புதுடில்லி : ஹெலிகாப்டர்கள் மட்டுமே இறங்கும், புறப்பட்டு செல்லும், பிரத்யேக, "ஹெலிபோர்ட்'கள், சென்னை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் விரைவில் துவக்கப்பட உள்ளன. பெரு நகரங்களிலும், முக்கிய நகரங்களிலும், போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாகி வருகிறது. வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, சாலைகளில் ஆக்கிரமிப்பு போன்ற பல காரணங்களால், குறிப்பிட்ட நேரத்தில், எங்குமே செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால், தொழிலதிபர்கள், வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள், ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் ஹெலிகாப்டரை கிளப்பி, நினைத்த இடத்தில் இறங்க முடியாது. விமான போக்குவரத்து துறையிடம் முன்கூட்டியே அனுமதி பெற்ற பிறகுதான், ஹெலிகாப்டர்களை கிளப்ப முடியும்.
மேலும், விமானங்கள் வந்திறங்கும், "ஏர்போர்ட்' போல், ஹெலிகாப்டர்களை இறக்க, "ஹெலிபோர்ட்'கள் கிடையாது. ஆகவே, விமான நிலையங்களிலும், விமான தளங்களிலும் தான், ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகின்றன. ஹெலிகாப்டரில் பயணம் செய்தாலும், விமான நிலையங்களில் இருந்து வெளியே வந்து, மீண்டும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்ளும் நிலை தான் காணப்படுகிறது.
இதனால், ஹெலிகாப்டர்கள் மட்டுமே இறங்கும், புறப்படும், பிரத்யேக, "ஹெலிபோர்ட்'களை, முன்னணி நகரங்களில் துவக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, டில்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களிலும், அதன் பிறகு, சென்னை, கோல்கத்தா, லக்னோ போன்ற நகரங்களிலும், "ஹெலிபோர்ட்'கள் துவக்கப்பட உள்ளன.
இது குறித்து, ஹெலிகாப்டர்களை இயக்கும், "பவான் ஹான்ஸ் ஹெலிகாப்டர்ஸ்' நிறுவனத்தின் செயல் இயக்குனர், சஞ்சீவ் பஹல் கூறும் போது, ""ஹெலிபோர்ட்களுக்கும், குறைந்தபட்சம், 25 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. நகர பகுதிகளில் இவ்வளவு இடம் கிடைப்பது சிரமமாக உள்ளதால், திட்டம் தாமதமாகி வருகிறது. விரைவில் சில நகரங்களில் இத்திட்டம் துவக்கப்படும்,'' என்றார்.