தனியார் பேருந்து மோதி இரண்டு மாணவர்கள் பலி :ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திருத்தணி: பள்ளி மாணவர்கள் மீது, தனியார் பேருந்து மோதிய விபத்தில், இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்தணி அடுத்த, கனகம்மாசத்திரம் அருகே நிஜாம்பட்டு காலனியைச் சேர்ந்தவர்கள் ஷேக், மகன் வெங்கடேசன், 16, மைனர் மகன் பிரதீப், 16. இவர்கள் இருவரும் கனகம்மாசத்திரம் அரசு மேனிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனர். வரலாறு பிரிவு பாடம் படித்து வந்த இருவரும், நேற்று காலை, பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த சைமன், 18 என்பவர் இருசக்கர வாகனத்தில் (டிஎன்.20 பிசி2903) சென்று கொண்டிருந்தார். பள்ளி அருகே தன் நண்பர்கள் நின்று கொண்டிருந்ததை கண்ட அவர், எரிவாயு உருளை "புக்கிங்' செய்ய செல்வதாக கூறி, இருவரையும் ஏற்றிக் கொண்டு ராமஞ்சேரி சென்றார்.
அங்கு தனியார் எரிவாயு உருளை பதியும் அலுவலகம் அருகே, இருவரையும் நிற்க வைத்து, சைமன் அலுவலகம் உள்ளே சென்றார்.
அப்போது சாலைப் பணிக்காக ஜல்லிக்கற்கள் ஏற்றிக் கொண்டு, திருவள்ளூர் நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. அதேநேரத்தில், தாம்பரம், ராமஞ்சேரி வழியாக திருத்தணிக்கு தனியார் பேருந்து எதிரே வந்தது.
கண் இமைக்கும் நேரத்தில், இருசக்கர வாகனம் அருகே நின்று கொண்டிருந்த இருவர் மீது, தனியார் பேருந்து, அசுர வேகத்தில் வந்து மோதியது.
லாரி மோதிய வேகத்தில், ஒரு மாணவர் தலை நசுங்கியும், மற்றொருவர் உடல் மூன்று துண்டுகளாக சிதறியது. பேருந்து ஓட்டுனர், நடத்துனர், பரிசோதகர் மற்றும் பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி, தலை தெறிக்க ஓடினர். தகவலறிந்து கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டனர்.
சாலை மறியல்
இவ்விபத்து குறித்து, அறிந்த கிராம மக்கள், தப்பி ஓடிய பேருந்து டிரைவரை கைது செய்ய வேண்டும். இறந்த மாணவர்களுக்கு நிவாரண உதவி, வேகத்தடை ஆகியவற்றை வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேருந்தின் கண்ணாடிகளை அவர்கள் அடித்து நொறுக்கினர். திருவள்ளூர் கூடுதல் ஆட்சியர் ரவிக்குமார், திருத்தணி ஏ.எஸ்.பி., விஜயகுமார் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், "விபத்து நடந்த பகுதியில் வேகத்தடை அமைக்கவும், விபத்து ஏற்படுத்திய பேருந்து டிரைவரை கைது செய்யவும், இறந்த மாணவர்களுக்கு தனியார் பேருந்து உரிமையாளர் மூலம் நிவாரணத் தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் உறுதி அளித்ததால், திருப்தி அடைந்த மக்கள் சமாதானமடைந்து கலைந்து சென்றனர். இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
விபத்தில் இறந்த மாணவர்கள் குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் காந்தி கூறுகையில், "விபத்தில் இறந்த பிரதீப், இரண்டு நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. வெங்கடேசன் இன்று பள்ளிக்கு வரவில்லை மாணவர்கள் இறந்ததால், பள்ளிக்கு விடுமுறை அளிக்கலாமா என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் கேட்டதற்கு, பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டாம், மாலை பள்ளி நேரம் முடிந்தவுடன், மாணவர்களை ஒன்று கூட்டி இறந்த மாணவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்த வலியுறுத்தினார்' என்றார்.

தமிழக கடலோர காவல் படையினரை
உதவிக்கு அழைக்கலாம்: சைலேந்திரபாபு

மரக்காணம்:
"கடலோரப் பகுதிகளில் எந்த ஒரு அசம்பாவிதம் நடந்தாலும், உதவிக்கு, தமிழ்நாடு கடலோர காவல் படையை தொடர்பு கொள்ளலாம்' என, ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு தெரிவித்தார்.
சென்னையில் இருந்து, இ.சி.ஆர்., வழியாக, கன்னியாகுமரிக்கு, தமிழ்நாடு கடலோர காவல் படையைச் சேர்ந்த 30 போலீசாருடன், ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு, சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில், சைலேந்திரபாபு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும்போது ஏற்படும் அசம்பாவிதங்கள் மற்றும் இயற்கை சீற்றங்கள், தீவிரவாதிகள் ஊடுருவல் போன்ற சம்பவங்களை கையாளும் விதம் குறித்து, பொதுமக்களுக்கு விளக்கி வருகிறோம். இது போன்ற சம்பவங்களின் போது, உள்ளூர் காவல் துறை, வருவாய் துறை, மீன்வளத் துறை ஆகிய அதிகாரிகளிடம் தகவல் கூறிய பின்னரே, கடலோர காவல் படைக்கு தகவல் கொடுக்கின்றனர். இதனால் காலதாமதம் ஏற்படுகிறது.
கடலோரப் பகுதிகளில் எந்த ஒரு அசம்பாவிதம் நடந்தாலும், எங்களது இலவச டெலிபோன், "1093' என்ற எண்ணில் உடனடியாக தொடர்பு கொண்டால், அடுத்த சில நிமிடங்களில் அதிவிரைவு படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் சம்பந்தப்பட்ட பகுதிக்கு எங்கள் பாதுகாப்பு படையினர் வந்துவிடுவர்.
கன்னியாகுமரியில் மீனவர்கள் காணவில்லை என புகார் வந்த உடனே, ஹெலிகாப்டர் மூலம் விரைந்து சென்று கண்டுபிடித்தோம். இந்த சைக்கிள் பேரணி, மீனவக் கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகிறது. இந்த பேரணியில், இந்திய கடலோர காவல் படை அதிகாரி பிரேம் கலந்து கொண்டுள்ளார்.
இவ்வாறு, சைலேந்திரபாபு கூறினார்.

வாலடி - அரியலூர் இரு வழி ரயில் பாதை பணி தீவிரம்

விழுப்புரம்:விழுப்புரம் ரயில்வே குடியிருப்பு பகுதியில் கார்டு, ஓட்டுனர்களுக்கான ஓய்வறை கட்டடத்தை, திருச்சி கோட்ட மேலாளர் மஞ்சுளா ரங்கராஜன் திறந்து வைத்தார். விழுப்புரம் ரயில் நிலைய பிளாட்பாரப் பகுதிகளை ஆய்வு செய்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
விழுப்புரம் - திண்டுக்கல் வரை இரு வழி ரயில் பாதை அமைக்கும் பணிகள் முதற்கட்டமாக, வாலடி - கல்லக்குடி பனங்காநத்தம் வரை முடிவு பெறும் நிலையில் உள்ளன. இதில் ஆய்வு முடிந்தவுடன், இந்த தடத்தில் சோதனை ரயில் ஓட்டம் இயக்கப்படும்.
இரண்டாம் கட்டமாக, விழுப்புரம் - விருத்தாசலம் - அரியலூர் வரை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகள் இந்தாண்டிற்குள் முழுமையடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
விழுப்புரம் - வேலூர் - மயிலாடுதுறை மார்க்கமாக, விரைவில் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்படும்.
இவ்வாறு, கோட்ட மேலாளர் மஞ்சுளா ரங்கராஜன் தெரிவித்தார்.
***

நாளை ரயில் மறியல் போராட்டம்
விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

தஞ்சாவூர்:
"வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு, உடனடியாக நிவாரணம் அறிவிக்க வலியுறுத்தி, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில், நாளை சாலை, ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்' என, விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகாவிலுள்ள ஆம்பலாப்பட்டு கிராமத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டம் நடந்தது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததாலும், காவிரிநீரை வழங்காமல் கர்நாடகா கைவிரித்ததாலும் விவசாயம் பாதித்து, கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. அதனால், டெல்டா மாவட்டங்களில் நெல் உற்பத்தி கடுமையாக பாதித்ததோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படுகிறது.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள், நாளை நடத்தப்படும்.
அடுத்த கட்டமாக, அனைத்து மாவட்டங்களின் தாலுகா தலைநகரங்களில், பிப்., 19ம் தேதி சட்டை நீக்கிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். நடப்பு சட்டசபை கூட்டத்திலேயே, விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை, தமிழக அரசு அறிவிக்க வேண்டும். விவசாய குத்தகை நிலுவை தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய நிலங்களை, வேறு பயன்பாட்டுக்கு கையகப்படுத்தும் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என, அரசை வலியுறுத்துவது என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
10ம் வகுப்பு வரையான பாட புத்தகங்கள் தட்டுப்பாடு
* டி.இ.டி., தேர்வு எழுதுவோர் திண்டாட்டம்

-நமது நிருபர்-
பத்தாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் கிடைப்பதில், கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில், டி.இ.டி., தேர்வு நடைபெற இருப்பதால், தேர்வெழுதத் திட்டமிட்டுள்ள தேர்வர்கள், பாடப் புத்தகங்கள் கிடைக்காமல், திண்டாடி வருகின்றனர்.
தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், பள்ளி மாணவ, மாணவியருக்கு தேவையான பாடப் புத்தகங்களை, அச்சிட்டு வழங்குகிறது. இதில், எந்த தட்டுப்பாடும் ஏற்படவில்லை.
அரசு பள்ளி மாணவர், அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர் மற்றும் தனியார் பள்ளி மாணவர் என, அனைத்து தரப்பு மாணவ, மாணவியருக்கும், 8 கோடி பாடப் புத்தகங்களை, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் அச்சிட்டு வழங்குகிறது.
சென்னை, கல்லூரி சாலையில் உள்ள பாடநூல் கழக அலுவலகத்தில், எப்போது சென்றாலும், பாடப் புத்தகங்கள், விற்பனைக்கு கிடைக்கும். ஆனால், சமீப காலமாக, ஆசிரியர் போட்டித் தேர்வுகள், அதிகளவில் நடந்து வருவதால், பாடப் புத்தகங்களுக்கு, அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
போட்டித் தேர்வுகளுக்கு, "கோச்சிங் சென்டர்'களையே, தேர்வர், நம்பி இருக்கின்றனர். கோச்சிங் சென்டர்களும், புற்றீசல் போல், மாநிலம் முழுவதும், பரவி இருக்கின்றன. எனினும், அனைத்து கோச்சிங் சென்டர்களும், தரமானவையாக இருப்பதில்லை.
கடந்த ஆண்டு ஜூலையில், முதல் டி.இ.டி., தேர்வு அறிவிக்கப்பட்ட போது, கோச்சிங் சென்டர்களை, தேர்வர்கள் முண்டி அடித்தனர். அந்த தேர்வை, 6 லட்சம் பேர் எழுதியபோதும், வெறும், 2,448 பேர் மட்டுமே, தேர்வு பெற்றனர்.
இதனால், கோச்சிங் சென்டர்கள் மீதான நம்பிக்கையை, தேர்வர்கள் இழந்துள்ளனர். புதுவிதமான முறையில், கேள்விகள் கேட்டதையும், முக்கியமாக, பாடப் புத்தகங்களில் உள்ள கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, கேள்விகள் கேட்டதையும், கோச்சிங் சென்டர்கள் எதிர்பார்க்கவில்லை.
முதல் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்கள், பாடப் புத்தகங்களை படித்ததால் தான், வெற்றி பெற முடிந்தது என்ற கருத்தை தெரிவித்தனர். தேர்வர்களும், பாடப் புத்தகங்களின் மகத்துவத்தை உணர்ந்தனர்.
இதனால், கடந்த ஆண்டு, அக்டோபரில் நடந்த இரண்டாவது டி.இ.டி., தேர்வின் போது, பாடப் புத்தகங்கள் விற்பனை, சக்கை போடு போட்டது. இரண்டாவது தேர்வில், 18 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில், ஏப்ரலுக்குள், மூன்றாவது டி.இ.டி., தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வின் மூலம், 15 ஆயிரம் ஆசிரியர் தேர்வு செய்யப்பட உள்ளதால், தேர்வை எழுதுவதற்கு, 6 லட்சம் பட்டதாரிகள், தயாராக உள்ளனர். இவர்கள், கோச்சிங் சென்டர்களை நம்பாமல், பாடப் புத்தகங்களை புரட்டுவதில், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பாடப் புத்தகங்கள் வாங்குவதற்காக, தினமும், பாடநூல் கழக அலுவலகத்திற்கு, ஏராளமானோர் வருகின்றனர். ஆனால், பாடப் புத்தகங்கள், இருப்பு இல்லாததைக் கண்டு, ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
இது குறித்து, பாடநூல் கழக வட்டாரங்கள் கூறியதாவது:
மாணவ, மாணவியரை கருத்தில் கொண்டு தான், பாடப் புத்தகங்களை அச்சிடுகிறோம். பெரிய அளவிற்கு, புத்தகங்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன், புத்தகங்களை அச்சிடுவதில்லை.
ஆனால், ஆசிரியர் போட்டித் தேர்வுகள் காரணமாக, பாடப் புத்தகங்கள் தேவை அதிகரித்துள்ளது. வரும் கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி துவங்க உள்ளது. புத்தகங்களில் உள்ள, சிறு சிறு பிழைகள் சரி செய்யப்பட்டு வருகின்றன.
மாணவ, மாணவியருக்கு, பிழையின்றி, தரமான பாடப் புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவே, ஏற்கனவே அச்சிடப்பட்ட, பழைய புத்தகங்கள், சிறிதளவே இருப்பு இருந்தன. அவற்றை, ஏற்கனவே விற்பனை செய்து விட்டோம்.
ஆனாலும், விற்பனை பிரதிகள் தேவை அதிகரித்துள்ளன. திடீரென, அதிகளவு புத்தகங்கள் தேவை எனில், நாங்கள் என்ன செய்ய முடியும்? விற்பனைக்கு என, தனியாக அச்சடித்து, இப்போது வழங்க முடியாது. புதிய புத்தகங்கள் வரும் வரை, காத்திருக்கத் தான் வேண்டும்.
இவ்வாறு, பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
புத்தகங்கள் தட்டுப்பட்டால், பழைய புத்தகங்களைத் தேடி, தேர்வர்கள் அலைகின்றனர். சென்னை, திருவல்லிக்கேணி பகுதிகளில் உள்ள சில கடைகளில், பாடப் புத்தகங்களை நகல் எடுத்து வைத்து, அதிக விலைக்கு, விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், திருவல்லிக்கேணி கடைகளிலும், தேர்வர்கள், ஏறி, இறங்கி வருகின்றனர்.

கோழிகளை தாக்கும் புதிய நோய்
தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி தீவிரம்

சென்னை, பிப்.8-
கோழிகளை தாக்கும், புதிய நோய்க்கான, தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. இதற்கு, அரசு, 22 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில், கோழி வளர்ப்பு அபரிமிதமாக வளர்ச்சியடைந்து வருகிறது. புழக்கடை கோழி வளர்ப்பாக மட்டுமே இருந்த, கோழி வளர்ப்பு, 30 ஆண்டுகளில், பெரிய தொழிலாக மாறியுள்ளது.
கோழி வளர்ப்பு அதிகம் இருக்கும் ஊர்களான, கோவை, நாமக்கல், பல்லடம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், கோழிகள், நச்சுயிரி நோய்களால், அதிகளவில், பாதிக்கப்படுகின்றன.
முன், வெள்ளை கழிச்சல், அம்மை நோய், சளி நோய் என, பலவித நோய்களால், கோழிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டன. பின், இந்நோய்களிலிருந்து கோழிகளை பாதுகாக்க, தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு, கோழிகளின் இறப்பு கணிசமாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன், சிறிய மூச்சு குழல் அழற்சி நோயால், அதிகளவில், கோழிகள் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டது. இந்நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு, மூச்சுக் குழல் வீக்கம் ஏற்பட்டு, சுவாசிக்க சிரமம் ஏற்படுகிறது.
இதனால், முட்டை உற்பத்தியிலும் வீழ்ச்சி ஏற்பட்டது. இந்நோயால் பாதிக்கப்படும் கோழி குஞ்சுகள், மூச்சு குழலின் வீக்கத்தால், சுவாசிக்க முடியாமல், இறந்து விடுகின்றன.
இந்நோயிலிருந்து, கோழிகளை பாதுக்கும் பொருட்டு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், புதிய தடுப்பூசியை கண்டறியும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, அரசு, 22 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து, கால்நடை நல கல்வி மைய இயக்குனர் புருஷோத்தமன் கூறியதாவது:
கோழிகளை தாக்கும் புதிய வகையான, நச்சுயிரியை கண்டறியும் பணி, மாதவரம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக, மத்திய ஆய்வு கூடத்தில் நடந்து வருகிறது. இந்த ஆய்வில், கால்நடை மருத்துவ நுண்ணுயிரியல் துறை விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட கோழியின், நுரையீரல், மூச்சு குழல் ஆகியவற்றிலிருந்து நச்சு கிருமியை பிரித்து எடுத்து, அதன் தன்மையறிந்து, ஏற்கனவே உள்ள கிருமியுடன் எவ்வாறு மாறுபட்டுள்ளது என்பதை கண்டறியும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு புருஷோத்தமன் கூறினார்.
கல்வித்துறையில் கருணை அடிப்படையில் பணி
நியமன உத்தரவு கிடைக்காமல் 900 பேர் காத்திருப்பு

-நமது சிறப்பு நிருபர்-

பள்ளி கல்வித்துறையில், கருணை அடிப்படையில் பணி பெற, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, 900 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். பணி ஒதுக்சடு செய்த, 541 பேர், பணி நியமன உத்தரவு கிடைக்காமல், பல மாதங்களாக தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள், பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர்கள், பணி காலத்தில் இறந்தால், அவர்களின் வாரிசுகளில் ஒருவருக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும்.
இவர்களுக்கு, இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவியிடங்கள் ஒதுக்கப்படுகின்றன. 1997ம் ஆண்டு வரை, இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு, வேலை ஒதுக்சடு செய்யப்பட்டுள்ளது.
அதன் பின், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி ஒதுக்சடு செய்யப்படவில்லை. இவ்வரிசையில், இதுவரை, 1,300க்கும் மேற்பட்டோர் பேர், காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்களில், 541 பேருக்கு, தற்போது பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன், புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இதில், கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கும் பணி நியமன உத்தரவு வழங்குவதாக இருந்தது; ஆனால்,வழங்கப்படவில்லை.
பள்ளி கல்வித்துறையில், காலியாகவுள்ள, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட, பணியிடங்களுக்கு, "கவுன்சிலிங்' அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். "பணி ஒதுக்சடு செய்த எங்களுக்கும், உடனடியாக பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும்' என, வாரிசுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் பால்ராஜ் கூறியதாவது:
கருணை அடிப்படையில், அரசுப்பணி பெற,10 ஆண்டுகளுக்கும் மேலாக பலரும் காத்திருக்கின்றனர். தேர்வு செய்யப்பட்டோர், பணி நியமன உத்தரவு பெறாமல் தவிக்கின்றனர். இது குறித்து, பள்ளி கல்வித்துறை பணியாளர் தொகுதி இணை இயக்குனர் கண்ணப்பன், ஆணையாளரிடம் தெரிவித்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இப்பிரச்னையில், முதல்வர் தலையிட்டு, வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

10ம் வகுப்பு செய்முறைத்தேர்வு அறிவிப்பு

சென்னை:
பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான செய்முறைத் தேர்வை, இம்மாதம், 20ம் தேதி முதல், 28ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார்.
அவரது அறிவிப்பு:
மார்ச்சில் நடக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, நேரடி தனி தேர்வராக எழுதும் மாணவ, மாணவியர், அறிவியல் பாட செய்முறை வகுப்புகளில் கலந்துகொண்ட பள்ளிகளிலேயே நடக்கும் செய்முறைத் தேர்விலும் பங்கேற்க வேண்டும்.
செய்முறைத் தேர்வுகள், இம்மாதம், 20ம் தேதி மதல், 28ம் தேதி வரை, சனிக்கிழமை உட்பட, அனைத்து வேலை நாட்களிலும், காலை, மாலை என, இரு வேளைகளிலும் நடக்கும்.
செய்முறைத் தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்'டை, சம்பந்தபட்ட, மாவட்ட கல்வி அலுவலர்களிடம், இம்மாதம், 18ம் தேதி முதல், 20ம் தேதி வரை, பெற்றுக் கொள்ளலாம்.
செய்முறை வகுப்புகளில் கலந்து கொண்டதற்கான, செய்முறை நோட்டு புத்தகத்தை, செய்முறைத் தேர்வு மையத்தில், காட்ட வேண்டும். புகைப்படத்துடன் கூடிய, "ஹால் டிக்கெட்' பெறும் தேர்வர் மட்டுமே, எழுத்து தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் பயிலும், 10 லட்சம் மாணவ, மாணவியருக்கான செய்முறைத் தேர்வு தேதி குறித்து, அறிவிப்பில் இடம்பெறவில்லை.
இதுகுறித்து, இயக்குனர் கூறுகையில், "பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கும், மேற்கண்ட தேதிகளில் தான், செய்முறைத் தேர்வு நடக்கும்' என, தெரிவித்தார்.
***

பவர் பத்திரம் மூலம் சொத்து பரிவர்த்தனைக்கு புது கட்டுப்பாடு
*மோசடியை தடுக்க பதிவுத்துறை நடவடிக்கை
சிவகங்கை,பிப். 8-
பொது அதிகார ஆவணங்களை (பவர் பத்திரங்களை) பயன்படுத்தி, சொத்து விற்பனையை பதிவு செய்யும் போது, "பவர்' கொடுத்தவர், உயிருடன் இருப்பதை உறுதி செய்வதற்கான, மருத்துவ சான்றிதழ் கட்டாயமாக இருக்க வேண்டும் என, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
வீடு, மனை போன்ற அசையா சொத்துக்கள் தொடர்பான பரிவர்த்தனையில், அதன் உரிமையார் தான் விற்பனை செய்ய வேண்டும். எல்லாராலும் நேரடியாக பரிவர்த்தனை செய்ய முடியாது என்பதால், பொது அதிகார ஆவணம் பயன்பாட்டுக்கு வந்தது.
உரிமையாளர்கள், தங்கள் சார்பாக, அந்த குறிப்பிட்ட சொத்தை விற்பது, மேம்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள, தங்களுக்கு நம்பகமானவர்களுக்கு அதிகாரம் அளிப்பர். இது பொது அதிகார ஆவணம் எனப்படும்.
மோசடி
ஆனால், அண்மைக்காலமாக, நிலங்களை வாங்கி, விற்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், சொத்தின் உரிமையாளரை அணுகி, ஒரு குறிப்பிட்ட விலையை பேசி, அந்தத் தொகைக்கு தங்கள் பெயரில் கிரைய பத்திரம் பதிவு செய்யாமல், பவர் பத்திரம் மட்டும் வாங்கி கொள்கின்றனர்.
இந்த ஆவணத்தை பயன்படுத்தி, தங்கள் விருப்பம் போல், அதிகபட்ச விலைக்கு சொத்துக்களை விற்கின்றனர். சிலர், சில ஆண்டுகள் கழித்து கூட சொத்தை விற்கலாம். அப்போது பவர் கொடுத்தவர் உயிருடன் இருந்தால் மட்டுமே பவர் பத்திரம் செல்லும்.
ஆனால், பல இடங்களில் பவர் கொடுத்தவர் இறந்த நிலையிலும், சொத்துக்கள் விற்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
சுற்றறிக்கை
இதைக்கருத்தில் கொண்டு, பவர் பத்திர அடிப்படையில் சொத்து பரிவர்த்தனையை பதிவு செய்யும் நடைமுறைகளுக்கு சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, பதிவுத்துறை தலைமையகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பவர் பத்திரத்தின் அடிப்படையில், அதிகாரம் பெற்ற முகவரால் மேற்கொள்ளப்படும் சொத்து பரிமாற்றத்தை பதிவு செய்யும்போது, பவர் கொடுத்தவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்றிதழ், கட்டாயம் இருக்க வேண்டும்.
அந்த சான்றிதழில், பவர் கொடுத்தவரின் புகைப்படம், கையொப்பத்துடன் பதிவு பெற்ற மருத்துவ அலுவலர் அல்லது மத்திய, மாநில அரசின், "ஏ' பிரிவு அதிகாரி, தேதியுடன் சான்றளித்திருக்க வேண்டும்.
இந்த சான்றிதழ், 2013 பிப்., 1 க்கு பின், பெறப்பட்டதாக இருக்க வேண்டும். சொத்து பதிவு செய்யப்படும் நாளுக்கு, 30 நாள்களுக்குள் இச்சான்று வாங்கப்பட்டிருக்க வேண்டும்.
இத்தகைய சான்றின் அசலை ஆய்வு செய்து, அதன் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதியை பதிவு செய்யப்படும் ஆவணத்துடன் இணைக்க வேண்டும்.
பொது அதிகார ஆவணங்கள் மூலம் கிரையம் பெறப்படும் ஆவணங்களுக்கு, இத்தகைய சான்று தேவையில்லை. நிறுவனங்களால் கொடுக்கப்படும் அதிகார ஆவணங்களுக்கு இது பொருந்தாது.
பவர் கொடுக்கப்பட்ட, 30 நாள்களுக்குள் பதிவு செய்யப்படும் பரிவர்த்தனை ஆவணங்களுக்கு இது தேவையில்லை. வெளி நாடுகளில் வசிப்பவர் எழுதி கொடுக்கும் பவர் பத்திரங்களுக்கு, இச்சான்று அவசியம்.
இதற்கான விவரங்களை பொது அதிகார ஆவணங்களை பதிவு செய்ய வருவோர், அதன் அடிப்படையில் பரிவர்த்தனை ஆவணங்களை பதிவு செய்ய வருவோருக்கும் அதிகாரிகள் இந்த விவரத்தை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழநி கோவில் உண்டியல் திறப்பு
3 நாட்களில் ரூ.3.37 கோடி வசூல்
பழநி:
பழநி கோவில், தைப்பூசத் திருவிழா உண்டியல் வசூல், 3 கோடியை 37 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயை எட்டியது.
பழநி கோவில் உண்டியல்கள், பிப்., 5ல் திறக்கப்பட்டு, மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில், மூன்று நாட்களாக எண்ணப்பட்டன. நேற்றைய எண்ணிக்கையில், ரொக்கம் 35 லட்சத்து 64 ஆயிரத்து 290 ரூபாய். தங்கம், 163 கிராம். வெள்ளி, 2 ஆயிரத்து 665 கிராம் கிடைத்துள்ளன.
நவ தானிய உண்டியல்களில், நெல், 4 ஆயிரத்து 500 கிலோ, மக்காசோளம், 66 கிலோ, நிலக்கடலை, 119 கிலோ கிடைத்துள்ளன. மிளகாய், மஞ்சள் கிழங்குகளும், காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
தங்கத்தாலான வேல், திருமாங்கல்யம், செயின், மோதிரம், வெள்ளி வேல், கொலுசு, ஆள்ரூபம், வீடு மற்றும் பித்தளை மணி, வேல் காணிக்கையாக, செலுத்துப்பட்டிருந்தது.
கடந்த, 3 நாட்களில், ரொக்கம் 3 கோடியே 37 லட்சத்தி, 95 ஆயிரத்து 820 ரூபாயும், தங்கம், 1141 கிராம், வெள்ளி 18 ஆயிரத்து 215 கிராம் கிடைத்துள்ளன.
சிறப்பு காவல் இளைஞர் படை அமைக்க
சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் முதல்வர்

சென்னை:
தமிழகத்தில் சிறப்பு காவல் இளைஞர் படையை அமைப்பதற்கான சட்ட மசோதாவை, முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் நேற்று அறிமுகம் செய்தார்.
"தமிழகத்தில் போலீசாருக்கு உதவும் வகையில், சிறப்பு காவல் இளைஞர் படை அமைக்கப்படும்' என, கடந்த சட்டசபை கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
தொடர்ந்து, இதற்கான தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் சட்ட மசோதாவை, முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் நேற்று அறிமுகம் செய்தார். இச்சட்டத்தின் படி, படையை கண்காணிக்கும் பணி, மாவட்ட அளவிலான அதிகாரிக்கு வழங்கப்படுகிறது.
சட்டத்தின் படி அளிக்கப்பட்ட, தகுதிகளை பெற்றிருந்தாலன்றி, இளைஞர் படையில் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள். இப்படையின் வீரர் ஒவ்வொருவரும், வகுக்கப்பட்ட மதிப்பூதியம் பெறுவர். தமிழகத்தில் எந்த பகுதியிலும் பணியாற்றும் கடமையுடையவர்களாக இருத்தல் வேண்டும்.
விடுப்பில், இடைநீக்கத்தில் இருந்தாலொழிய, மற்ற நேரத்தில் இந்த சட்டத்தின் நோக்கப்படி, எப்போதும் எந்த இடத்திலும் பணியமர்த்தப்படுவர்.
இளைஞர் படையின் உறுப்பினர் ஒவ்வொருவரும், வகுக்கப்பட்ட காலத்தில், பயிற்சி பெற வேண்டும். பயிற்சியை முடிக்கும், இளைஞர் படையினர், சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால், காவலர் பணியிடங்களுக்கான சிறப்பு தேர்வை எழுதலாம்.
இச்சட்டத்தின் படி, அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர், எழுத்து மூலம், பொது நலன் கருதி, இளைஞர் படையின் உறுப்பினரை பணியில் இருந்து நீக்கலாம்.
மேல் அதிகாரியால் வழங்கப்படும் உத்தரவால் பாதிக்கப்படுபவர்கள், உத்தரவிடப்பட்ட, 30 நாட்களுக்குள், அதிகார அமைப்பிற்கு முறையீடு செய்யலாம், மேல் முறையீட்டு அதிகார அமைப்பின் முடிவே, இறுதியானது. கோர்ட் எதிலும் கேள்வி எழுப்ப முடியாது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வார விடுமுறை வேண்டும்
ரயில் இன்ஜின் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை:
"ரயில் டிரைவர்கள் பணி நேரத்தை, ஆறு மணி நேரமாக குறைக்க வேண்டும். வார விடுமுறை வேண்டும்' என, வலியுறுத்தி, அகில இந்திய ரயில் ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில், நேற்று கோரிக்கை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
சென்னை சென்ட்ரல், மூர்மார்க்கெட் ரயில் நிலையம் முன்பாக, நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய ரயில் ஓட்டுனர்கள் சங்கத்தின், தெற்கு ரயில்வே பொதுச்செயலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சென்னை ரயில்வே கோட்ட பொதுச்செயலர் பாலச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
ரயில் ஓட்டுனர்கள் தினம், 12 லிருந்து 13 மணி நேரம் வரை, பணிபுரிய வேண்டியுள்ளது. இதனால், மனித தவறுகள், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பணி நேரத்தை, ஆறு மணி நேரமாக குறைக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள், ஓய்வு வழங்க வேண்டும்.
தற்போது, வாரத்தில் ஆறு இரவுகள் ரயில் இயக்க வேண்டியுள்ளது. இதனாலும், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், வாரத்தில், இரண்டு இரவுகள் மட்டுமே, பணி செய்யும் வகையில், வேலை நேரம் மாற்றியமைக்கப்பட வேண்டும். சரக்கு ரயில் ஓட்டுனர்கள் குறித்த நேரத்தில், குறித்த இடத்தில் பணி முடித்து செல்ல, வரையறை செய்யப்படவேண்டும்.
ரயில் இன்ஜின் அறை என்பது ஒரே மாதிரி அமைப்புகளில் இல்லை. வெவ்வேறு விதமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இதனால், நெருக்கடி நேரத்தில் ரயில் இயக்குவதற்கு, ஓட்டுனர்களுக்கு, திடீர் தடுமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலை தவிர்க்கப்பட, ரயில் இன்ஜின் அறை, ஒரே மாதிரி வடிவமைக்கப்பட்டு, அதில், "ஏசி' வசதி செய்து தரப்பட வேண்டும். கழிப்பறை வசதியும் தேவை.
பணியிடங்களில் உள்ள, குறைபாடுகளை போக்குவதற்கு, ரயில்வே வாரிய உத்தரவு ஏற்கனவே உள்ளது. அதை அமல்படுத்த வேண்டும்.
மொத்தம், 14 கோரிக்கைகளுடன் நடத்தப்பட்ட, ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட, ரயில் ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். சென்னை சென்ட்ரல், திருவொற்றியூர், அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டையில்,
ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

"அரசின் கொள்கை முடிவு என்ற பெயரில்
சுற்றுச்சூழல் விதிகளை புறக்கணிக்க கூடாது'

சென்னை:
""போக்குவரத்து மிகுந்த அண்ணாசாலைக்கு அருகில், அரசு, பல்நோக்கு மருத்துவமனை அமைக்க முயல்வது, சுற்றுச்சூழல் சட்ட விதிகளுக்கு எதிரானது,'' என, வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.
சென்னை, அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கும், மருத்துவமனை செயல்பாடுகளுக்கும், தேசிய பசுமை தீர்ப்பாய சென்னை பெஞ்ச், நேற்று முன்தினம், இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில், புதிய கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவதற்கு, மாநில அளவிலான சுற்றுப்புறச்சூழல் ஆய்வு ஆணையம், வழங்கிய ஒப்புதலை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், வழக்கறிஞர் வீரமணி தாக்கல் செய்த மனு, தீர்ப்பாய சென்னை பெஞ்ச் முன் நேற்று மாலை, 3:00 மணியளவில், மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடந்த விசாரணையில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், தனது வாதங்களை முன் வைத்தார்.
வழக்கறிஞர் வில்சன்: ஒரு கட்டடம் கட்ட தேர்ந்தெடுக்கப்படும் காலி நிலத்திற்கு தான், மாநில அளவிலான சுற்றுச்சூழல் ஆய்வு ஆணையத்தின் தடையில்லா சான்றிதழ் பெற முடியும்.
ஆனால், சென்னை, அரசினர் தோட்டத்தில், ஏற்கனவே கட்டப்பட்ட கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற, நடைமுறைக்கு மாறாக, இரண்டாவது முறை, தடையில்லா சான்றிதழ் தரப்பட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, மருத்துவமனையாக மாற்றினால், அந்த வளாகத்தில், தண்ணீர் பயன்பாடு அதிகரிக்கும். இதனால், சுற்றுவட்டார பகுதியில், நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. மருத்துவக் கழிவுகளால், காற்று மாசு ஏற்படும்.
சுற்றுச்சூழல் சட்ட விதிப்படி, மருத்துவமனை வளாகம் அமையும் இடத்தில் இருந்து, 100 மீட்டர் சுற்றளவிற்கு, ஒலி மாசு ஏற்படும் சூழல் இருக்கக்கூடாது.
அண்ணா சாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை மற்றும் ஆடம்ஸ் சாலை ஆகிய நான்கு சாலைகளின் சந்திப்பிற்கு அருகில், பல்நோக்கு மருத்துவமனையை அமைத்தால், அது, சுற்றுச்சூழல் விதிகளுக்கு எதிராக அமையும்.
தீர்ப்பாய உறுப்பினர் பேராசிரியர் நாகேந்திரன்: ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட சென்னையின் பெரும்பாலான மருத்துவமனைகள், சாலைக்கு அருகில் தான் அமைந்துள்ளன. அவற்றை எல்லாம் மூட சொல்லலாமா?
வில்சன்: நீங்கள் குறிப்பிடும் மருத்துவமனைகள், பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. புதிதாக அமைக்கப்படும் மருத்துவமனைகள், சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றி அமைக்கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். கொள்கை முடிவு என்ற பெயரில், தமிழக அரசு, சுற்றுச்சூழல் சட்ட விதிகளை புறக்கணிக்கக் கூடாது.
தீர்ப்பாய நீதிபதி சொக்கலிங்கம்: இந்த கட்டடத்தை, சட்டசபை, தலைமைச் செயலகம் தவிர, வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்கிறீர்களா?
வில்சன்: அரசின் கொள்கை முடிவிற்குள் செல்ல விரும்பவில்லை. சுற்றுச்சூழல் சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் வாதம்.
வழக்கு விசாரணை, இன்று, மதியம், 12:00 மணிக்கு தொடர்கிறது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்