நூறு
நாள் வேலை திட்டம் மூலம், கடந்த ஆறு ஆண்டுகளில், தமிழகத்தில் 12,266 கோடி
ரூபாய் செலவிடப்பட்டு, 1.24 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
இத்திட்டம், கிராமப்புற தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை உயர்த்தியுள்ளது என,
ஒரு தரப்பினரும், விவசாயத்தை அழிக்க வந்த திட்டம் என, மற்றொரு தரப்பினரும்
கருத்துத் தெரிவிக்கின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகளின்
பங்களிப்புடன், 2006ல் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. முதலில்,
தமிழகத்தில் ஆறு மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. படிப்படியாக இந்த
எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு, தற்போது, 31 மாவட்டங்களில்
செயல்படுத்தப்படுகிறது.வேலை அட்டைவறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள கிராமப்புற
தொழிலாளர்களுக்கு, ஆண்டுக்கு நூறு நாள் வேலையை உறுதி செய்வது திட்டத்தின்
நோக்கம். கிராமப்புறங்களில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாருதல், குடிநீர்
வசதியை மேம்படுத்துவது போன்ற பணிகள், இத்திட்டம் மூலம்
மேற்கொள்ளப்படுகின்றன.தமிழகத்தில், நூறு நாள் திட்டத்துக்காக, ஒரு கோடி
குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு, 90 லட்சம் குடும்பங்களுக்கு, வேலை அட்டை
அளிக்கப்பட்டது. இதில், 1.24 கோடி பேர், வேலை பெற்றுள்ளனர். மாற்றுத்
திறனாளிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கும் வகையில், வேலை வழங்கப்பட்டு
வருகிறது. திட்டம் அமலுக்கு வந்து, பிப்., 2ம் தேதியோடு, ஏழு ஆண்டுகள்
முடிவடைந்துள்ளது. மத்திய அரசு இத்திட்டத்திற்கு ஒதுக்கிய தொகை, 12,266
கோடி ரூபாய். மாநில அரசின் பங்கு, 604 கோடி ரூபாய். விருதுநகரில்
அதிகபட்சமாக, 8.27 லட்சம் பேர் வேலை பெற்றுள்ளனர்.அடுத்ததாக,
திருவண்ணாமலையில், 5.35 லட்சம் பேரும், கடலூரில், 4.59 லட்சம் பேரும் வேலை
பெற்றுள்ளனர். மிகக் குறைவாக, நீலகிரியில், 66 ஆயிரம் பேருக்கு வேலை
அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், 1,794 கிராம ஊராட்சிகளின்
தொழிலாளர்களுக்கு, வங்கி மூலம் கூலி வழங்கப்படுகிறது. பணிகளை தேர்வு
செய்தல், போலி கணக்கு, அரசு நிர்ணயித்த கூலியை குறைவாக வழங்குதல் உள்ளிட்ட,
நூறு நாள் திட்டத்தில் நிலவும் மோசடிகள் குறித்து, விசாரித்து உடனடியாக
நடவடிக்கை எடுக்க, மாவட்டம் தோறும் விசாரணை அதிகாரிகள்
நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் முன்னேற்றம் நூறு நாள் திட்ட துவக்கத்தில்,
நாளொன்றுக்கு, 80 ரூபாய் வழங்கப்பட்டது. அதுவே, ஆறு ஆண்டுகளில் தினக்
கூலி, 132 ரூபாயாக உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில், அரசு நிர்ணயித்த
குறைந்தபட்ச கூலி, தனியாரால் அமல்படுத்தப்படாமலேயே இருந்தது. வறுமைக்
கோட்டிற்குக் கீழ் உள்ள ஆதிதிராவிட பெண்களின் வாழ்வாதாரம்,
இத்திட்டத்தின் மூலம் உயர்ந்துள்ளது.நூறு நாள் வேலைத் திட்டம் நடைமுறைக்கு
வந்ததால், விவசாயம் மற்றும் உள்ளூர் தொழில்களுக்கு வேலை ஆட்கள் கிடைப்பது
அரிதாகி விட்டது என, விவசாயிகள், மற்றும் தொழில் துறை தரப்பில்
குற்றச்சாட்டப்படுகிறது. நூறு நாள் வேலைத் திட்டம் மூலம், பாதகங்களை
விவசாயிகள் முன்னிறுத்தினாலும், கிராமப்புறங்களில் பெரும் வரவேற்பை
இத்திட்டம் பெற்றுள்ளது. குறிப்பாக, பெண்கள் இத்திட்டத்தை பெரிதும்
நம்பியுள்ளனர்.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.