பெ.நா.பாளையம்:துடியலூர் அருகே உள்ள திப்பனூர் கிராமத்தில் ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகள் இருந்த நிலைமாறி, இன்று சில நூறு ஆடுகள் மட்டும் வளர்க்கப்படும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வேகமாக நலிவடைந்து வரும் செம்மறி ஆடு வளர்ப்பு தொழிலை, மீண்டும் உயிர்ப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
துடியலூர் அருகே பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் திப்பனூர் கிராமம் உள்ளது. இங்கு "குரும்பா' சமுதாய மக்களே அதிகளவு வசிக்கின்றனர்.
இவர்களின் குலத்தொழிலான செம்மறி ஆடு வளர்ப்பு, இப்பகுதியில் ஒரு காலத்தில் உச்சக்கட்டத்தில் இருந்தது. ஆனால், இன்று தொழில் நலிவடைந்து அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சிலர் மட்டும் செம்மறி ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
செம்மறி ஆடுகளை மலையோரங்களில் உள்ள வனப்பகுதிகளில் மேய்க்க வனத்துறையினர் அனுமதிப்பதில்லை.
மழையும் குறைந்து விட்டது. இதனால் செம்மறி ஆடுகளை வளர்க்க முடியாமல் பலர் சிரமப்
படுகின்றனர்.
இது குறித்து, இத்
தொழில் செய்து வரும் திப்பனூர் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி, அய்யாசாமி ஆகியோர் கூறியதாவது:
ஒரு காலத்தில் திப்பனூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் செம்மறி ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால், தற்போது சுமார் 30 பேர் மட்டும் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். செம்மறி ஆடுகள் புற்களை மட்டும் தின்னும் இயல்புடையது. சிறு செடிகள், மரங்களில் உள்ள இலைகளை உண்ணாது.
இருந்தாலும், மேற்கு தொடர்ச்சி மலையோரங்களில் செயல்படுத்தப்படும் "ஜாயிண்ட் பாரஸ்ட் மேனேஜ்மென்ட்' என்ற திட்டத்தின் அடிப்படையில் செம்மறி ஆடுகளை கூட மலையோரத்தில் மேய்க்க வனத்துறையினர் அனுமதிப்பதில்லை.
செம்மறி ஆடுகளுக்கு தீவனம் வாங்கி கொடுத்து வளர்த்தால், செலவு அதிகமாகும்.
இதனால் ஆங்காங்கே உள்ள திறந்த வெளி மேய்ச்சல் நிலங்களில்தான் மேய்க்க முடியும்.
தற்போது, கோவை வடக்கு பகுதியில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் லே - அவுட்களாக மாறி வருகின்றன. இதனால், செம்மறி ஆடுகளை அப்பகுதியில் மேய்க்க முடிவதில்லை.
பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் செல்லும் வழியை தனியார் சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளதால், ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடிவதில்லை.
கடந்த சில ஆண்டுளுக்கு முன், துடியலூரில் கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வந்தது. தற்போது, அது, கோவை மாநகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையத்துக்கு மாற்றப்பட்டு விட்டது.
இதனால் "வாய்சப்பை' உள்ளிட்ட கொடுமையான வியாதிகளால் ஆடுகள் மொத்தமாக பாதிக்கப்படும் போது, அவற்றுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க, பாதிக்கப்பட்ட ஆடுகளை நகர எல்லைக்குள் இருக்கும் கவுண்டம்பாளையத்துக்கு ஓட்டிச் செல்ல முடிவதில்லை. இதனால் ஆடுகள் இறந்து விடும் அபாயம் உள்ளது.
மேற்குறிப்பிட்ட காரணத்தால், ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வந்த பலர், அத்தொழிலை விட்டு, பிழைப்புக்காக நகர்ப்புறங்களை நோக்கி செல்ல துவங்கி விட்ட
னர்.
ஒரு செம்மறி ஆட்டின் குட்டி நல்ல தீவனம் இருந்தால் ஒரு வயதுக்கு பின், மாதம் இரண்டு குட்டிகளை ஈனும்.
இது சற்று வளர்ந்த பின், அதன் உடல் எடையை பொறுத்து 3,500 முதல் 4,000 ரூபாய் வரை விற்பனையாகும். ஆட்டுக்கறிக்கு நல்ல கிராக்கி இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் ஆடுகளை விற்று பணம் பெறலாம் என்ற நிலை உள்ளது. செம்மறி ஆடுகளின் புழுக்கைகள் சிறந்த உரமாக பயன்
படுகிறது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.