உடுமலை:உடுமலை அருகே, கால்நடை மருந்தகத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு, சுற்றுச்சுவர் கட்ட முடியாமல் கால்நடைத்துறையினர் பல மாதங்களாக போராடி வருகின்றனர். ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக செயல்படும் ஆளுங்கட்சியினர் குறித்து தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பபட்டுள்ளது.
உடுமலை அருகே பெதப்பம்பட்டியில், கால்நடைத்துறையின் கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 1965 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மருந்தகத்திற்கு அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் நான்கு ஏக்கர் நிலத்தை தானமாக அளித்தனர்.
நிலத்தில், மருந்தக கட்டடம் தவிர்த்து காலியாக இருந்த இடம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்தது. முட்புதர்கள் மண்டி, திறந்த வெளிக்கழிப்பிடமாக கால்நடைத்துறைக்கு சொந்தமான இடம் மாறியதால், அவ்வழியாக செல்லும் சோமவாரப்பட்டி அரசு பள்ளி மாணவர்கள், மின்வாரிய அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள், கண்டியம்மன் கோவில் உட்பட பல கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து கால்நடைத்துறைக்கு அப்பகுதி மக்கள் சார்பில் தொடர் புகார் மனு அனுப்பபட்டது. இதனையடுத்து, கால்நடைத்துறையினர் புதர் மண்டி கிடந்த இடத்தில் முட்புதர்களை அகற்றினர்.
இந்நிலையில், தமிழக அரசு பெதப்பம்பட்டி கால்நடை மருந்தகத்திற்கு சுற்றுச்சுவர் கட்டுதல், கட்டட பராமரிப்பு ஆகிய பணிகளுக்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஆறு லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியது.
முதற்கட்டமாக மருந்தக கட்டடத்தின் பின்புறம் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் துவங்கின. அப்போது, மருந்தகத்திற்கு சொந்தமான இடத்தின் அருகில் வசிப்பவர்கள் சிலர் இதை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து, வருவாய்த்துறையினர் சார்பில் சர்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், கால்நடைத்துறைக்கு சொந்தமான இடம் அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டன.
இதற்கு, குறிப்பிட்ட பகுதியை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் தடைபட்டது. சர்வே பணிகளை மேற்கொண்ட வருவாய்த்துறையினர் கால்நடைத்துறை அதிகாரிகளிடம் பிரச்னை குறித்து "சுமூகமாக செல்லுங்கள்' என தெரிவித்துள்ளனர்.
ஆனால், அப்பகுதி மக்களின் நலனுக்காக, தங்கள் சொந்த நிலத்தை அரசுக்கு தானம் வழங்கி, அதில் மருந்தக கட்டடம் கட்ட நடவடிக்கை எடுத்தவர்களின் நோக்கம் வீணாகி விடும். எனவே சர்வே அடிப்படையில் சுற்றுச்சுவர் கட்ட உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கால்நடைத்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், குடிமங்கலம் ஒன்றியத்தை சேர்ந்த சில ஆளுங்கட்சி பிரமுகர்கள் மருந்தகத்திற்கு சென்று ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
இதனால், கால்நடைத்துறையினர் உச்சகட்ட வேதனைக்கு ஆளாகியுள்ளனர். இப்பிரச்னை குறித்து கால்நடை துறை சார்பில் தமிழக முதல்வர் மற்றும் துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பபட்டுள்ளது.
அரசு துறைக்கு சேர வேண்டிய இடத்தை மீட்டு சுற்றுச்சுவர் கட்ட மாவட்ட நிர்வாகமும் கைகொடுக்க வேண்டும் என கால்நடைத்துறையினர் மற்றும் கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பிரச்னை குறித்து வருவாய்த்துறையினர் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால், பல்வேறு பாதிப்புகள் தொடர்கதையாகி விடும்.