கோவை அருகே, கோர்ட் விதித்த நிபந்தனைகளை அப்பட்டமாக மீறி, "சேவல் சண்டை' களைகட்டியுள்ளது. விதிமீறல்களை தடுக்காமல், "காவல்' பணியில் ஈடுபட்டுள்ளனர் போலீசார்.
கோவை, ஆலாந்துறை அருகேயுள்ள நாதேகவுண்டன்புதூர் தனியார் தோட்டத்தில், "வீர விளையாட்டு சங்கம்' என்ற பெயரில், சென்னை ஐகோர்ட் அனுமதியுடன், சேவல் சண்டை நேற்று முன்தினம் துவங்கியது. இது, வரும் 9ம் தேதி வரை நடக்கிறது.சேவல் சண்டை நடக்கும் தோட்டத்தினுள் செல்ல நுழைவுக் கட்டணமாக நபருக்கு 50 ரூபாய், சேவலுக்கு 50 ரூபாய், இருசக்கர வாகனத்திற்கு 50 ரூபாய், காருக்கு 100 ரூபாய், வேன், டெம்போவுக்கு 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும், சேவல்களை சண்டைக்கு விட தலா 500 ரூபாயும், சேவலின் காலில் கூர்மையான கத்திகட்ட 300 ரூபாயும், வீர விளையாட்டு சங்கம் பெயரில் வசூலிக்கப்படுகிறது.கொக்கரிப்புடன் சேவல்கள் பறந்து, பறந்து சண்டையிடும்போது, அவற்றின் கால்களில் கட்டப்பட்டுள்ள கத்திகள் பாய்ந்து, பல சேவல்கள் உயிரிழந்தன. சேவல் சண்டையின்போது, சேவல்களின் உரிமையாளர்கள் பந்தயம் கட்டுகின்றனர். சேவல்களின் ஆக்ரோஷ மோதலின்போது, ஜெயிக்கக்கூடிய சேவல் மீது, பார்வையாளர்களும் பந்தயம் கட்டுகின்றனர்.குறைந்தபட்சம் 500 ரூபாயில் துவங்கி, 10 ஆயிரம் வரையிலும் பந்தயம் கட்டுவதாக, போட்டியில் பங்கேற்ற சேவல் உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார். இச்சூதாட்டம் மற்றும் சட்ட மீறல்கள், போலீஸ் பாதுகாப்புடன் நடக்கின்றன. கோர்ட் உத்தரவு பெற்று சேவல் சண்டையை நடத்துகிறார்கள் எங்களால் என்ன செய்ய முடியும் என்பது, போலீசாரின் வாதமாக உள்ளது.ஆனால், சேவல் சண்டை நடத்த ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில், சேவல் சண்டை நடத்துவோர்
கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகளை, அமல்படுத்த வேண்டியது போலீசாரின் கடமை. எனினும், போலீசார் தங்களது கடமையை மறந்து, கட்டுச்சேவலுக்கு காவல் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.
ஐகோர்ட் உத்தரவு என்ன?வீர விளையாட்டு சங்கத்தின் தலைவர் நாதேகவுண்டன்புதூரை சேர்ந்த கதிர்வேல், சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி, சென்னை ஐகோர்ட்டில்
மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட், நாதேகவுண்டன்புதூரில்
பிப்., 5 முதல் 9ம் தேதி வரை "சேவல் சண்டை' நடத்த அனுமதித்தது.
அதுமட்டுமின்றி, சேவல் சண்டையின்போது, கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய
நிபந்தனைகள் குறித்த உத்தரவையும் பிறப்பித்தது.*சேவல் சண்டை பேரூர் போலீஸ் டி.எஸ்.பி., மற்றும் ஆலாந்துறை போலீசார் கண்காணிப்பில் நடக்க வேண்டும்.
*கால்நடைமருத்துவர், சேவலை பரிசோதித்து, ஆரோக்கியமான நிலையை கண்டறிந்து சான்றிதழ் வழங்க வேண்டும்.
*சேவல்களை துன்புறுத்தும் செயல்கள் நடக்கக்கூடாது. கால்நடை மருத்துவர் கண்காணிப்பில் சேவல் சண்டை நடத்த வேண்டும். என, ஐகோர்ட் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கோர்ட் விதித்த நிபந்தனைகள் மீறப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, வீர விளையாட்டு சங்க தலைவர் கதிர்வேல் கூறுகையில், ""சேவல் சண்டையை, பொழுபோக்காக நடந்த அனுமதி பெற்றுள்ளோம். சேவல் சண்டைக்கு கத்தி பயன்படுத்தக்கூடாது; எனினும் மீறி சிலர் கத்தி கட்டுகின்றனர். கோர்ட் உத்தரவுப்படி கால்நடை மருத்துவர் மேற்பார்வையில், போலீஸ் கண்காணிப்பில் சேவல் சண்டை நடக்கிறது,'' என்றார்.
Advertisement
கலெக்டரிடம் அறிக்கை:கோவை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் முத்துகோபாலகிருஷ்ணன் கூறுகையில், ""சேவல் சண்டை நடத்துவோர், கால்நடை
பராமரிப்பு துறையில் மனு கொடுக்கவில்லை. மேலும், "சேவல்களுக்கு போதை
ஏற்படுத்த ஆல்கஹால், மருந்து போன்றவை கொடுக்கவில்லை, நோய் தாக்கவில்லை' என, கால்நடை மருத்துவர் சான்றிதழ் கொடுத்த பிறகே, அந்த சேவலை
சண்டைக்கு அனுமதிக்க வேண்டும். சேவல் காலில் கத்தி கட்டி ஆபத்தான, கொடூரமான
முறைகளை கையாளக்கூடாது. "முறையான தகவல் கொடுத்து, கால்நடை டாக்டர்
கண்காணிப்பில் சேவல் சண்டை நடக்கவில்லை' என, மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை
தரப்படும்,'' என்றார்.
டி.எஸ்.பி., புலம்பல்:பேரூர் போலீஸ் டி.எஸ்.பி., சண்முகம் கூறுகையில், ""ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளதால், அங்கு கோர்ட் மீறல் சம்பவங்கள் நடந்தால், கண்காணித்து கோர்ட்டில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். மற்றபடி என்ன நடந்தாலும், வேடிக்கைதான் பார்க்க முடியும்; வேறு எதுவும் செய்ய முடியாது,'' என்றார்.
வீடியோ ஆதாரம்:
கோவை மாவட்ட எஸ்.பி., உமா கூறுகையில், ""ஐகோர்ட் உத்தரவுப்படி, சேவல் சண்டைக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கோர்ட் அனுமதி வழங்கியுள்ளதால், சேவல் மீது பந்தயம் கட்டுவதாக புகார் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். சேவல் காலில் கத்தி கட்டி சண்டை நடத்துவதை போலீசார் வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளனர். இந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்,'' என்றார்.
- நமது சிறப்பு நிருபர் -