சென்னை : சட்டசபையில் அமைச்சர் முனுசாமியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், துணை சபாநாயகரை முற்றுகையிட முயன்றதால், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். சட்டசபையில் நேற்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாத விவரம்:
ம.ம.க., - ஜவாஹிருல்லா: இலங்கை படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது, இந்திய கடற்படையினரும், கடலோர காவல் படையினரும், காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, இலங்கையை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி, இதற்கான இழப்பீடுகளை பெற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈழத்தில் இனப்படுகொலையை தலைமையேற்று நடத்திய, ராஜபக்ஷேவிற்கு இந்தியாவில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. "டெல்டா' மாவட்ட விவசாயிகள் கண்ணீர் வடிப்பதற்கு, மத்திய அரசு தான் காரணம்.
ரங்கராஜன்- காங்கிரஸ்: இலங்கை பிரச்னை தொடர்பாக, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, தமிழக காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது. இலங்கை தமிழர்களுக்கு எதிரானவர்கள் நாங்கள் இல்லை.
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: இலங்கை தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போதும், மத்திய அரசை, தி.மு.க., தாங்கிப் பிடிக்கிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது,"பேராசை பிடித்த மீனவர்கள், எல்லை தாண்டி செல்வதால் தான் தாக்கப்படுகின்றனர்' என்று, மத்திய அரசின் செயல்பாடுகளை, தன் கருத்தின் மூலம் நேரடியாக ஆதரித்தவர், தி.மு.க., தலைவர் தான். அவர் பேசியது, அவைக்குறிப்பில் இருக்கிறது.
அ.தி.மு.க., - செங்கோட்டையன்: இலங்கையில் போர் நடந்த போது, கருணாநிதி, இரண்டு மணி நேரம் போலி உண்ணாவிரதம் மேற்கொண்டார். மத்திய அமைச்சர் போர் நிறுத்தப்பட்டதாக கூறியதும், உண்ணாவிரதத்தை கைவிட்டார். ஆனால், அந்த நேரத்தில், இலங்கையில் குண்டு வீசப்பட்டதில், 84 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்.
(அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் செங்கோட்டையன் பேசும் போது, தி.மு.க., வினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.)
அமைச்சர் முனுசாமி: எல்லாரையும் எந்த நேரத்திலும் ஏமாற்ற முடியாது. இனப்படுகொலை நிகழ்த்திய ராஜபக்சேவை பார்க்க சென்ற குழுவில், கனிமொழியும் இடம் பெற்றிருந்தார். இலங்கை தமிழர்கள் அனாதையானதற்கு முக்கிய காரணம், தி.மு.க., தலைவர் தான்.
தி.மு.க., - சக்கரபாணி: உங்கள் ஆட்சிக் காலத்தில் தான், பிரபாகரன் குற்றவாளி என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போரின் போது, அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சாதாரணமானது தான் என்று செ õன்னீர்கள். இலங்கை பிரச்னையில், நீங்கள் நாடகமாடுகிறீர்களா; நாங்கள் நாடகமாடுகிறோமா?
அமைச்ச ர் முனுசாமி: நாங்கள் ஒருபோதும் தீவிர வாதத்தை ஏற்றுக் கொண்டது கிடையாது. அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்ட போது, குரல் கொடுத்தோம். நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்த போது ஒரு விதமாகவும், ஆட்சிக்கு வந்த போது, அதை காப்பாற்றிக் கொள்ள, மத்திய அரசுடன் சேர்ந்து, இலங்கை தமிழர்களை முன்னிறுத்தி, அரசியல் நடத்தினீர்கள். மத்திய அரசு, இலங்கைக்கு பிரதிநிதிகளை அனுப்பிய போது, அதை வேண்டாம் என்று சொல்லாமல், உங்கள் தலைவர், நான் என் மகளையே அனுப்புகிறேன் என, அனுப்பினார்.
அமைச்சர் இவ்வாறு தெரிவித்ததும், தி.மு.க., கொறடா சக்கரபாணி, எம்.எல்.ஏ.,க்கள் தங்கம்தென்னரசு, அன்பழகன், பெரியகருப்பன் உள்ளிட்ட அனைவரும் சபாநாயகர் இருக்கை அருகில் வந்து, அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடனடியாக, அனைவரையும் வெளியேற்ற, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார். வெளியேற்றப்பட்டு, சட்டசபை அரங்கத்தின், "லாபி' பகுதியில் நின்று அனைவரும், அமைச்சரின் பேச்சை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.அங்கிருந்தும் வெளியேற்றுமாறு, காவலர்களுக்கு, துணை சபாநாயகர் உத்தரவிட்டதை தொடர்ந்து, கோஷமிட்டபடியே, சபையில் இருந்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறினர்.
சஸ்பெண்ட் :
இதுகுறித்து, சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பு:
எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை, ஜனநாயக முறையில் தெரிவித்திருக்கலாம். வன்முறையை தூண்டுவது போல், சபாநாயகர் இருக்கை அருகே வந்து, மரபுகளுக்கு மாறாக, கண்ணியம் மற்றும் மாண்பை குறைக்கும் வகையில், துணை சபாநாயகரின் உத்தரவையும் மீறி பொறுப்பற்ற தனமாக கூச்சலிட்டனர்.
சபையின் அலுவல்களை இடைமறித்தும், விதிகளுக்குமாறாக சபையில் குந்தகம் செய்து வந்ததாலும், சபையில் இரண்டாவது முறையாக வெளியேற்றப்பட்டுள்ளதாலும், விதி,120ன் கீழ், வந்திருக்கும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இந்த கூட்டத்தொடர் காலத்திற்கு, பேரவை பணிகளில் இருந்தும் நீக்கி வைக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் வருவாரா? :
சட்டசபையில், அமைச்சர் முனுசாமி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குழப்பம் விளைவித்ததாக, இன்று சபைக்கு வந்திருந்த, தி.மு.க., கொறடா சக்கரபாணி, எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், அன்பழகன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், அன்பழகன், ராஜா, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட, 14 தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கவர்னர் உரைக்கான நன்றி தெரிவிக்கும் கூட்டம், எதிர்க்கட்சி தலைவர் உரை மற்றும் முதல்வர் பதிலுரையுடன், இன்றுடன் முடிவடையும் நிலையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை, சபாநாயகர், கூட்டத்தொடர் முழுவதும் நீக்கி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். விதிப்படி, கூட்டத்தொடர் முழுவதும் என்றால், கூட்டம் முடிந்ததாக கவர்னர் மூலம் அறிவிக்கப்படும் வரை, நீக்கப்படுவதாக பொருள்படும் என்று கூறப்படுகிறது. சபையில் இருந்தவர்கள் மீது தான் நடவடிக்கை என்பதால், சபைக்கு வராத, ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் இன்று பங்கேற்பர் என, கூறப்படுகிறது.