பொள்ளாச்சி:பொள்ளாச்சியிலிருந்து கேரளாவுக்கு சென்ற தனியார் பஸ்சில் முக்கால் டன் ரேஷன்அரிசியை மகளிர் குழுவினர் கடத்திச்சென்றனர். நடுப்புணி சோதனை சாவடியில் மேற்கொண்ட வாகன சோதனையில் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சியிலிருந்து நடுப்புணி வழியாக திருச்சூருக்கு நேற்று காலை தனியார் பஸ் குறைந்த எண்ணிக்கை கொண்ட பயணிகளோடு புறப்பட்டு சென்றது. பஸ்சின் உட்பகுதியில் 15 மூட்டைகளில் கடலைமுத்தை (நிலக்கடலை) சிலர் ஏற்றினர். அதிகாலை நேரத்தில் பயணிகள் அதிகம் இருக்க மாட்டார்கள் என்பதால் கண்டக்டர், டிரைவர் ஆகியோர் அனுமதி வழங்கினார்.
இதை பயன்படுத்திக்கொண்ட ஒரு மகளிர் குழு கண்டக்டரை சிறப்பு கவனிப்பு செய்துவிட்டு 700 கிலோ எடை கொண்ட 28 மூட்டைகளில் ரேஷன் அரிசியை பஸ்சில் ஏற்றினர்.
பஸ் வடக்கிபாளையம் வழியாக நடுப்புணி சென்றது. அங்கு பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ.,வெங்கடாசலம் பஸ்சை சோதனையிட்டார். அதிக எண்ணிக்கையில் சாக்கு மூட்டைகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், ஒவ்வொரு மூட்டையையும் சோதனையிட்ட போது, சிலவற்றில் உறித்த நிலக்கடலையும் சிலவற்றில் ரேஷன் அரிசியும் இருந்ததை உறுதி செய்தார்.
பின்னர் பயணிகள் ஒவ்வொருவராக விசாரித்த போது, முன்பக்க இருக்கைகளில் அமர்ந்திருந்த பெண்கள் பஸ்சை விட்டு இறங்கி ஓடினர். பஸ்ஸில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரித்த போது, பொள்ளாச்சி புதிய பஸ் ஸ்டாண்டில் திருச்சூர் செல்வதற்காக இந்த தனியார் பஸ் வந்து நின்றது. அப்போது முதலில் 100 கிலோ எடை கொண்ட சாக்குமூட்டைகளை சிலர் ஏற்றினார். அதன்பின்பு வந்த மகளிர் குழுவினர் 25 கிலோ எடை கொண்ட சிப்பங்களாகவும் பிக்ஷாப்பர் பேக்குகளை மூட்டையாக கட்டியும் 30 எண்ணிக்கையில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றினர். இவையனைத்தும் கண்டக்டரின் சம்மதத்தின் பேரில் நடந்ததாக போலீசாரிடம் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சிறப்பு எஸ்.ஐ. வெங்கடாசலம் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன்அரிசி அனைத்தையும் குடிமையியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது: பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டிலிருந்து கேரளாவுக்கு செல்லும் பஸ்களில் அன்றாடம் ரேஷன்அரிசி கடத்துவது நடந்து கொண்டு தான்இருக்கிறது. 10 கிலோ 20 கிலோவில் துவங்கி தற்போது 700 கிலோவில் முடிந்துள்ளது. அதிகாலை நேரத்திலும், இரவு நேரத்தில் கடைசி டிரிப் செல்லும் போது இது போன்ற கடத்தல் நடக்கிறது. ஒருவர் இருவர் இந்த கடத்தலை நிறைவேற்றுவதில்லை. மகளிர் சிலர் ஒன்றிணைந்து குழுவாக இப்பணியை செய்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கும் பெண்களை மடக்கிப்பிடிப்பதற்கு மகளிர் போலீசை விரைவில் கண்காணிப்பு பணியில் களமிறக்க உள்ளோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
ரேஷன் அரிசியை தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்வதற்கு கேரள பஸ்சில் கண்டக்டர்கள் லக்கேஜ் டிக்கெட் என்ற பெயரில் கிலோ ஒன்றுக்கு ரூ.2 வசூலிக்கின்றனர். இதை பயன்படுத்தியே 750 கிலோ அரிசி கேரள மாநில தனியார் பஸ்சில் கொண்டுசெல்லப்பட்டது. இதில் கண்டக்டர் மற்றும் டிரைவருக்கு தலா ஒரு ரூபாயை பகிர்ந்து கொள்வதாக கூறப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.