புதுடில்லி : "பெண்களுக்கு எதிரான, ஆசிட் வீச்சு சம்பவங்களை தடுக்க, மத்திய, மாநில அரசுகள், போதிய நடவடிக்கை எடுக்காதது கவலை அளிக்கிறது. ஆசிட் வீச்சை தடுப்பதற்கான சட்டமியற்றுவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, இழப்பீடு வழங்குவது ஆகிய விஷயங்களை முடிவு செய்ய, அனைத்து மாநில தலைமைச் செயலர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும்' என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்,
உத்தரவிட்டுள்ளது.சில ஆண்டுகளுக்கு முன், டில்லியைச் சேர்ந்த, லட்சுமி என்ற இளம் பெண் மீது, மூன்று இளைஞர்கள், ஆசிட் வீசினர். இதில், லட்சுமியின், முகம், கை உட்பட, உடலின் பெரும் பகுதியில், தீக் காயங்கள் ஏற்பட்டன. லட்சுமி மீது ஆசிட் வீசிய மூன்று பேரில், இருவர், தற்போது ஜாமினில் வெளியில் வந்து விட்டனர். பாதிக்கப்பட்ட லட்சுமி, 2006ல், சுப்ரீம் கோர்ட்டில், பொது நல மனு செய்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது: ஆசிட் வீச்சால், என்னைப் போல், இனி எந்த பெண்ணும் பாதிக்கப்படக் கூடாது. இதுபோன்ற குற்றங்களை தடுக்க, கடுமையான சட்டமியற்ற வேண்டும் அல்லது தற்போதுள்ள சட்டத்தில், திருத்தம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை செலவை அரசே ஏற்பதோடு, அவர்களுக்கு, போதிய இழப்பீடு வழங்கவும், உத்தரவிட வேண்டும். ஆசிட் விற்பனைக்கு, முழுமையாக தடை விதிக்க வேண்டும். வங்கதேசம் உள்ளிட்ட, சிறிய நாடுகளில் கூட, ஆசிட் வீச்சு சம்பவங்களை தடுக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அந்த மனுவில், லட்சுமி தெரிவித்திருந்தார். இந்த மனு தொடர்பான, முந்தைய விசாரணையின்போது, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: பெண்களுக்கு எதிரான ஆயுதமாக, ஆசிட் பயன்படுத்தப்படுகிறது. இதை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிட் விற்பனையை முறைப்படுத்த வேண்டும். இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளையும், ஆலோசித்து, உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டுஇருந்தனர். இதையடுத்து, இந்த மனு, நீதிபதி, ஆர்.எம்.லோத்தா தலைமையிலான பெஞ்ச் முன், நேற்று, மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஆசிட் விற்பனையை முறைப்படுவது அல்லது தடை செய்வது தொடர்பாக, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், போதுமானதாக இல்லை. அரசின் நடவடிக்கைகள், எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.உடனடியாக, இதுபோன்ற கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மத்திய அரசு, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களின் கூட்டத்தை கூட்டி, ஆசிட் வீச்சு சம்பவங்களை தடுப்பதற்கான, சட்டமியற்றுவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, இழப்பீடு வழங்குவது குறித்து, ஆலோசிக்க வேண்டும்.இதற்கான புதிய கொள்கையை உருவாக்கி, அதன் விவரங்களை, எட்டு வாரங்களுக்குள், தாக்கல் செய்ய வேண்டும். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இழப்பீடு வழங்குவது, சிகிச்சை அளிப்பது ஆகியவற்றுக்கு. ஏதாவது திட்டம் உள்ளதா என்பது பற்றி, மத்திய அரசும், மாநில அரசுகளும், தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.