சென்னை : ""விவசாயிகளின் பொருளாதார நிலை வலுப்பெற, விவசாயத்துடன் அவர்கள் , பால் பண்ணை, தோட்ட பயிர்கள் வளர்ப்பு போன்ற தொழில்களை மேற்கொள்ள வேண்டும்,'' என, நிதித் துறை செயலர் சண்முகம் பேசினார்.
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு, 2013 -14ம் நிதியாண்டில், தமிழகத்திற்கு, 1 லட்சத்து 6,409 கோடி ரூபாய் கடன் வழங்க, நபார்டு வங்கி திட்டமிட்டுள்ளது. பொதுத் துறை, தனியார், கூட்டுறவு மற்றும் கிராம வங்கிகளின் மூலம், செயல்படுத்தப்படும் இக்கடன் திட்டம் குறித்த கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது.
அதில், நபார்டு வங்கியின் தலைமைப் பொது மேலாளர் லலிதா வெங்டேசன் பேசியதாவது:
நகரமயமாதல், விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காதது, பருவமழை பொய்ப்பது என, பல்வேறு சவால்களை, விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.
விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, 2013 -14ம் நிதியாண்டில், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு, தமிழகத்திற்கு, 1 லட்சத்து, 6,409 கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிட்டுள்ளோம். இது, நடப்பு நிதியாண்டை விட, 37 சதவீதம் அதிகம்.
இதில், விவசாய கடன், 28,063 கோடி ரூபாய்; விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்த, 39,135 கோடி ரூபாய்; பண்ணை சாரா தொழில்களுக்கு, 20,002 கோடி ரூபாய்; மலைத் தோட்டப் பயிர்களுக்கு, 4,479 கோடி ரூபாய்; கால்நடை பிரிவுக்கு, 5,845 கோடி ரூபாய் உள்ளிட்டவை அடங்கும்.
கடந்த ஆண்டு, மார்ச், 31ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில், 12.34 லட்சம், சுய உதவிக் குழுக்களுக்கு, 15 ஆயிரத்து 243 கோடி ரூபாய், வங்கிகளின் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு லலிதா வெங்டேசன் பேசினார்.
தமிழக நிதித் துறை செயலர் சண்முகம் பேசியதாவது:
பருவ மழை குறையும் போதெல்லாம், விவசாயம் பொய்த்து, விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகளின் பொருளாதார நிலை வலுப்பெற, விவசாயத்துடன் அவர்கள், பால் பண்ணை, கோழி பண்ணை, பழங்கள் சாகுபடி, தோட்ட பயிர்கள் வளர்ப்பு போன்ற தொழில்களை மேற்கொள்ள வேண்டும்.
இத்தொழில்களை மேற்கொள்ள, சிறு, குறு விவசாயிகளுக்கு, தேவையான ஆலோசனைகள் மற்றும் கடனை, வங்கிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு சண்முகம் பேசினார்.
கருத்தரங்கில், 2012 -17ம் ஆண்டிற்கான, மாநில தொலை நோக்கு ஆவணம் வெளியிடப்பட்டது. ரிசர்வ் வங்கி, சென்னை மண்டல இயக்குனர் விஸ்வநாதன். ஐ.ஓ.பி., வங்கியின், செயல் இயக்குனர் பஞ்சால், எஸ்.பி.ஐ., வங்கி பொது மேலாளர் கீர்த்திவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.