ராய்ப்பூர்: "கிரக நிலைகள் பாதகமாக இருப்பதால் தான், நாட்டில், கற்பழிப்பு சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன,'' என, சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சர், நான்கிராம் கன்வர் கூறியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரில், ராமன் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் உள்துறை அமைச்சராக, பா.ஜ.,வைச் சேர்ந்த, நான்கிராம் கன்வர், பதவி வகிக்கிறார். சமீப காலமாக, நாட்டில், கற்பழிப்பு சம்பவங்கள் அதிகம் நடப்பது குறித்து, அவர் கூறியதாவது: நம் நாட்டில், தற்போது கிரக நிலை சரியில்லை. கிரகங்கள் அனைத்தும், பாதகமான நிலையில் உள்ளன. இதனால் தான், கற்பழிப்பு போன்ற துயர சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன; இந்த பிரச்னைக்கு நம்மால், தீர்வு காண முடியாது. ஜோதிடர்கள் தான், கிரக நிலைகளை கணித்து, இது போன்ற பிரச்னைகளுக்கு, எப்படி தீர்வு காண வேண்டும் என்பதை கூற வேண்டும். இவ்வாறு கன்வர் கூறினார்.
காங்., கடும் கண்டனம்...
அவருடைய இந்த கருத்துக்கு, காங்கிரஸ் கட்சி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சத்தீஸ்கர் மாநில காங்., தலைவர், நந்த குமார் படேல் கூறியதாவது: சத்தீஸ்கர் மாநில அரசால் நடத்தப்பட்டு வரும் பள்ளியில் படிக்கும், பழங்குடியின மாணவியை, சிலர், பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு, மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும். இது போன்ற சம்பவங்களை தடுக்க தவறிய, மாநில அரசை, கலைக்க வேண்டும் என, கவர்னரிடம் மனு கொடுத்தோம். எங்களின் நடவடிக்கைகளை கிண்டலடிக்கும் வகையில், உள்துறை அமைச்சர், இவ்வாறு கூறியுள்ளார். அவரின் பேச்சு, சிறு பிள்ளைத் தனமாகவும், எரிச்சலூட்டும் வகையிலும் உள்ளது. இவ்வாறு நந்த குமார் படேல் கூறினார். முதல்வர் ராமன் சிங் கூறுகையில், ""உள்துறை அமைச்சர் கூறியதற்கு, நான் என்ன பதில் அளிக்க முடியும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த நூற்றாண்டில் சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சர், நான்கிராம் கன்வர் "கிரக நிலைகள் பாதகமாக இருப்பதால் தான், நாட்டில், கற்பழிப்பு சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன,'' என கூறியுள்ளமை நகைப்புக்குரியதாகும். உலகில் பிரதானமாக வளர்முக நாடுகளிலேயே பெரும்பாலும் பெண்களுக்கெதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் பெண்களுக்கெதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளை நோக்கும் பொழுது பல விடயங்கள் புலப்படுகின்றன. ஆதிகாலத்தில் பெண்கள் ஆண்களுக்கு சரிசமமாகவே மதிக்கப்பட்டு இருந்தனர். இந்து மதத்தின் மிகப் பழமையான நூலான ரிக் வேதமே இறைவன் முன் ஆண் பெண் இருபாலாருமே சமமாகக் கருதப்பட்டதை உறுதியாகக் கூறுகிறது. அதுமட்டுமன்றி சுமார் 12000 வருடங்களுக்கு முன்னர் இந்து மதம் பரவியிருந்த காலத்திலேயே பெண்மைக்கு முக்கிய இடத்தை அளிக்கும் வகையில், கைலாயமலையில் உருவாக்கி வந்த சரஸ்வதி நதியையும் பென்மையாகவே கருதியிருந்தனர். சரஸ்வதி என்னும் சம்ஸ்கிருத சொல்லானது 12000 வருடங்களுக்கு முன்னரே வழக்கிலிருந்தது. சரஸ்வதி பிரமனின் தெவியாதலால், அறிவும் உருவாக்கமும் ஐக்கியப்பட்டு இருக்கும் சின்னத்தின் மூலம் அறிவை ஊட்டுவதில் பெண்ணின் பங்கு எவ்வளவு பிரதானமானது என்பதை உணரலாம். மேலும் சமய மார்க்கத்தில் ஒளவையார், திருவள்ளுவர், கம்பர், போன்ற தமிழகத்து புலவர்களும், பிற்காலத்தில் சாரதாதேவி அம்மையார் போன்ற பெண்மணிகளும், அன்னியரின் படையெடுப்பை எதிர்த்துப் போராடிய ஜான்சி ராணி போன்றவர்களும், பாரதம் சுதந்திரம் அடைந்த பின்னர் இந்திரா காந்தி, விஜயலட்சுமி பண்டிட் போன்றவர்களும் இந்தியப் பெண்மணிகளின் பெருமையை அகிலமெங்கும் நிலை நாட்டியிருந்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக பாரத தேசத்துக்கு அந்நியரின் படையெடுப்புக்கு பின்னரே சமூகத்தில் பல மாற்றங்கள் காலப் போக்கில் ஏற்படத் தொடங்கியது. இதுவே சமூக கலாச்சார சீரழிவுக்கு பல கோணங்களில் அடி கோளியதுடன், பெண்கள் பாலியல் தாக்குதலுக்கும் குறி வைக்கப்பட்டனர் எனக் கூறலாம். பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளிலும், தெற்காசிய நாடுகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மற்றும் ஈரான் போன்ற இஸ்லாமிய நாடுகளிலும் ஆண்களின் மேலாதிக்கத்தின் பொருட்டு பெண்களின் உரிமைகள் உதாசீனப்படுத்தப்படுவது பொதுப்படையில் மறுக்கப்பட முடியாத ஒரு நிகழ்வாகும். இதே போல் ஜனநாயகம் நன்கு வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் குறிப்பிட்ட ஒரு சாராரிடம் தேங்கியிருக்கும் செல்வத்தின் வலிமையினால் பெண்களின் உரிமைகள் உதாசீனப்படுத்தப்படுவதும் அல்லது பெண்கள் வலிமை மிக்க செல்வத்துக்கு விலை போவதும் பொதுப்படையில் மறுக்கப்பட முடியாத ஒரு நிகழ்வாகும். எனினும், சகல மதக் கோட்பாடுகளையும் தன்னகத்தே கொண்ட இந்து மதம் தோன்றிய புண்ணிய பூமியான இந்தியாவில், பெண்கள் மீது நடாத்தப்படும் பாலியல் தாக்குதல்களை நோக்கும் பொழுது, அது பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடூரமாகவே கருத வேண்டியுள்ளது. சில சமயம் தலிபான் சட்டங்கள் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டதோ என சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவில் சில இடங்களில் காவல் துறையினரே பெண்களைக் களங்கப்படுத்தும் செய்திகளும் வெளியாகின்றன. இவ்வளவுக்கும் இந்தியாவில் உள்ள பெண்கள் சகல துறைகளிலும் தங்களது திறமைகளை வெளிக் காட்டி மேற்கத்திய நாடுகளுக்கும் தாம் நிகரானவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். அத்துடன் தங்களது கலாச்சாரத்தையும் உதறிவிடாது சிறந்த பண்புடன் வாழ்ந்து இந்தியாவுக்கு பெருமை அளிப்பதையும் அனைவரும் ஒதுக்கி விட முடியாது. எனவே பெண்களை தாழ்வு மனப்பான்மை நிமித்தம் பார்ப்பது என்பது அறியாமையாகும். ஆதலால் பெண்களை இத்தகைய கொடூரமான பாலியல் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவதற்கு அரசியல், பொருளாதார, சமூக ரீதியில் ஒரு சட்ட வடிவம் கொடுப்பதே சிறந்த முறையாகும். இந்தியாவில் மக்களின் சனத்தொகை நாளாந்தம் கூடிக் கொண்டே செல்கிறது. தினமும் அதிகரித்துக் கொண்டிருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு பொருளாதாரம் முன்னெடுக்கப்படவில்லை. அரசியல்வாதிகளின் குருட்டுத்தனமான பொருளாதாரக் கொள்கையினால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகில் சகல துறைகளிலும் மாற்றங்கள் ஏற்படும் பொழுது இந்தியாவின் கொள்கையும் அதற்கேற்றவாறு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். உண்மையில் நடவடிக்கைகளின் வேகம் காணாது. தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடில் ஒரு குறிப்பிட்ட சாராரிடம் (haves) செல்வம் தேங்கும் நிலை ஏற்படுவதால், செல்வம் இல்லாதவர்கள் (have nots) ஒரு குறிப்பிட்ட செல்வம் உள்ளவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இத்தகைய சூழ்நிலையிலேயே குறிப்பாக பெண்கள் பாலியல் ரீதியில் குறி வைக்கப்படுகின்றனர். இன்றைய உலகில் திரையுலகமும் கலாச்சார சீரழிவுக்கு ஓரளவு காரணமாக அமைகிறது. தயாரிப்பாளர்களும் டைரக்டர்களும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைக் காட்சிகளை புகுத்துவதால், அவை மக்களின் மனதில் வெகு விரைவில் இலகுவாக பதிகின்றது. செல்வம் மிகுந்தவர்களின் நிர்ப்பந்தத்தினால் பணத்திற்காக நடிக நடிகைகள் இக்காட்சிகளில் நடிக்கின்றனர். திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிக, நடிகைகளின் குறிக்கோள் பணம். ஆனால் அதன் விலையோ கட்டவிழ்த்தப்படும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள். ஒரு கணம் மக்களாகவே சிந்தித்து இத்தகைய படங்களை தாமாகவே ஒதுக்கினால், தயாரிப்பாளர்களும் இத்தகைய படங்களை தயாரிக்க முன் வரமாட்டார்கள். பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குறைவதற்கு வாய்ப்புண்டு. ஆனாலும் ஊழல்கள் நிறைந்த சமூகத்தில் இவை நடைபெறக் கூடிய சாத்தியக் கூறுகளா என்பதையும் அவதானித்தல் வேண்டும். அடுத்து, பெண்கள் அணியும் கவர்ச்சிகரமான மேற்கத்திய உடைகளே இத்தகைய பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கின்றது என்பது சிலரது வாதமாகும். அப்படியாயின் இந்து மத தெய்வங்களை கவர்ச்சிகரமாக சிற்பிகள் வடிகட்டி சித்தரிப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். பெண்ணை ஒரு தாய்மையின் வடிவத்திலேயே பார்க்க வேண்டும். கவர்ச்சி என்பது ஒருவரது மனக் கண்ணைப் பொறுத்தது. கலையை கலைக் கண் நோக்குடன் பார்க்க வேண்டும். உணர்ச்சி களை ரசனையை மறைக்கக் கூடாது. இந்த இடத்தில் தான் இந்து மதம் மனதை அலைய விடாது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு தியானம் மூலம் படிப்படியான ஆன்மீக பயிற்சி அளிக்கின்றது. அடுத்து, புண்ணிய பூமியான இந்தியாவில் இந்து மதத்துக்கே களங்கம் விளைவிக்கும் வகையில் போலிச் சாமியார்களும் காளான்கள் போல் அவ்வப்பொழுது தோன்றுகிறார்கள். இவர்களின் பின்னால் இயங்கும் பல விதமான தீய சக்திகள் மறைமுகமாக ஆன்மீக வளர்ச்சி என்ற போர்வையில் அதிகப்படியான நிதிகளை பல்வேறு வழிகளில் சேகரிப்பதுடன், தவறான பாதையில் ஆன்மீகத்துக்கு ஒரு வடிவம் கொடுப்பதால், அனேகமாக பெண்களே இதில் கவரப்பட்டு சிக்கி அவர்களது நிலைமை விபரீதமாகிறது. எனவே சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இந்து மகா சபை, வருமான வரி இலாகா ஆகியவற்றின் மேற்பார்வையில் போலிச் சாமியார்களின் ஆசிரமங்களை கண்காணிக்கும் சிறப்பான நடவடிக்கைகளை கையாளலாம். இவற்றுக்கு மத்தியில் இன்று பெரும்பாலானோரின் மனோநிலையையும் ஆராயும் பொழுது பல உண்மைகள் வெளிவருவதையும் காணலாம். இன்று சீதனக் கொடுமையினால் பெண்களை கொடூரமாக துன்புறுத்தும் நிலைமை தொடர்ந்து கொண்டே இருப்பதை செய்திகளில் காணக் கூடியதாக உள்ளது. மணமகனின் பெற்றோரே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றனர். பொதுவாக நிர்ப்பந்தப்படுத்தி நடைபெறும் திருமணங்களில் இது சகஜமாக நடக்கிறது. இதில் மணமகன் விரும்பாமல் திருமணம் செய்வதால், வேறு பெண்களைக் கண்டதும் பல விபரீதங்கள் நடைபெற சந்தர்ப்பங்கள் உள்ளன. பொதுவாக காதல் திருமணங்களில் இத்தகைய பிரச்சினைகள் ஏற்பட இடமில்லை. மேலும் பெண்களில் ஒரு சாரார், ஏனைய சாரார்களிடமிருந்து வேறுபட்டவர்களாக தென்படுகிறார்கள். இதனை தொழில் ரீதியிலும், சமூகக் கட்டுக் கோப்பிலும் காணக் கூடியதாக உள்ளது. ஓரளவு உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களைக் கண்டதும், தாழ்வு மனப்பான்மையுடையவர்களுக்கு அவர்களைத் தீண்டிப் பார்ப்பதற்கு உணர்ச்சி வசப்படுகிறார்கள். காணாத ஒன்றைக் கண்ட மாதிரி செயல்பட முற்ற்படுவதால், இத்தகைய விபரீத விளைவுகள் ஏற்படுகின்றன. இந்த வகையில் தான் டில்லி மருத்துவ மாணவி குறிவைக்கப்பட்டு காமுகர்களால் பலியாக்கப்பட்டுள்ளார் என எண்ணுகிறேன். அண்மையில் இதே பாணியில் புது வருடத் தினத்தன்று இலங்கையிலும் ஒரு நடிகையை வரும் வழியில் நான்கு கயவர்கள் கற்ற்பளித்து விட்டு பற்றைக்குள் எரிந்து விட்டு சென்றதாக செய்திகள் வந்துள்ளன. இவை மேலை நாடுகளிலும் நடை பெற்றுக் கொண்டே இருக்கின்றன. மீதும் இத்தகைய குற்றங்கள் இந்தியாவில் நடை பெற்றதாக செய்திகள் வந்துள்ளன. இத்தகைய குற்றங்களை தடுப்பதற்கு பரிகாரங்கள் இல்லையா என்பதே எல்லாரதும் ஆவலாகும். மேலை நாடுகளில் ஆண் பெண்ண இருபாலாரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் அளவுக்கு பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் பழகுகின்றனர். அத்துடன் பல்வேறு தொழில் துறைகளில் ஈடுபடுபவர்களும் பொது மக்களுடன் இணைந்து சமூக சேவையில் (community service) ஈடுபடுகின்றனர். இதனால் அவர்கள் பாகுபாடு போன்ற பேதங்களை மறந்து ஒருவரை ஒருவர் மதித்து நடக்கின்றனர். இத்தகைய ஆரோக்கியமான முறையை தெற்காசிய (இந்தியா உட்பட) நாடுகளில் காண முடியாது. இந்தியாவில் உயர் அதிகாரிகள், காவல் துறையினர், திரையுலகினர், பெரும் முதலாளிகள், மாணவர்கள், பாமர மக்கள் ஆகியோர் ஒன்றாக இணைந்து சமூக சேவைகளில் ஈடுபடுவது மிகவும் அரிது. எனவே தான் தொண்டர் சபைகளில் இத்தகைய மக்கள் ஒன்றாக இணைந்து கோவில் திருவிழாக்கள், ஆசிரமங்கள், வைத்தியசாலைகள், வயோதிபர் இல்லங்கள் போன்றவற்றில் சமூக சேவையில் ஈடுபட்டால் புரிந்துணர்வுகள் ஏற்பட இடமுண்டு. அரசியல் ரீதியில், பெண்களுக்கென ஒரு பிரத்தியேகமான சட்ட மூலத்தை மனித உரிமைகள் சாசனத்தில் உள்ளடக்கி அரசியல் சட்டத்தின் ஒரு பிரதான அம்சமாக பிரகடனப்படுத்தல் வேண்டும். இதற்கமைய காவல் துறையில் மகளிர்கள் நீதிமன்றங்களில் வழக்குப் பதிவு செய்யும் அளவுக்கு போதிய அதிகாரங்களுடன் வேலைக்கு அமர்த்தப்பாடல் வேண்டும். அன்றியும் மகளிர்க்கான அரச சார்பற்ற ஸ்தாபனங்களுடன் இணைந்து செயற்படும் சலுகைகள் கொடுக்கப்படல் வேண்டும். இந்தியாவில் சமூகத்தினரிடையே எவ்வளவு சிக்கல்கள் நிறைந்திருந்தாலும், பல்வேறு மாநிலங்களில் வாழும் பல்வேறு வகுப்பினரையும் ஒன்றிணைக்கும் வலிமையைக் கொண்டது இந்து மதம். இந்து மதமானது ஒரு வகையான வாழ்வு முறையாகும். சமூக கட்டுக் கோப்பு என்னும் வளையத்தில் ஒவ்வொரு வைபவங்களிலும் பெண்களே பிரதான பங்கை வகிக்கின்றனர். ஒவ்வொரு பண்டிகை வைபவங்களிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சமூக ரீதியில், பெண்கள் வீடுத் தெய்வங்களாக கருதப்பட வேண்டியவர்கள். எனவே ஒவ்வொரு பெண்ணும் கடைசியில் தாயாகக் காட்சியளிப்பார்கள் என்னும் மனப்பான்மையை ஒவ்வொருவரும், தமது மனதில் பதிய வைப்பார்களேயானால், பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறைவதற்கு இடமுண்டு. பழைய காலத்தில் பொதுவாக அரசர்களுக்கிடையே யுத்தங்கள் ஏற்பட்டாலும் பெண்களை குறி வைத்து மானபங்கம் படுத்தும் நோக்கில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதில்லை. காலப் போக்கில் அந்நியர்களின் படைஎடுப்ப்க்களின் விளைவுகளாலும், ஒரு சில மத வெறியர்களின் குறுகிய நோக்கங் கொண்ட சுயநலத்தினாலும் சமூகத்தில் விரிசல்கள் ஏற்பட, ஈற்றில் பெண்களே பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். அன்றியும் ஒரு சில மத வெறியர்களினால் நாத்திகம் ஊக்குவிக்கப்படுகின்றது. எனினும் நாத்திகத்தின் பக்க விளைவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பாக்க விளைவுகளில் ஒன்று பல தார மணங்கள். இது கடைசியில் பிள்ளைகளிடையே பல பினகுகளை கொண்டு வரும். இதனால் பெண்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட முடியாமல் போகும். மேலும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுதல் மூலம் பெண்களுக்கெதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை நிரந்தரமாக தடை செய்ய முடியாது. அதுவும் பல மாநிலங்களைக் கொண்ட பலவேறு பிரிவினரைக் கொண்ட மக்களிடையே பெண்களுக்கெதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை ஒரே நாளில் நிறுத்துவதென்பது நடை முறையில் சாத்தியமானதல்ல. ஆரம்பத்திலேயே சமூகக் கட்டுக்கொப்பையில் பெண்களுக்குரிய சிறப்பான இடத்தின் பெருமையை மக்கள் மனதில் ஆழமாக பதியும்படி சமய நெறிகள் போதிக்கப்பட வேண்டும். ஏனெனில் குற்றவாளிகளைத் தண்டிப்பதிலும் பார்க்க, குற்றங்கள் புரிவதை தடை செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதே சாலச் சிறந்ததாகும்.
இந்தியாவின் மக்கள் தொகையையும், விஞ்ஞான வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பெண்களை தீயவர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமானால், மக்களின் மனதை தூய்மைப்படுத்த வேண்டும். மிருகத்தனமான குணாதிசயங்களைக் கொண்ட ஒரு நபரை நீண்ட ஆன்மீகப் பயிற்சி மூலமே சாதாரணமான குணாதிசயங்களைக் கொண்ட ஒரு நபராக மாற்ற முடியும் என்பதனை நவராத்திரி விழாவின் தத்துவம் உணர்த்துகிறது.. அதாவது மனத்தைக் கட்டுப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து மனம் தூய்மை அடைவதற்கு ஒன்பது இரவுகள் சக்திக்கு விழா எடுக்கின்றனர். அன்றியும் மகாலக்ஷ்மியையும் சரஸ்வதி தேவியையும் வீட்டுத் தெய்வமாக கருதுவது போல், பெண்களையும் வீட்டுத் தெய்வங்களாக கருதுவோமானால், இந்த பாலியல் தாக்குதல் பிரச்சினைக்கு ஒரு முடிவைக் காண முடியும். எனவே பெண்களுக்கென ஒரு பிரத்தியேகமான சட்ட மூலத்தை மனித உரிமைகள் சாசனத்தில் உள்ளடக்கி அரசியல் சட்டத்தின் ஒரு பிரதான அம்சமாக இருப்பதை மனதில் வைத்து, "பெண்கள் வீட்டுத் தெய்வங்கள், அவர்களைப் பாதுகாப்போம்" என்ற தலைப்பில் :பெண்களுக்கென ஒரு பிரத்தியேகமான மனித உரிமைகள், இந்திய அரசியல் சட்டத்தின் மனித உரிமைகள் சாசனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது" என பல துண்டுப் பிரசுரங்களை பஸ், பேரூந்துகள், சந்தைகள், வாசிகசாலைகள், பலகலைக் கழகங்கள், கோவில்கள், கந்தோர்கள், போன்ற பொது இடங்களில் ஓட்டினால், காலப் போக்கில் மக்களின் மனதில் படியக் கூடியதாக இருக்கும். தமிழ் நாடு இந்த விடயத்தில் முன்மாதிரியா காட்டினால், ஏனைய மாநிலங்களும் இதனைப் பின்பற்ற இடமுண்டு. இதனால் தமிழ் நாட்டுக்கு நற்பெயரும் ஏற்படும். இம்முயற்சியை மக்கள் திடசங்கற்பமாக உறுதி பூண்டால் பெண்களும் பாதுகாக்கப்படுவர். இந்தியாவும் யாவரும் போற்றும் வகையில் பாதுகாப்பான நாடாக மிளிரும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.