அதிகாரிகள் துணையுடன், வீட்டுவசதி வாரிய நிலங்கள், தனியாரால் அபகரிக்கப்பட்டுள்ளது குறித்த அதிர்ச்சித் தகவல்கள், உயர் நிலைக்குழு மூலம் நடத்தப்பட்ட அதிரடி ஆய்வில் தெரிய வந்துள்ளன. தமிழகத்தில் வீட்டுவசதி வாரியம் மூலம், பல்வேறு மாவட்டங்களில் நிலங்கள் மொத்தமாக கையகப்படுத்தப்பட்டு, அவை வீடு, மனைகளாக மேம்படுத்தி, ஒதுக்கீடுகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு எடுக்கப்படும் நிலங்களில், ஒரு குறிப்பிட்ட அளவு, எதிர்கால தேவைகளுக்காக ஒதுக்கி வைக்கப்படும். மோசடி பல்வேறு திட்டப்பகுதிகளில் இப்படி ஒதுக்கி வைக்கப்படும் நிலங்கள், வாரிய தலைமையகத்தின் அனுமதியின்றி, அந்தந்த பகுதி அதிகாரிகளால் குறைந்த விலைக்கு மோசடியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், வாரியத்துக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், பதிவுத்துறைக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகார்கள் அடிப்படையில், துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையில் தெரிய வந்துள்ள விவரங்கள், வாரியத்துக்கு மட்டுமல்லாது, அரசுக்கும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. இதில் குறிப்பாக, கோவை கணபதி திட்டப் பகுதியில், எதிர்கால தேவைக்காக வைக்கப்பட்ட, 100 சென்ட் நிலம், முறைகேடாக விற்பனை செய்யப்பட்டது. அதுவும், 18 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலம், உள்ளூர் அதிகாரிகளால், ஆறு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட விசாரணையில், தெரிய வந்த விவரங்கள் அடிப்படையில், நான்கு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் வாரியம் உத்தரவிட்டது.இந்நிலையில், பல்வேறு கோட்டங்களில் எதிர்கால தேவைக்காக வைக்கப்பட்ட நிலங்கள் மோசடியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய உயர் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது.முதல்கட்டமாக இக்குழுவினர் கோவையில் தங்களது ஆய்வு பணிகளை, திங்கள்கிழமை துவக்கினர்.இரண்டு செயற் பொறியாளர்கள், மூன்று டி.ஆர்.ஓ., நிலையிலான அதிகாரிகள் என, மொத்தம், 12 பேர் கொண்ட இக்குழுவினர், கோவையில் உள்ள பல்வேறு வீட்டுவசதி திட்டங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.ஆய்வில்...இதுகுறித்து, வீட்டுவசதி வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: கணபதி திட்டப்பகுதியில் உள்ள தென்றல் நகரில், வாரியத்துக்கு சொந்தமான ஒதுக்கீடு செய்யப் படாத, 7 சென்ட் நிலம், தனியார் சிலர் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலி ஆவணங்களை பயன்படுத்தி அந்த நிலம் தனியாரால் அபகரிக்கப்பட்டது தெரியவந்தது.இதே போன்று, கணபதியில் பிறப்பகுதிகள், வீரகேரளம், வெள்ளக்கிணறு ஆகிய இடங்களில் ஆய்வு செய்ததில், ஏராளமான நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்படாமலேயே, தனியார் வசம் சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் சில நாட்கள் நடக்கும் இந்த ஆய்வில், தெரிய வரும் விவரங்கள், அறிக்கையாக வாரிய தலைமையகத்துக்கு அளிக்கப்பட்டு, தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின், பிற கோட்டங்களிலும் இத்தகைய ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.