இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர், சோழர், பிற்கால பாண்டியர், இஸ்லாமியர், நாயக்கர் அரச வம்சத்தினரின் தலைநகராக விளங்கியது. 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வசம் சென்றாலும், மதுரையின் கலைகள் அழியவில்லை. ஒவ்வொரு வம்சத்தினரின் ஆட்சி காலத்திலும் கலை, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரத்தில் மதுரை சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
"பதியெழுவறியா பழங்குடி மூதூர்' என சிலப்பதிகாரம் கூறுகிறது. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? தற்போதைய பழமொழியில் கூறப்படும் "மதுரையைச் சுற்றிய கழுதை... வேறெங்கும் போகாது' என்பது தான். பலவிதமான வணிகங்களுக்கு மையமாக விளங்கியது மதுரை. மதுரையைச் சுற்றி அழகர்கோயில், திருப்பரங்குன்றம், யானைமலை, சமணமலை, முத்துப்பட்டி, கொங்கர் புளியங்குளம், அரிட்டாபட்டி, கீழவளவு, செட்டிப்புடவில் சமணர்கள் வாழ்ந்த மலைகள் உள்ளன. மதுரையின் சிறப்புகளை ஒருபக்கத்தில் அடக்கிவிட முடியுமா? மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி சதுர வடிவில் மிக மிக நேர்த்தியாக, திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் என்ற பெருமை பெற்றது, நமது மதுரை. கோயிலைச் சுற்றி சதுர வடிவில் தெருக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தெருக்களிலும் குறிப்பிட்ட தொழில் செய்வோர், ஒரு சமூகமாகவே வாழ்ந்துள்ளனர், எனஅக்கால பரிபாடல் கூறுகிறது. அதுமட்டுமா...மதுரை மக்கள், "அறவோர் ஓதும் மறையொலி கேட்டு துயில் எழுவர்,' என இறைமைத் தன்மையின் மேன்மையைப் போற்றுகிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோட்டையும், அகழியும் ஆங்கிலேயர் காலத்தில் அகற்றப்பட்டன. 1790ல் மதுரையின் முதல் கலெக்டராக அலெக்ஸாண்டர் மக்லியோட் நியமிக்கப்பட்டார். 1840ல் கலெக்டராக இருந்த பிளாக்பர்ன் என்பவர் தான், பழைய நகரமைப்பை மாற்றாமல், புதிய நகராக்கினார். கோட்டையை இடித்து, அகழிகளை அகற்றி, வெளிவீதிகள் அமைத்து, மதுரை நகரை வெளியுலகுடன் இணைத்தார். நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இருந்தபடியே, ஆங்கிலேயர் காலத்திலும் குறிப்பிட்ட ஜாதியினர் ஒரே பகுதியில் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். மாரட் வீதி, வெளிவீதிகள் எல்லாம் ஆங்கிலேயர் காலத்தில் பெயர் சூட்டப்பட்டன. கடைவீதிகள், "அங்காடி வீதிகள்' எனப்பட்டன. காலையில் கூடும் வீதிகள் "நாளங்காடி' எனவும், மாலையில் கூடும் வீதிகள், "அல்லங்காடி' எனப்பட்டன. "மதுரை நகரில் ஆறு கிடந்தாற்போல, அகன்ற நெடிய தெருக்கள் அமைந்திருந்ததாக' மதுரைக் காஞ்சி கூறுகிறது. இப்போதைய தெருக்களில் நடக்கவே முடியவில்லை. ம்ம்ம்... அது ஒரு கனாக்காலம்.
மதுரையும், நிகழ்வுகளும்...
* தமிழக முதல்வராக காமராஜர் இருந்தபோது, உயரதிகாரிகள் சிலர், "வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள நகரமைப்பை அறிந்து வரவேண்டும்,' என்றனர். அதற்கு அவரோ,"மதுரைக்கு சென்று பாருங்கள். அதைவிட சிறந்த நகரமைப்பு எங்குள்ளது,' என்றார்.
*சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மதுரை தான். கடைசியாக தோன்றிய நான்காம் தமிழ்ச் சங்கம் (1906), மதுரை தமிழ்ச்சங்கம் ரோட்டில் உள்ள செந்தமிழ்க் கல்லூரியில் இன்றும் செயல்பட்டு வருகிறது.
*நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என சிவபெருமானை எதிர்த்து போரிட்ட நக்கீரருக்கு காட்சி தந்தது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தான்.
* அவ்வையாரின் அறிவை சோதிக்க, "சுட்ட பழம் வேண்டுமா... சுடாத பழம் வேண்டுமா' என முருகப்பெருமான் கேட்டதும், மதுரையில் தான்.
*"கணவனை கள்வன் என நினைத்து கொன்ற' பாண்டிய மன்னனையும், மதுரையையும் சபித்து தீக்கிரையாக்கினார், கண்ணகி.
*முருகன் அருளால் குமரகுருபரர் பேசும் திறன் பெற்று, பிள்ளைத்தமிழ் அரங்கேற்றினார்.
* திருவாதவூரார் மாணிக்கவாசகர் என பெயர் பெற்றதும், இங்கே தான்.
மதுரை அடடே!
பழமையும், புதுமையும் கலந்த நகரான நம்ம மதுரையில், நாம் அறிந்த, கண்ட எத்தனையோ வரலாற்று அடையாளங்களும், நினைவிடங்களும் இக்கால தலைமுறையினருக்கு தெரியப்படுத்தப்படாமலேயே புதைந்து கிடக்கின்றன. கண் முன் தெரியும் அடையாளங்களை தவிர, பல அடையாளங்கள் இன்னும் அடையாளப்படுத்தப்படாமலேயே உள்ளன. மாமதுரையை போற்றும் இத்தருணத்தில், இந்த "அடடே...' அடையாளங்களையும் போற்றுவோம்.
முதல் விமான நிலையம்
1942ல்"ராயல் ஏர்போர்ஸ்' எனும் பிரிட்டிஷ் விமானப்படையினர், மதுரை அருப்புக்கோட்டை ரோட்டில் விமான தளத்தை உருவாக்கினர். இந்திய விமான கார்ப்பரேஷன் சட்டம் 1953ல் அமலான போது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின், 1956ல் முதல் விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டது மதுரையில்தான்.
பழமையான அலுவலகம்
மதுரை திருமலை நாயக்கர் மகால் அருகேயுள்ள, பத்திரப்பதிவு அலுவலகம், ஆங்கிலேயர் காலத்திலேயே உருவாக்கப்பட்டது. 1862ல், தென்மாவட்டங்களுக்கென முதல் பத்திரப்பதிவு அலுவலகமாக இது உருவாக்கப்பட்டது. கட்டடத்தின் ஒருபுறம் சிவில் கோர்ட்டும், மறுபுறம் தாலுகா அலுவலகமும் செயல்பட்டது. காலையில் பத்திரப்பதிவு அலுவலகமும், மதியத்திற்கு மேல் கோர்ட்டாகவும் செயல்பட்டதாகவும் சிலர் கூறுவது உண்டு.
ரயிலை காண திருவிழா கூட்டம்
முதல் பள்ளி
ஆலன்துரை கல்லறை
இது நம்ம மதுரை
* தமிழகத்தின் முதல் ஊராட்சி ஒன்றியம் மதுரையில்தான் துவக்கப்பட்டது 1957ல் "மதுரை வடக்கு பஞ்., யூனியன்' என்ற பெயரில் துவங்கப்பட்டது.
* மதுரையில் தபால் பை முறை அறிமுகமான போது, முதன்முதலாக தபால் பை எண் வாங்கியவர் கருமுத்து தியாகராஜன் செட்டியார். டெலிபோனை பயன்படுத்திய முதல் மதுரைக்காரரும் இவர்தான். அவரது போன் எண் ஒன்று.
* தமிழகத்தின் முதல் வேலைவாய்ப்பு நிறுவனம், 1946ல், முன்னாள் ராணுவத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக மதுரையில் ஆங்கிலேயரால் துவங்கப்பட்டது.
* இதுதவிர, 1998ல் தமிழகத்தின் முதல் சமத்துவபுரமும், 1999ல் முதல் உழவர் சந்தையும் திறக்கப்பட்டது மதுரையில்தான்.
* திருவிழா நகரம் என்றழைக்கப்படும் மதுரையில், மாதந்தோறும் ஏதாவது ஒரு திருவிழா நடந்து கொண்டிருக்கிறது.
* தமிழ் மாதங்களின் பெயர்களில் வீதிகள் அமைந்துள்ள ஒரே நகரம் நம்ம மதுரைதான்.
* ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர் என்ற பெருமை பெற்றது மதுரையில் உள்ள தங்கம் தியேட்டர். தற்போது செயல்படவில்லை.
முதல் சினிமா தியேட்டர்!
மதுரையின் முதல் சினிமா தியேட்டர் என்ற பெருமை, தெற்குமாசிவீதியில் உள்ள சிடிசினிமா. 1921ல் இத்தியேட்டர் கட்டப்பட்டது. திரைக்கு முன் ஒருவர் குச்சியுடன் நின்றுக் கொண்டு, உருவங்களை குறிப்பிட்டு திரைக்கதையை விளக்குவார். 1933ல் "டாக்கி' என்ற பேசும்படம் வந்தது. இத்தியேட்டரில் அந்த கால சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் நடித்த "ஹரிதாஸ்' படம் ஒன்றரை ஆண்டுகள் ஓடி சாதனை படைத்தது. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்ற படம் தந்த "ஹிட்'டால், திக்குமுக்காடிய நிர்வாகி வெங்கடகிருஷ்ணய்யர், கீழவெளிவீதியில் சிந்தாமணி தியேட்டரை கட்டினார். "டிவி'க்களின் ஆதிக்கத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல், 1999ல் சிடிசினிமா மூடுவிழா கண்டு, இப்போது "பார்க்கிங்' இடமாக பார்க்க பரிதாபமாக உள்ளது.
தாகம் தீர்க்கும் கிணறு!
மதுரை யானைக்கல் பாலத்தில், வைகையாற்றை கடப்பவர்கள் இடதுபக்கம் பார்த்தால், ஆற்றில் ராட்சத கிணறு ஒன்று இருக்கும். இதற்கும் ஒரு வரலாறு உண்டு. ஆங்கிலேயர் காலத்தில் 1804ல் இதுபோன்ற கிணறு அமைக்கப்பட்டது. இதிலிருந்து பீப்பாய்களில் நீரை நிரப்பி, குதிரை, மாட்டு வண்டிகளில் வினியோகித்தனர். அந்த ஆண்டிலேயே, வெள்ளப்பெருக்கால், கிணறு காணாமல் போனது. இதனால் இதன் அருகிலேயே இப்போதுள்ள கிணறு உருவாக்கப்பட்டது. அதேபோல், 1888ல் ஆற்றின் கல்மண்டபம் அருகே மூன்றாவது கிணறு அமைக்கப்பட்டது.
கடிகாரத்திற்கு வயது 145
காந்திஜியை அடையாளப்படுத்திய மதுரை
மதுரையை தாங்கும் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம்
விழாக்கள் நிறைந்த விழுமிய நகர் மதுரை
* வைகாசி மாதம் திருவாதிரை துவங்கி விசாக நட்சத்திரம் வரை 10 நாட்கள் வசந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோயில், சந்நிதி தெருவில் புதுமண்டபம் எனப்படும் வசந்த மண்டபம், இருபுறமும் நீராழி மண்டபம், கிழக்கே வசந்த விழா நீர்த்தொட்டியை, திருமலை நாயக்கர் அமைத்தார். அன்று முதல் அங்கு வைகாசி விழா நடந்து வருகிறது.
* இளவேனில் விழா குறித்து கலித்தொகையில் உள்ளது. சித்திரை, வைகாசி ஆகிய இளவேனிற் பருவத்தில், காதல் தெய்வமான காமவேளுக்கு, "வில்லவன் விழா' கொண்டாடப் பட்டது.
* ஆனி மாதம் மகநட்சத்திரம் முதல் மூல நட்சத்திரம் முடிய 10 நாட்கள் ஊஞ்சல் உற்சவ விழா நடைபெறும். சுவாமியும், அம்பாளும் ஊஞ்சல் மண் டபத்தில் எழுந்தருள்வர்.
* ஆடி மாதத்தில் ஆயில்ய நட்சத்திரம் துவங்கி கேட்டை முடிய 10 நாட்கள், "முளைக்கொட்டு' திருவிழா நடைபெறும். அக்காலத்தில் இவ்விழாவுக்குப் பின்பே, விவசாயிகள் பணிகளை துவங்குவர்.
* ஆவணி மாதம், "ஆவணி மூலத் திருவிழா' எனப்படும், புட்டுத் திருவிழா, 18 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும், மதுரையில் சொக்கநாதர் நடத்திய திருவிளையாடல்களை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
* புரட்டாசியில் 9 நாட்கள் "நவராத்திரி விழா'. அனைத்து கோயில்களிலும் "கொலு' அமைத்து கொண்டாடும் இவ்விழா முக்கியமான ஒன்று.
* ஐப்பசி மாதம் தீபாவளி பண்டிகை. இம்மாதத்தில், முருகனுக்கு உகந்த "கந்த சஷ்டி' நடைபெறும். மீனாட்சி கோயில் எதிரே புதுமண்டபத்தில், 6நாட்களும் கன்னிப் பெண்கள் கூடி, "கோலாட்ட திருவிழா' கொண்டாடுவர். இம்மாதத்தில் பவுர்ணமி அன்று முடிவுபெறும் 5 நாட்கள், "பவித்ர உற்ஸவம்' கொண்டாடுவர்.
* கார்த்திகையில் "தீபத் திருவிழா' சதய நட்சத்திரத்தில் துவங்கி, திருவாதிரை நட்சத்திரம் வரை 10 நாட்கள் நடைபெறும். வீடுகளில் தீபம், வீதிகளில் "சொக்கர் பனை' ஏற்றி மகிழ்வர். கார்த்திகை விண்மீனை, "அறுமீன்' என நற்றிணையில், "அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள், மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி' எனக் கூறப்பட்டுள்ளது.
* மார்கழியில் அஷ்டமி நாளில், சொக்கநாதரும், மீனாட்சி அம்மனும், மதுரை வீதிகளில் அனைத்து உயிர்களுக்கும் படியளக்க தேரில் உலா வருவர். பெண்கள் பாவை நோன்பு இருப்பர்.
* தை மாதத்தில் பொங்கல் விழா, அறுவடை விழாவாக துவங்கி பின், வளத்தை குறித்த விழாவாக மாறியது. திருவாதிரை நட்சத்திரத்தை தீர்த்தமாகக் கொண்டு 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் நிறைவில், தெப்பத்திருவிழா நடைபெறும். அன்று சுவாமி, அம்மன், தெப்பத்தில் சுற்றி, மைய மண்டபத்தில் எழுந்தருள்வர்.
* மாசி மாதம், மாசிமக விழா 48நாட்கள் நடைபெறும். இதில், அமாவாசை நாளில் கொண்டாடும் மகாசிவராத்திரி முக்கியமானது.
* பங்குனி மாதம் கோடை வசந்தவிழா 10 நாள் நடைபெறும். பாண்டியர் காலத்தில், சுவாமியும், அம்மனும், திருப்புவனத்தில் எழுந்தருள்வர். தற்போது 10ம் நாளில், திருவாப்புடையார் கோயிலில் எழுந்தருள்கின்றனர்.
மதுரையை போற்றிய மனோகர் தேவதாஸ்: விழியின்றி எழிலோவியம்
நீங்கள் கண்ணால் காணும் காட்சி தத்ரூபமாக இருக்கும். மனதில் தோன்றும் காட்சிகளோ மணித் துளிகளில் மறைந்துவிடும். ஆனால் மனோகர் தேவதாஸ், பாலனாக, பக்குவப்பட்ட இளைஞனாக மதுரையில் வலம் வந்தபோது, கண்ட காட்சிகளை, தூரிகையால், துல்லிய ஓவியமாக்கியுள்ளார். இளம்வயதில் பார்வை கொஞ்சம், கொஞ்சமாக பழுதாகி வந்தபோதும், அவர் ஓவியம் உருவாக்கியது விந்தையான விஷயமே.
கலந்து கொண்ட விழாக்களை எந்தக் காமிரா கவிஞனும் இப்படி காட்சிப்படுத்தவோ, மாட்சிமைப்படுத்தவோ முடியாது. தெப்பக்குளம் என்றாலும், திருக்கல்யாண காட்சியானாலும், திரளான கூட்டமுள்ள தேரோட்டம் என்றாலும், அணுஅணுவாய் ரசித்து, நுட்பமாக, வரிவரியாக வ(ரை)ரிந்தது, வாய்பிளக்க வைக்கிறது. கட்டிப் பிடிக்க முடியாத தூண்களுடன் கட்டப்பட்ட நாயக்கர் மகால், கோயிலில் சிற்பங்கள், வாயிலில் யாழிகள், அம்மன், சுவாமியின் அழகு வாகனங்கள், ரயில்வே ஸ்டேஷனில் பார்த்த இடம்; பார்க்காத விஷயம் என பலவற்றையும், விழியின்றியே, விரும்பிப் படித்துள்ளார் அந்த அதிசய மனிதர். படித்த அமெரிக்கன் கல்லூரி, பார்த்த மாசிவீதி மாடங்கள், நான்மாடக் கூடலில் வான் பார்க்கும் கட்டடங்கள், அதில் வாசல், நிலைகள், ஜன்னல்கள், மாடிகள், கைப்பிடிச் சுவர்கள், ஓவியங்கள் என அத்தனை நுணுக்கங்களையும் வரைந்தவிதம், அற்புதம் என்னும் ஓர்சொல்லில் அடக்கிவிட முடியாது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
"தூங்கா நகரம்"என்று பெயர் பெற்ற மதுரை இன்று நடுங்கி கொண்டு இருக்கிறது,யார் எப்போது கத்தியை தூக்குவார்கள் என்று.மதுரைக்கல்லூரி ஒரு பெரிய ஆலமரமாக கல்வி கற்கும் பறவைகளுக்கு புகலிடமாக இருந்தது.நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன். மேல்வெளி வீதி அன்னபூர்ண,ஜில் ஜில் ஜிகர் தண்டா,மேலபெருமாள் மேஸ்திரி வீதி தங்கம் தியேட்டர்,பகலில் அரசு நூலகமாகவும்,மாலையில் சினிமா தியேட்டராகவும் தினம் அவதாரம் எடுத்த விக்டோரியா ஹால் இப்படி பல முகங்கள் இருந்தன மதுரைக்கு.
இத்தனை சிறப்பு வாய்ந்த மதுரை மாநகரில் பிறந்து வாழ்வதை நினைத்து பெருமைபடுகிறேன் ., வானை முட்டும் அழகிய கம்பிரதுடன் நிற்கும் தெற்கு இராஜகோபுரம் எங்கள் வீட்டு மாடியில் இருந்து பார்த்தல் மிகவும் பிரம்பிபாக இருக்கும் ஆம் கோவிலுக்கு அருகில் உள்ள தெற்கு ஆவணி மூலவீதி தான் எங்கள் வீடு ., சுமார் 4 தலைமுறைகளாக இதே தெருவில் வசித்துவருவது மதுரையின் மண்ணின் மைந்தர்கள் என்ற பெருமை எனக்கு உண்டு ., கலாச்சாரத்தின் தலைநகர் ., தொன்மையான நகரம் என்ற சிறப்பு மதுரை கு இருந்தா போதிலும் தற்போது உள்ள என் போன்ற இளைய தலைமுரையினாருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ., கோவில் அருகில் இருப்பதானால் திருவிழா அனைத்தையும் நேரில் பார்த்த அனுபவம் எல்லாம் மதுரையின் சிறப்புகளை எனக்கு சொல்லித்தந்தவை ., மதுரையை போற்றுவோம் நிகழ்ச்சியின் மூலம் மதுரையின் பெருமையை உலகிற்கு எடுத்து சொல்லும் ஒரு அறிய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த தமிழக அரசுக்கும் ., தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் ., இந்த விழாவினை சீரோடும் சிறப்போடும் தலைமை ஏற்று நடத்தும் மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் திரு அன்சுல் மிஸ்ரா அவர்களுக்கும் மதுரை மண்ணின் மைந்தன் என்ற உரிமையில் மதுரை மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ., மதுரை பற்றியை சிறப்பு மிகு செய்தி வெளியிட்டுள்ள தினமலர்க்கும் நன்றிகள் .,

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.