சென்னை:""போக்குவரத்து
மிகுந்த அண்ணாசாலைக்கு அருகில், அரசு, பல்நோக்கு மருத்துவமனை அமைக்க
முயல்வது, சுற்றுச்சூழல் சட்ட விதிகளுக்கு எதிரானது,'' என, வழக்கறிஞர்
வில்சன் வாதிட்டார்.
சென்னை, அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய
தலைமைச் செயலக கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவதற்கான
நடவடிக்கைகளுக்கும், மருத்துவமனை செயல்பாடுகளுக்கும், தேசிய பசுமை
தீர்ப்பாய சென்னை பெஞ்ச், நேற்று முன்தினம், இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில்,
புதிய கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவதற்கு, மாநில அளவிலான
சுற்றுப்புறச்சூழல் ஆய்வு ஆணையம், வழங்கிய ஒப்புதலை எதிர்த்து, தேசிய பசுமை
தீர்ப்பாயத்தில், வழக்கறிஞர் வீரமணி தாக்கல் செய்த மனு, தீர்ப்பாய சென்னை
பெஞ்ச் முன் நேற்று மாலை, 3:00 மணியளவில், மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடந்த விசாரணையில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், தனது வாதங்களை முன் வைத்தார்.
வழக்கறிஞர்
வில்சன்: ஒரு கட்டடம் கட்ட தேர்ந்தெடுக்கப்படும் காலி நிலத்திற்கு தான்,
மாநில அளவிலான சுற்றுச்சூழல் ஆய்வு ஆணையத்தின் தடையில்லா சான்றிதழ் பெற
முடியும்.
ஆனால், சென்னை, அரசினர் தோட்டத்தில், ஏற்கனவே கட்டப்பட்ட
கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற, நடைமுறைக்கு மாறாக, இரண்டாவது
முறை, தடையில்லா சான்றிதழ் தரப்பட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலக
கட்டடத்தை, மருத்துவமனையாக மாற்றினால், அந்த வளாகத்தில், தண்ணீர் பயன்பாடு
அதிகரிக்கும். இதனால், சுற்றுவட்டார பகுதியில், நிலத்தடி நீர்மட்டம்
குறையும் அபாயம் உள்ளது. மருத்துவக் கழிவுகளால், காற்று மாசு ஏற்படும்.
சுற்றுச்சூழல்
சட்ட விதிப்படி, மருத்துவமனை வளாகம் அமையும் இடத்தில் இருந்து, 100
மீட்டர் சுற்றளவிற்கு, ஒலி மாசு ஏற்படும் சூழல் இருக்கக்கூடாது.
அண்ணா
சாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை மற்றும் ஆடம்ஸ் சாலை ஆகிய நான்கு
சாலைகளின் சந்திப்பிற்கு அருகில், பல்நோக்கு மருத்துவமனையை அமைத்தால், அது,
சுற்றுச்சூழல் விதிகளுக்கு எதிராக அமையும்.
தீர்ப்பாய உறுப்பினர்
பேராசிரியர் நாகேந்திரன்: ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ராயப்பேட்டை
அரசு மருத்துவமனை உள்ளிட்ட சென்னையின் பெரும்பாலான மருத்துவமனைகள்,
சாலைக்கு அருகில் தான் அமைந்துள்ளன. அவற்றை எல்லாம் மூட சொல்லலாமா? வில்சன்:
நீங்கள் குறிப்பிடும் மருத்துவமனைகள், பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன.
புதிதாக அமைக்கப்படும் மருத்துவமனைகள், சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றி
அமைக்கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். கொள்கை முடிவு என்ற
பெயரில், தமிழக அரசு, சுற்றுச்சூழல் சட்ட விதிகளை புறக்கணிக்கக் கூடாது. தீர்ப்பாய நீதிபதி சொக்கலிங்கம்: இந்த கட்டடத்தை, சட்டசபை, தலைமைச் செயலகம் தவிர, வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்கிறீர்களா? வில்சன்:
அரசின் கொள்கை முடிவிற்குள் செல்ல விரும்பவில்லை. சுற்றுச்சூழல் சட்ட திகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் வாதம்.
வழக்கு விசாரணை, இன்று, மதியம், 12:00 மணிக்கு தொடர்கிறது.