பெங்களூரு : ஆசியாவிலேயே, மிகப்பெரிய விமான கண்காட்சி, பெங்களூருவில் நேற்று துவங்கியது. "பாதுகாப்பு துறையில், இந்தியா சுயசார்பு பெற்றுள்ளதை நிரூபிக்கும் வகையில் இக்கண்காட்சி அமைந்துள்ளது' என, மத்திய பாதுகாப்பு அமைச்சர், அந்தோணி தெரிவித்தார். பெங்களூரு நகருக்கு அருகில் உள்ள எலங்கா விமான தளத்தில், "ஏரோ இந்தியா - 2013' என்ற சர்வதேச விமான கண்காட்சி நேற்று துவங்கியது. இதில், பாதுகாப்பு மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் புது ரக விமானங்கள், விமான போக்குவரத்தில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நவீன கண்டுபிடிப்புகள் மற்றும் வான்வெளி பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும் ரேடார்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து, 600க்கும் மேற்பட்ட கம்பெனிகள் இந்த கண்காட்சியில் பங்கு பெற்றுள்ளன. இந்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மிகப்பெரிய அளவில், தன் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, எச்.ஏ.எல்., மற்றும் பெல், டாடா நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்த கண்காட்சியை துவக்கிவைத்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி பேசுகையில், ""பாதுகாப்பு துறையில், இந்தியா சுயசார்பு பெற்றுள்ளது என்பதை வெளிக்காட்டுவது இக்கண்காட்சியின் முக்கிய அம்சமாகும். சர்வதேச அளவில் செயல்படும் பெரிய விமான நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் விமானங்களை தயாரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது,'' என்றார். கண்காட்சியின் துவக்கமாக, மிக்- 8 ஹெலிகாப்டர்களில் வீரர்கள் மூவர்ண தேசிய கொடியை சித்தரிக்கும் வகையில் அணிவகுத்து வந்தனர். ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், போரில் பயன்படுத்துவதற்காக தயாரித்துள்ள, "தேஜஸ்' என்ற இலகு ரக விமானத்தை கேப்டன், கிருஷ்ணா ஓட்டி வந்த போது, பலத்த கரவொலி எழுந்தது. விழாவில் பங்கேற்ற மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அஜித் சிங் பேசுகையில்,""நாட்டின் தொலைதூர பகுதிகளையும், சிறிய நகரங்களையும் இணைக்கும் வகையில், 15 விமான நிலையங்களை அமைப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் பயணிகள் விமான போக்குவரத்து நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில், உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை, 18 கோடியை எட்டும் என மதிப்பிடப்பபட்டுள்ளது. வெளிநாடு செல்லும் பயணிகள் எண்ணிக்கை தற்போது, நான்கு கோடியாக இருக்கிறது;இது, எட்டு கோடியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.