பனமரத்துப்பட்டி:"இலக்கை எட்டுவதற்கு, வாடிக்கையாளர் எவ்வளவு சரக்கு கேட்டாலும் கொடுக்க வேண்டும்' என, டாஸ்மாக் அதிகாரிகளும், "ஒருவருக்கு, இரண்டு பாட்டிலுக்கு மேல் தரக்கூடாது' என, போலீஸாரும் நெருக்கடி கொடுப்பதால், டாஸ்மாக் ஊழியர்கள் இருதலைக் கொள்ளி எறும்பாக புலம்புகின்றனர்.
சேலம் மாவட்டத்தில், 264 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் மது விற்பனையில், இலக்கை எட்டாத, ஐந்து கடை மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், இலக்கை எட்டாத மேற்பார்வையாளர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை தொடரும் என, அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதனால, பார் மற்றும் சந்துகடைகளுக்கு, மது பாட்டில்களை அள்ளிவிட்டு, இலக்கை பூர்த்தி செய்ய ஊழியர்கள் முயற்சி செய்கின்றனர்.
நேற்று முன்தினம், கொண்டலாம்பட்டி டாஸ்மாக் கடைக்கு பின்னால், இருவர் சரக்கு விற்றுள்ளனர். சேலம் ஏ.எஸ்.பி., சரோஜ்குமார் தாகூர் அங்கு சென்ற போது, டூவீலர் மற்றும் மது பாட்டில்களை போட்டு விட்டு, மது விற்றவர்கள் தப்பியோடினர்.
சந்து கடையில் சரக்கு விற்ற நாட்டாமங்கலத்தை சேர்ந்த சரவணன், 32,கோடிகாடு பகுதியை சேர்ந்த ராஜா, 48, ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவத்தால், டாஸ்மாக் ஊழியர்கள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
மேலும், ஏ.எஸ்.பி., சரோஜ்குமார் தாகூர் உத்தரவுபடி, கொண்டலாம்பட்டி டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் பெரியசாமி, சேல்ஸ்மேன் பாஸ்கர் ஆகிய இருவரையும், போலீஸார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் சந்து கடைக்கு, மொத்தமாக மது பாட்டில்களை கொடுத்ததாக, வழக்கு பதிவு செய்வதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த டாஸ்மாக் பணியாளர்கள், கொண்டலாம்பட்டி ஸ்டேஷன் முன் திரண்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் வந்த டாஸ்மாக் உதவி மேலாளர், கலால் உதவி ஆணையாளர் ஆகியோர் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் பேசி, மேற்பார்வையாளர் பெரியசாமி, சேல்ஸ்மேன் பாஸ்கர் ஆகியோரை மீட்டனர்.
இது குறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:
மது விற்பனை இலக்கை எட்டுவதற்காக, "வாடிக்கையாளர்கள் எவ்வளவு சரக்குகள் கேட்டாலும் தாராளமாக கொடுக்க வேண்டும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், "ஒருவருக்கு, இரண்டு பாட்டில்களுக்கு மேல் கொடுக்க கூடாது' என, போலீஸார் கெடுபிடி செய்கின்றனர். சிலர், மது பாட்டில்களை வாங்கிச் சென்று விற்கின்றனர். அதற்கு, நாங்கள் எப்படி பெறுப்பேற்க முடியும். அரசுக்கு வருவாய் ஈட்டி தரும் டாஸ்மாக் ஊழியர்களை, குற்றவாளி போல் போலீஸார் நடத்துகின்றனர்.
மத்தாளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல, டாஸ்மாக் ஊழியர்களுக்கு, அதிகாரிகள் மற்றும் போலீஸ் ஆகியோரிடம் இருந்து, இரண்டு பக்கமும் அடி விழுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.