திருத்தணி
: பள்ளி மாணவர்கள் மீது, தனியார் பேருந்து மோதிய விபத்தில், இருவர் சம்பவ
இடத்திலேயே இறந்தனர். ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சாலை மறியலில்
ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்தணி அடுத்த,
கனகம்மாசத்திரம் அருகே நிஜாம்பட்டு காலனியைச் சேர்ந்தவர்கள் ஷேக், மகன்
வெங்கடேசன், 16, மைனர் மகன் பிரதீப், 16. இவர்கள் இருவரும் கனகம்மாசத்திரம்
அரசு மேனிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனர். வரலாறு பிரிவு பாடம்
படித்து வந்த இருவரும், நேற்று காலை, பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது,
அதே கிராமத்தைச் சேர்ந்த சைமன், 18 என்பவர் இருசக்கர வாகனத்தில் (டிஎன்.20
பிசி2903) சென்று கொண்டிருந்தார். பள்ளி அருகே தன் நண்பர்கள் நின்று
கொண்டிருந்ததை கண்ட அவர், எரிவாயு உருளை "புக்கிங்' செய்ய செல்வதாக கூறி,
இருவரையும் ஏற்றிக் கொண்டு ராமஞ்சேரி சென்றார். அங்கு தனியார் எரிவாயு
உருளை பதியும் அலுவலகம் அருகே, இருவரையும் நிற்க வைத்து, சைமன் அலுவலகம்
உள்ளே சென்றார். அப்போது சாலைப் பணிக்காக ஜல்லிக்கற்கள் ஏற்றிக் கொண்டு,
திருவள்ளூர் நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. அதேநேரத்தில், தாம்பரம்,
ராமஞ்சேரி வழியாக திருத்தணிக்கு தனியார் பேருந்து எதிரே வந்தது. கண்
இமைக்கும் நேரத்தில், இருசக்கர வாகனம் அருகே நின்று கொண்டிருந்த இருவர்
மீது, தனியார் பேருந்து, அசுர வேகத்தில் வந்து மோதியது. லாரி மோதிய
வேகத்தில், ஒரு மாணவர் தலை நசுங்கியும், மற்றொருவர் உடல் மூன்று துண்டுகளாக
சிதறியது. பேருந்து ஓட்டுனர், நடத்துனர், பரிசோதகர் மற்றும் பயணிகள்
பேருந்தில் இருந்து இறங்கி, தலை தெறிக்க ஓடினர். தகவலறிந்து கிராம மக்கள்
சம்பவ இடத்திற்கு திரண்டனர். சாலை மறியல் இவ்விபத்து குறித்து, அறிந்த
கிராம மக்கள், தப்பி ஓடிய பேருந்து டிரைவரை கைது செய்ய வேண்டும். இறந்த
மாணவர்களுக்கு நிவாரண உதவி, வேகத்தடை ஆகியவற்றை வலியுறுத்தி, சாலை மறியலில்
ஈடுபட்டனர். பேருந்தின் கண்ணாடிகளை அவர்கள் அடித்து நொறுக்கினர்.
திருவள்ளூர் கூடுதல் ஆட்சியர் ரவிக்குமார், திருத்தணி ஏ.எஸ்.பி.,
விஜயகுமார் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட
மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், "விபத்து நடந்த பகுதியில்
வேகத்தடை அமைக்கவும், விபத்து ஏற்படுத்திய பேருந்து டிரைவரை கைது
செய்யவும், இறந்த மாணவர்களுக்கு தனியார் பேருந்து உரிமையாளர் மூலம்
நிவாரணத் தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் உறுதி
அளித்ததால், திருப்தி அடைந்த மக்கள் சமாதானமடைந்து கலைந்து சென்றனர்.
இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. விபத்தில் இறந்த மாணவர்கள்
குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் காந்தி கூறுகையில், "விபத்தில் இறந்த
பிரதீப், இரண்டு நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. வெங்கடேசன் இன்று பள்ளிக்கு
வரவில்லை மாணவர்கள் இறந்ததால், பள்ளிக்கு விடுமுறை அளிக்கலாமா என, மாவட்ட
முதன்மை கல்வி அதிகாரியிடம் கேட்டதற்கு, பள்ளிக்கு விடுமுறை அளிக்க
வேண்டாம், மாலை பள்ளி நேரம் முடிந்தவுடன், மாணவர்களை ஒன்று கூட்டி இறந்த
மாணவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்த வலியுறுத்தினார்' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.