புதுடில்லி
: அருணாச்சல பிரதேசத்தில், சீனா எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு, சாலை
இணைப்பு வசதி விரைவில் கிடைக்க உள்ளது. இது தொடர்பாக, உடனடி நடவடிக்கை
மேற்கொள்ள, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டது. அருணாச்சல
பிரதேசதத்தில், மொத்தமுள்ள, 17 மாவட்டங்களில், 10 மாவட்டங்கள், சீனா
மற்றும் மியான்மர் எல்லையை ஒட்டி அமைந்துள்ளன. இந்த மாவட்டங்களில், 250
பேருக்கு, குறைவாக வசிக்கும் கிராமங்கள், சாலை இணைப்பு வசதி இன்றி இருந்தன.
இதுகுறித்து, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நேற்று நடந்த மத்திய
அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, பிரதமர் கிராம சாலை மேம்பாட்டு
திட்டத்தின் கீழ், சாலை இணைப்பு வசதிகளை ஏற்படுத்த, முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, 1,200 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்
மூலம், குறைந்த அளவில் மக்கள் வசிக்கும் கிராமங்களை, ஒன்றிணைப்பதற்கு வழி
ஏற்பட்டுள்ளன. இதே போல், நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட, 82க்கும் மேற்பட்ட
மாவட்டங்களில், 100 பேர் வசிக்கும், பழங்குடியின மக்கள் வசிக்கும்
கிராமங்களை ஒன்றிணைக்கும் வகையில், சாலைகள் அமைக்கவும், மத்திய அமைச்சரவை
ஒப்புதல் அளித்தது. இதுகுறித்து, நிருபர்களிடம் பேசிய மத்திய ஊரக
வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:நக்சல் பாதிப்புள்ள
மாவட்டங்களில், சாலை இணைப்பு வசதியின்றி இருக்கும் பழங்குடியினர் வசிக்கும்
பகுதிகளில், முன்னுரிமை அடிப்படையில் சாலைகள் அமைக்கப்படும். முதல்
கட்டமாக, 250 பேருக்கு குறைவாக வசிக்கும் கிராமங்கள் கவனத்தில் எடுத்து
கொள்ளப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில், 250 பேருக்கு கீழ் வசிக்கும்
கிராமங்களை ஒன்றிணைக்கும் வகையில், சாலைகள் அமைக்கப்படுகிறது. இந்த
வகையில், 126 கிராமங்கள் பயன்பெறும். பிரதமர் கிராமப்புற சாலை
திட்டத்திற்கு, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரை வைக்க வேண்டும் என,
பா.ஜ.,கோரிக்கை விடுத்துள்ளது. இத் திட்டம், 2000ம் ஆண்டில் துவங்கியது
என்பது சரிதான். அப்போது பிரதமராக இருந்தது வாஜ்பாய் தான். இது பெயரளவில்
தான் இருந்தது. ஐ.மு.கூட்டணி ஆட்சியில், 2006க்கு பின் செயல்பாட்டுக்கு
வந்தது. இதற்காக, பட்ஜெட்டில், 24 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
எனவே, பா.ஜ., கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு, சரியான முகாந்திரம் இல்லை.
இவ்வாறு, ஜெய்ராம் ரமேஷ் கூறினார். பா.ஜ., பிரதமர் வேட்பாளர் குறித்து,
முதன் முதலாக குரல் எழுப்பிய, மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா, குடியரசு
தினத்தையொட்டி, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், "வாஜ்பாய்க்கு, பாரத் ரத்னா
விருது வழங்க கோரியும், பிரதமர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு,
வாஜ்பாய் பெயரை வைக்க வேண்டும்' எனவும், கோரியிருந்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.