pothu news | மாணவியின் துப்பட்டாவை இழுத்து "ஈவ்-டீசிங்' கோவையில் நடிகர் சிறையில் அடைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவியின் துப்பட்டாவை இழுத்து "ஈவ்-டீசிங்' கோவையில் நடிகர் சிறையில் அடைப்பு

Added : பிப் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

கோவை:கல்லூரி மாணவியை பின்தொடர்ந்து, சழே தள்ளி, துப்பட்டாவை இழுத்து, "ஈவ்-டீசிங்' செய்ததாக, தமிழ் திரைப்பட நடிகரும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர்; பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த தொழிலதிபர் சண்முகம் மகன், அஜய் பிரதீப், 27. இவர், சிவானந்தா காலனியை சேர்ந்த தன் நண்பர் ஈஸ்வரன், 34, என்பவருடன், நேற்று முன்தினம், மாலையில் பாரதி பார்க் ரோட்டில், பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்ற, அவினாசிலிங்கம் பல்கலையில் படிக்கும், கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மாணவி, அவரது தோழியை, இருவரும் பின் தொடர்ந்து சென்று, கிண்டல் செய்துள்ளனர்; இதற்கு மாணவியர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், தொடர்ந்து மாணவியரை கேலி செய்ததுடன், தங்களது பைக்கை, மாணவியரின் வாகனம் மீது மோதச் செய்தனர். நிலைதடுமாறிய மாணவியர் இருவரும், சழே விழுந்தனர். மாணவியின் துப்பட்டாவை பிடித்து அஜய் பிரதீப் இழுத்துள்ளார்; மாணவியர் இருவரும் கதறி அழுதும், விடவில்லை. மாணவியரின் கதறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். அதற்குள் நடிகரும், அவர் நண்பரும் பைக்கில் தப்பித்தனர்.
சாய்பாபா கோவில் போலீஸ் ஸ்டேஷனில் மாணவியர் புகார் அளித்தனர். இதையடுத்து, அஜய் பிரதீப் மற்றும் ஈஸ்வரன் ஆகியோரை, "ஈவ்-டீசிங்' பிரிவில் கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட அஜய் பிரதீப், "18 வயது புயலே, மேகத்து மழை, மின்சாரம்' ஆகிய தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்கள்
சாக்லெட், முறுக்கு தந்து தாஜா

தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டத்தில், ஒரு மாணவர் மட்டுமே படிக்கும் அரசு பள்ளியில், இரு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியம் சக்கந்தியில், 35 ஆண்டுகளாக, ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், முன்னாள் முதல்வர்களின் படங்களுடன், நான்கு பெரிய பீரோக்கள், வாட்டர் பில்டர், "டிவி' - சர்வசிக்ஷா திட்டத்தில், ஆசிரியர்கள் வசதியாக அமர சேர்கள், மாணவர்களுக்கு பெஞ்ச் என, அனைத்து வசதிகளும் உள்ளன.
ஆனால், இப்பள்ளியில் தினேஷ், என்ற ஒரே ஒரு மாணவர் மட்டுமே தற்போது படிக்கின்றனர். தலைமையாசிரியர் மட்டும் பாடம் நடத்தி வந்த இப்பள்ளியில், "ஒரே ஒரு மாணவரின் கல்வி நலன் கருதி' அரசு கடந்த மாதம் கூடுதலாக, ஒரு பெண் ஆசிரியரை நியமித்துள்ளது. அந்த ஆசிரியையும் மாணவரை அருகில் அமர வைத்து, பாடம் சொல்லித் தருகிறார்.
ஒரே மாணவரையும், "தக்க' வைத்துக் கொள்வதற்காக, இப்பள்ளியில், சத்துணவு மையமும், அதற்கு ஒரு அமைப்பாளரும் உள்ளனர். பள்ளிக்கு தவறாமல் மாணவர் தினேஷ் வரவேண்டும் என்பதற்காக, அவருக்கு தினமும், சாக்லெட், பிஸ்கெட், முறுக்கு வாங்கி கொடுக்கின்றனர்.
இந்த ஊரைச் சேர்ந்த பல குழந்தைகளை, 10 கி.மீ., தொலைவில் தேவகோட்டை, முப்பையூரில் உள்ள பள்ளிகளில், "கட்டணம் செலுத்தி' படிக்க வைக்கின்றனர்.
அரசு பள்ளி தலைமையாசிரியர் தனீஸ்லாஸ் கூறுகையில், "" 2 முறை கிராம கூட்டம் நடத்தி பேசியிருக்கிறோம். தமிழ் வழியோடு, ஆங்கில வழியிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக பாடம் கற்றுத் தருவதாக உறுதியளித்து விட்டோம். வரும் ஆண்டிலாவது, குழந்தைகளை பெற்றோர் சேர்ப்பார்கள், என, நம்புகிறோம்'' என்றார்.
கல்வித்துறை அதிகாரிகள், இப்பள்ளியின் எதிர்காலம் குறித்து என்ன முடிவு எடுக்கப் போகின்றனர் என்று தெரியவில்லை.

"கடத்தப்பட்டதாக' நள்ளிரவில் போலீசுக்கு
தண்ணி காட்டிய, "போதை' இரும்பு வியாபாரி
/
கோவை:
மதுபோதை தலைக்கேறியதில், கடத்தப்பட்டதாக தவறாக கருதி, பீதியில் போலீசுக்கு தகவல் கொடுத்த, பஞ்சாப் இரும்பு வியாபாரியால், கோவையில் பரபரப்பு நிலவியது.
இந்த ருசிகர சம்பவம் குறித்த விவரம்:
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த, தர்மேந்திர குமார் சிங், 60. திருப்பூரில் தங்கி, கோவை மற்றும் கேரளாவில், பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம், பாலக்காடு சென்று விட்டு, மாலையில், மூன்று வியாபார புரோக்கர்களுடன், காரில் கோவைக்கு திரும்பி கொண்டிருந்தார்.
நால்வரும், காரில் ஏறும் முன்பே மதுபானம் அருந்தியுள்ளனர்; போதை மயக்கத்தில் உறங்கியுள்ளனர். கார், வாளையாரை கடந்து கொண்டிருந்தபோது, தர்மேந்திர குமார் சிங்குக்கு திடீரென விழிப்பு ஏற்பட்டது.
இருபுறமும், மரங்கள் சூழ்ந்த காட்டுப் பகுதியில், கார் சென்று கொண்டிருந்தது. போதை தெளியாத நிலையில், காருக்கு வெளியே இந்த காட்சியை பார்த்த, தர்மேந்திர குமார் சிங், தங்களை யாரோ கடத்திச் செல்வதாக, தவறாக நினைத்து கொண்டார்.
பீதியடைந்த அவர், உறங்கிக் கொண்டிருந்த, புரோக்கர்களை எழுப்ப முயற்சித்தார். தர்மேந்திர குமார் சிங்கை விட கூடுதல், "சரக்கு' சாப்பிட்டிருந்த அவர்களோ, உளறியபடி புரண்டனரே தவிர, எழுந்திருக்கவில்லை. பயத்தின் உச்சிக்குப் போன தர்மேந்திர குமார் சிங், கார் டிரைவரிடம், "எங்களை எங்கே கடத்திச் செல்கிறாய்? இது எந்த இடம்? காரை உடனே நிறுத்து' என்றெல்லாம், இந்தி கலந்த தமிழில், உளறி கொட்டியுள்ளார்.
காரை ஓட்டி வந்த, டிரைவர் கேரளாவை சேர்ந்தவர் என்பதால், தர்மேந்திர குமார் சிங் பேசிய தமிழ், அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. மலையாளத்தில் அவர் கூறிய பதிலை, தர்மேந்திர குமார் சிங்குக்கும் புரியவில்லை. கடத்தல் காரர்களிடம் இருந்து, எப்படியாவது தப்ப நினைத்த தர்மேந்திரகுமார் சிங், "தாங்கள் கடத்திச் செல்லப்படுவதாக' மொபைல் போனில், பஞ்சாபில் உள்ள உறவினர்களுக்கு, ரகசியமாக தகவல் கொடுத்தார்.
பதறிய அவரது உறவினர்கள், உடனடியாக கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, அழுதபடியே தகவல் கொடுத்தனர். இதனால், கோவை கமிஷனர் அலுவலகம், நள்ளிரவில் பரபரப்படைந்தது. கேரளாவில் இருந்து வரும், வாகனங்களை தீவிரமாக சோதனையிடுமாறு, இரவு ரோந்து போலீசாருக்கு உத்தரவு பறந்தது.
ஒரு மணி நேரம், வாகனங்களை சோதனையிட்டும், "கடத்தல் கார்' பிடிபடவில்லை. தர்மேந்திரகுமார் சிங்கை மொபைல் எண்ணில் போலீசார் தொடர்பு கொண்டபோது, "தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாக' தகவல் கிடைத்துள்ளது. இதனால், போலீசாரையும் பதற்றம் தொற்றிக் கொண்டது. இதற்குள், அவரது கார், கோவை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
போதை இறங்கிய நிலையில், காரை விட்டிறங்கிய தர்மேந்திர குமார் சிங், சுற்றும், முற்றும் பார்த்து நிம்மதி அடைந்தார். அப்போது அவருடன் போனில் தொடர்பு கொண்ட போலீசாரிடம், ரயில்வே ஸ்டேஷனில் இருப்பதை சொன்னார். அங்கு சென்று, நிலைமையை, விசாரித்த போலீசார், "ஆசை தீர டோஸ்' விட்டதோடு, எச்சரித்து அனுப்பினர்.
தர்மேந்திரகுமார்சிங்,கோவைக்கு பத்திரமாக வந்தடைந்த தகவலை அறிந்த பஞ்சாப் உறவினர்கள், போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு போன் செய்து, தங்கள் உறவினரை, "பத்திரமாக மீட்டதற்கு' உருகி உருகி நன்றி தெரிவித்தனர்.
வெறுப்பின் உச்சத்தில் இருந்த, இரவு ரோந்து போலீசார், அதன் பிறகே நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
"அரசின் கொள்கை முடிவு என்ற பெயரில்
சுற்றுச்சூழல் விதிகளை புறக்கணிக்க கூடாது'

சென்னை:
""போக்குவரத்து மிகுந்த அண்ணாசாலைக்கு அருகில், அரசு, பல்நோக்கு மருத்துவமனை அமைக்க முயல்வது, சுற்றுச்சூழல் சட்ட விதிகளுக்கு எதிரானது,'' என, வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.
சென்னை, அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கும், மருத்துவமனை செயல்பாடுகளுக்கும், தேசிய பசுமை தீர்ப்பாய சென்னை பெஞ்ச், நேற்று முன்தினம், இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில், புதிய கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவதற்கு, மாநில அளவிலான சுற்றுப்புறச்சூழல் ஆய்வு ஆணையம், வழங்கிய ஒப்புதலை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், வழக்கறிஞர் வீரமணி தாக்கல் செய்த மனு, தீர்ப்பாய சென்னை பெஞ்ச் முன் நேற்று மாலை, 3:00 மணியளவில், மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடந்த விசாரணையில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், தனது வாதங்களை முன் வைத்தார்.
வழக்கறிஞர் வில்சன்: ஒரு கட்டடம் கட்ட தேர்ந்தெடுக்கப்படும் காலி நிலத்திற்கு தான், மாநில அளவிலான சுற்றுச்சூழல் ஆய்வு ஆணையத்தின் தடையில்லா சான்றிதழ் பெற முடியும்.
ஆனால், சென்னை, அரசினர் தோட்டத்தில், ஏற்கனவே கட்டப்பட்ட கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற, நடைமுறைக்கு மாறாக, இரண்டாவது முறை, தடையில்லா சான்றிதழ் தரப்பட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, மருத்துவமனையாக மாற்றினால், அந்த வளாகத்தில், தண்ணீர் பயன்பாடு அதிகரிக்கும். இதனால், சுற்றுவட்டார பகுதியில், நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. மருத்துவக் கழிவுகளால், காற்று மாசு ஏற்படும்.
சுற்றுச்சூழல் சட்ட விதிப்படி, மருத்துவமனை வளாகம் அமையும் இடத்தில் இருந்து, 100 மீட்டர் சுற்றளவிற்கு, ஒலி மாசு ஏற்படும் சூழல் இருக்கக்கூடாது.
அண்ணா சாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை மற்றும் ஆடம்ஸ் சாலை ஆகிய நான்கு சாலைகளின் சந்திப்பிற்கு அருகில், பல்நோக்கு மருத்துவமனையை அமைத்தால், அது, சுற்றுச்சூழல் விதிகளுக்கு எதிராக அமையும்.
தீர்ப்பாய உறுப்பினர் பேராசிரியர் நாகேந்திரன்: ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட சென்னையின் பெரும்பாலான மருத்துவமனைகள், சாலைக்கு அருகில் தான் அமைந்துள்ளன. அவற்றை எல்லாம் மூட சொல்லலாமா?
வில்சன்: நீங்கள் குறிப்பிடும் மருத்துவமனைகள், பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. புதிதாக அமைக்கப்படும் மருத்துவமனைகள், சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றி அமைக்கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். கொள்கை முடிவு என்ற பெயரில், தமிழக அரசு, சுற்றுச்சூழல் சட்ட விதிகளை புறக்கணிக்கக் கூடாது.
தீர்ப்பாய நீதிபதி சொக்கலிங்கம்: இந்த கட்டடத்தை, சட்டசபை, தலைமைச் செயலகம் தவிர, வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்கிறீர்களா?
வில்சன்: அரசின் கொள்கை முடிவிற்குள் செல்ல விரும்பவில்லை. சுற்றுச்சூழல் சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் வாதம்.
வழக்கு விசாரணை, இன்று, மதியம், 12:00 மணிக்கு தொடர்கிறது.
34 வழக்குகளிலும் முன்ஜாமின்
கிரானைட் பழனிசாமி ஆஜர்
மேலூர்:
மதுரை மாவட்டத்தில் நடந்த, கிரானைட் முறைகேடு வழக்கில், மேலூர் கோர்ட்டில், பி.ஆர்.பி., நிறுவன உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமி, நேற்று ஆஜரானார்.
கிரானைட் குவாரி முறைகேடு குறித்து, மேலூர் அருகே, 175 குவாரிகள் ஆய்வு செய்யப்பட்டன. முறைகேட்டில் ஈடுபட்டதாக பல குவாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. பி.ஆர்.பி., நிறுவனம் மீது, 34 வழக்குகள் பதிவானது. முதற் கட்டமாக தொடரப்பட்ட, 20 வழக்குகளில், பி.ஆர்.பழனிச்சாமி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, பாளை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த போது, மேலும், 14 வழக்குகள் பதிவாயின.
20 வழக்குகளில், அவர் ஐகோர்ட் கிளையில், முன்ஜாமின் பெற்றதுடன், மற்ற வழக்குகளில், தன்னை கைது செய்ய கூடாது என, கோரினார். அதனை ஏற்று, 14 வழக்குகளுக்கும் முன் ஜாமின் வழங்கப்பட்டது. மேலூர் கோர்ட்டில் ஆஜராகி அதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி நேற்று மேலூர் கோர்ட்டில், அவர் நேற்று ஆஜரானார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை