சென்னை:சென்னை ஐகோர்ட்டின், புதிய நீதிபதி, ராஜேஷ்குமார் அகர்வாலுக்கு, தமிழக கவர்னர், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஐகோர்ட்டில், தற்காலிக தலைமை நீதிபதியாக, அவர் பொறுப்பேற்றுள்ளார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய இக்பால், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக, கடந்த டிசம்பரில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தற்காலிக தலைமை நீதிபதியாக, தர்மாராவ் பணியாற்றி வந்தார். தற்போது, அலகாபாத் ஐகோர்ட்டில், மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்த ராஜேஷ்குமார் அகர்வால், சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். கவர்னர் மாளிகையில், புதிய நீதிபதி அகர்வாலுக்கு, நேற்று பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடந்தது. புதிய நீதிபதி நியமன உத்தரவை, தலைமைச் செயலர் வாசித்தார். கவர்னர் ரோசய்யா, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதையடுத்து, நீதிபதி அகர்வால், உறுதிமொழியை வாசித்தார். பின், புதிய நீதிபதி அகர்வாலுக்கு, தமிழக கவர்னர், முதல்வர் ஜெயலலிதா ஆகியோர், பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், அலகாபாத் ஐகோர்ட் நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.
சென்னை ஐகோர்ட்டில் நடந்த நிகழ்ச்சியில், அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன், பார் அசோசியேஷன் தலைவர் முத்துகுமாரசாமி, தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் செல்வம், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவி பிரசன்னா, லா அசோசியேஷன் தலைவர் விஜயகுமார் ஆகியோர் வரவேற்றுப் பேசினர். இதையடுத்து, தற்காலிக தலைமை நீதிபதி அகர்வால் பேசியதாவது: உங்கள் இதயங்களில், எனக்கு இடம் கொடுங்கள். சென்னை ஐகோர்ட்டுக்கு, மிகப்பெரிய பாரம்பரியம் உள்ளது. சிறப்பான நீதிபதிகள் பலர், இங்கிருந்து வந்துள்ளனர். நாம் ஒவ்வொருவரும், ஐகோர்ட்டின் பாரம்பரியத்துக்கு கூடுதல் சிறப்பு அளிக்க, உறுதியேற்க வேண்டும். நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஒன்றாக பாடுபட வேண்டும். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த உடன், பிற்பகல், 12:30 மணிக்கு, தற்காலிக தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி வெங்கட்ராமன் அடங்கிய "முதல் பெஞ்ச்', வழக்கு விசாரணையை நடத்தியது. சென்னை ஐகோர்ட்டுக்கு, புதிய நீதிபதியின் வருகையைத் தொடர்ந்து, நீதிபதிகள் எண்ணிக்கை, 49 ஆக உயர்ந்துள்ளது. 11 இடங்கள் காலியாக உள்ளன.
புதிய நீதிபதி ஆர்.கே.அகர்வால், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். 1953ம் ஆண்டு, மே, 5ம் தேதி பிறந்தார். 1976ம் ஆண்டு, வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். அலகாபாத் ஐகோர்ட்டில், "பிராக்டீஸ்' செய்தார். அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக, 1999ம் ஆண்டு, பிப்., 5ம் தேதி நியமிக்கப்பட்டார். அங்கு, மூத்த நீதிபதிகள் வரிசையில், மூன்றாவதாக இருந்தார்.
இவரது தந்தை ராஜாராம் அகர்வால், அட்வகேட்-ஜெனரலாக பதவி வகித்தவர். தற்போது, தற்காலிக தலைமை நீதிபதியாக உள்ள அகர்வால், சில மாதங்களில், தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.