வேடசந்தூர்: வேடசந்தூர் பேரூராட்சிக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் நடைபெறும் பனிப்போரால் மக்கள் வரிப்பணம் வீணாகும் நிலை எழுந்துள்ளது.வேடசந்தூர் கொல்லப்பட்டறைஅருகே மூன்று ரோடுகள் பிரிகின்றன. மேலும் கோவிலூர் ரோடு வளைவும் உள்ளது. இந்த இடத்தில் இருந்த கழிப்பறையை இடித்து புதிய கழிப்பறையை பேரூராட்சி நிர்வாகம் ரூபாய் 3. 50 லட்சம் செலவில் கட்டி வருகிறது.
பழைய கழிப்பறை தென் வடலில் இருந்தது. இதனால் ரோட்டு பகுதி ஆக்கிரமிப்பு குறைவாக இருந்தது. ஆனால் தற்போது கிழக்கு மேற்காக பழைய அளவை விட கூடுதலாக கட்டப்பட்டு வருகிறது. இதனால் வேகமாக வரும் வாகனங்கள் ரோட்டில் வளைவில் திரும்பும் போது ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,""தென்வடலில் இருக்கும் போது பிரச்னை இல்லாமல் இருந்தது. தற்போது கட்டப்படும் கட்டடத்தால், ரோட்டின் அளவு குறைந்துள்ளது. எங்களிடம் புதிதாக கட்டடம் கட்ட அனுமதி பெறவில்லை. ஆக்கிரமிப்பு எடுப்பது குறித்து புகார் அனுப்பியுள்ளோம்,'' என்றனர்.பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ""பல ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி பெறப்பட்டு கழிப்பறை கட்டப்பட்டிருந்தது. தற்போது இதனை இடித்து விட்டு கூடுதலாக கட்டி வருகிறோம். இப்பகுதி பெண்களுக்கு இது பயன் உள்ளதாக இருக்கும்,''என்றார்.