புதுடில்லி : "பல கோடி செலவு செய்து, அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது தேவையா?' என, கேள்வி எழுப்பியுள்ள, சுப்ரீம் கோர்ட், "ஒவ்வொரு மாநிலங்களிலும், அரசியல்வாதிகளுக்கு எத்தனை போலீசார் பாதுகாப்பு அளிக்கின்றனர் என்ற விபரத்தை, இரண்டு நாட்களில், அனைத்து மாநில அரசுகளும், சமர்ப்பிக்க வேண்டும்' என்றும் உத்தரவிட்டுள்ளது. டில்லியில், கடந்த டிசம்பரில், ஓடும் பஸ்சில் , மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவத்திற்குப் பின், பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக, பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. அரசியல்வாதிகளுக்கு அளவுக்கு அதிகமாக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பில் அரசுகள் அக்கறை காட்ட முடிவதில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. அதற்கேற்ற வகையில், நேற்று முன் தினம் டில்லியில் நிருபர்களிடம் பேசிய, அம்மாநில முதல்வர் ஷீலா தீட்சித்தும், "தலைநகரில் உள்ள பெண்கள், தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக உணர்கின்றனர்' என, கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், வி.ஐ.பி.,க்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணக்கு வந்தது. அப்போது, வழக்குத் தொடர்ந்த அமைப்பு சார்பில் ஆஜரான, வழக்கறிஞர்
ஹரீஷ் சால்வே கூறியதாவது: வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்புக்காக, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால், டில்லி உட்பட, பல நகரங்களில், பெண்களின் பாதுகாப்புக்காக, போதிய அளவில், போலீசார் பணியில் அமர்த்தப்படுவதில்லை. ஒவ்வொரு, வி.ஐ.பி.,க்கும், மூன்று போலீசார் பாதுகாப்பு தருகின்றனர். ஆனால், பொதுமக்களில், 800 பேருக்கு, ஒரு போலீஸ்காரர் என்ற அளவில்தான், பாதுகாப்பு தரப்படுகிறது.இவ்வாறு ஹரீஷ் சால்வே கூறினார்.டில்லி போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ""தலைநகரில், நீதிபதிகளுக்கான பாதுகாப்பு பணியில் மட்டும், ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபட்டுள்ளனர்,'' என்றார்.இதன்பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் மாநில முதல்வர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியம். நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவசியம் என்ன? அதேபோல், அதிகார பதவியில் இல்லாதவர்களுக்கும், வழக்குகளை சந்தித்து வரும் நபர்களுக்கும் ஏன் பாதுகாப்பு அளிக்க வேண்டும்? பல கோடி செலவு செய்து, அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவசியம் என்ன?
வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் போலீசாரை, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பயன்படுத்தலாமே. ஒவ்வொரு மாநிலங்களிலும், அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு போலீசார் பாதுகாப்பு அளிக்கின்றனர் என்ற விபரத்தை, இரண்டு நாட்களுக்குள், மாநில அரசுகள் சமர்ப்பிக்க வேண்டும். இதைச் செய்ய தவறினால், மாநில அரசுகளின் உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப நேரிடும்.இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை, வரும், 14ம் தேதி நடைபெறும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.