தாமல் உள்ளோம்.இவ்வாறு, மோடி பேசினார்.
நரேந்திர மோடி முதல்வராக பொறுப்பேற்ற பின், கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி என்பதால், டில்லியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.