சென்னை:தமிழகத்தில் சிறப்பு காவல் இளைஞர் படையை அமைப்பதற்கான சட்ட மசோதாவை, முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் நேற்று அறிமுகம் செய்தார்.
"தமிழகத்தில்
போலீசாருக்கு உதவும் வகையில், சிறப்பு காவல் இளைஞர் படை அமைக்கப்படும்'
என, கடந்த சட்டசபை கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
தொடர்ந்து,
இதற்கான தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் சட்ட மசோதாவை, முதல்வர் ஜெயலலிதா,
சட்டசபையில் நேற்று அறிமுகம் செய்தார். இச்சட்டத்தின் படி, படையை
கண்காணிக்கும் பணி, மாவட்ட அளவிலான அதிகாரிக்கு வழங்கப்படுகிறது.
சட்டத்தின்
படி அளிக்கப்பட்ட, தகுதிகளை பெற்றிருந்தாலன்றி, இளைஞர் படையில்
தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள். இப்படையின் வீரர் ஒவ்வொருவரும்,
வகுக்கப்பட்ட மதிப்பூதியம் பெறுவர். தமிழகத்தில் எந்த பகுதியிலும்
பணியாற்றும் கடமையுடையவர்களாக இருத்தல் வேண்டும்.
விடுப்பில்,
இடைநீக்கத்தில் இருந்தாலொழிய, மற்ற நேரத்தில் இந்த சட்டத்தின் நோக்கப்படி,
எப்போதும் எந்த இடத்திலும் பணியமர்த்தப்படுவர்.
இளைஞர் படையின்
உறுப்பினர் ஒவ்வொருவரும், வகுக்கப்பட்ட காலத்தில், பயிற்சி பெற வேண்டும்.
பயிற்சியை முடிக்கும், இளைஞர் படையினர், சீருடை பணியாளர் தேர்வு
வாரியத்தால், காவலர் பணியிடங்களுக்கான சிறப்பு தேர்வை எழுதலாம்.
இச்சட்டத்தின்
படி, அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர், எழுத்து மூலம், பொது நலன் கருதி, இளைஞர்
படையின் உறுப்பினரை பணியில் இருந்து நீக்கலாம்.
மேல் அதிகாரியால்
வழங்கப்படும் உத்தரவால் பாதிக்கப்படுபவர்கள், உத்தரவிடப்பட்ட, 30
நாட்களுக்குள், அதிகார அமைப்பிற்கு முறையீடு செய்யலாம், மேல் முறையீட்டு
அதிகார அமைப்பின் முடிவே, இறுதியானது. கோர்ட் எதிலும் கேள்வி எழுப்ப
முடியாது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.