பவானி: ஈரோடு மாவட்டத்தில் பவானி யூனியன் அரசு அறிவித்த மக்கள் திட்ட பணிகளை சிறப்பான முறையில் செய்தமைக்காக, 14 யூனியன்களில் முதலிடம் பெற்றது.
கடந்த, 2012-13ம் ஆண்டு தமிழக முதல்வர் அறிவித்த பல்வேறு திட்டங்களான இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், கிராம தன்னிறைவு திட்டம், பசுமை வீடுகள் திட்டம், எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதி, தேசிய வேலை உறுதித்திட்டம், மகளிர் சுகாதார வளாகம் பராமரிப்பு, ஊரக கட்டமைப்பு போன்ற பல்வேறு திட்டங்களை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கியதில் ஈரோடு மாவட்ட அளவில் பவானி யூனியன் சிறப்பாக செயல்படுத்தி உள்ளது.
திட்ட செயல்பாட்டில் சிறப்பாக வழங்கியமைக்காக, பவானி யூனியன், மாவட்ட அளவில் சிறந்த யூனியனாக தேர்வு செய்யப்பட்டது.
இதற்காக, நடந்து முடிந்த குடியரசு தினவிழாவில், கலெக்டர் சண்முகம் சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பையை பவானி வட்டார வளர்ச்சி அலுவலர்களான சிவசண்முகம், மாரப்பன் மற்றும் பொறியாளர்களான கே.முருகேசன், வி.முருகேசன் ஆகியோர்களிடம் வழங்கி, பாராட்டு தெரிவித்தார்.
மாவட்டத்தில் முதலிடம் பெற்றமைக்காக, யூனியன் ஆணையர்கள், பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரையும், யூனியன் தலைவர் தங்கவேலு, துணைத்தலைவர் ரவி, கவுன்சிலர்கள் முருகன், சீனிவாசன், ராஜாமணி, சிவக்குமார் ஆகியோர் பாராட்டினர்.