விழுப்புரம் : அரசு
விதிமுறைகள் படி எஸ்.சி.,- எஸ்.டி., வழக்கு குறித்து மாநில முதல்வர்
மற்றும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும் என
தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளர் சிரிவெல் பிரிசாத் தெரிவித்தார்.
விழுப்புரத்தில்,
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பாதுகாப்பிற்கான வன்கொடுமை
சட்டத்தை வலுபடுத்துவதற்கான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர்
நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக
நடந்த எஸ்.சி.,-எஸ்.டி., மக்கள் பாதிப்பு தொடர்பான வழக்குகள் ஆய்வு
செய்யப்பட்டது. இதில் பல சம்பவங்களை போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல்
உள்ளனர். பல வழக்குகளை போலீசாரே தள்ளுபடி செய்துள்ளனர்.
சில
சம்பவங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. வழக்கு பதிவு
செய்ததில் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. போலீசார் இவ்வழக்கில் எதிரிகளை
காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் வகையில் செயல்பட்டுள்ளது, ஆய்வில்
தெரிகிறது.
இந்த வழக்கின் விசாரணை பல ஆண்டுகள் நீடிப்பதால் சாட்சிகளையும், புகார்தாரர்களையும் மிரட்டி எதிரிகள் பணிய வைக்கின்றனர்.
தமிழகத்தில்
28 மாவட்டங்கள் சாதிபாகுபாடுகள் நிறைந்த மாவட்டம் என்பது, மத்திய அரசின்
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற பிரிவுகளின் கீழ் பதிவு
செய்யப்படும் வழக்கில், கோர்ட்டில் 40 சதவீதம் வரை தண்டனை வழங்கப்படுகிறது.
ஆனால் எஸ்.சி.,- எஸ்.டி., வழக்கில் 3 சதவீதம் வழக்கிற்கு மட்டுமே தண்டனை
வழங்கப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் முதல்வர் தலைமையில்
எஸ்.சி.,-எஸ்.டி., வழக்கின் தன்மை மற்றும் மக்களின் மேம்பாடு குறித்து 6
மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும் என விதிமுறை உள்ளது.
தமிழகத்தில்
கடந்த 2004ம் ஆண்டு முதல் இதுவரை எந்த முதல்வர்களும் இக்கூட்டத்தை தலைமை
தாங்கி, நடத்தவில்லை. அதேபோல் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் தலைமையிலும்
மாதந்தோறும் 20ம் தேதிக்குள் மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடத்த
வேண்டும். இது போன்ற கூட்டங்களையும் தமிழகத்தில் உள்ள கலெக்டர்கள்
நடத்துவதில்லை.
தருமபுரியில் நடந்த காதல் திருமணத்திற்காக பலரின்
வாழ்க்கை சீரழிய காரணமாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் செயல்பட்டுள்ளார். 18
வயது நிரம்பிய பெண்ணும், 21 வயது நிரம்பிய ஆணும் தங்கள் விருப்பம் போல்
வாழ்க்கை துணையை தேடிக் கொள்ள, அரசியல் சட்டத்தில் உரிமை உள்ளது.
இதனை
தடுக்க ராமதாஸ் போன்ற அரசியல் கட்சி தலைவர்கள் முயற்சி செய்வது, அரசியல்
சட்டத்திற்கு எதிரானது. எனவே அவரை மதுரை, கடலூர் மாவட்டங்களில் நுழைய தடை
விதித்ததை விட, தமிழகத்திற்குள் நுழையவே தடை விதித்து அரசு
உத்தரவிட்டிருக்க வேண்டும்.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி
மக்களின் நிலைகளை விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, ஈரோடு
உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்துள்ளோம். இதேபோல் இந்தியா முழுவதும்
ஆய்வு செய்து இறுதி அறிக்கையை வரும் லோக்சபா கூட்டத் தொடருக்கு முன்பாக
சமர்பிக்க உள்ளோம்.
அதன் பேரில் மத்திய அரசு எஸ்.சி.,-எஸ்.டி.,
வன்கொடுமைச் சட்டத்தை மேம்படுத்த பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ள உள்ளன.
இதற்கான முயற்சியில் மத்திய அமைச்சர் சைலஜா உள்ளிட்டோர் ஈடுபட்டு
வருகின்றனர்.
தமிழகத்தில் எஸ்.சி.,- எஸ்.டி., வழக்குகளை விசாரிக்க 4
தனி கோர்ட்டுகள் மட்டும் தற்போது உள்ளது. வழக்குகளை விரைந்து முடிக்க
அனைத்து மாவட்டங்களிலும் தனிக் கோர்ட்டுகள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளர் சிரிவெல் பிரசாத் தெரிவித்தார்.