சென்னை: கமல் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, தனி நீதிபதி வெங்கட்ராமன் அளித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இவ்வழக்கின் விசாரணை வரும் பிப்ரவரி 6ம் தேதி மீண்டும் நடக்கிறது. இந்நிலையில், தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்ல கமல் முடிவு செய்துள்ளார்.
நடிகர் கமல் நடித்த, சர்ச்சைக்கு உள்ளான, விஸ்வரூபம் படத்தை, தமிழக தியேட்டர்களில் திரையிட, 15 நாட்களுக்கு, மாவட்ட கலெக்டர்கள், தடை விதித்தனர். இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், "ராஜ்கமல் பிலிம்ஸ்' சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை, நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்தார். படத்தை, 26ம் தேதி, திரையிட்டு காட்டும்படி உத்தரவிட்டு, விசாரணையை, 28ம் தேதிக்கு, நீதிபதி வெங்கட்ராமன் தள்ளி வைத்தார். அதன்படி, 26ம் தேதி, இப்படம், சென்னை வடபழனியில் உள்ள ஒரு ஸ்டூடியோவில், நீதிபதிக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு, நீதிபதி வெங்கட்ராமன் முன், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "மாவட்ட கலெக்டர்கள் தடை விதித்து, தியேட்டர்களுக்குப் பிறப்பித்த உத்தரவின் நகல்கள், எங்களுக்கு கிடைத்துள்ளன. இதை எதிர்த்து நாங்கள் மனு தாக்கல் செய்ய உள்ளோம்,'' என்றார். இதற்கான, மனுக்களை தாக்கல் செய்யுமாறும், விசாரணையை தள்ளிவைப்பதாகவும், நீதிபதி வெங்கட்ராமன் தெரிவித்தார். "இந்தப் பிரச்னையை சுமுகமாகத் தீர்க்க, அனைத்து முயற்சிகளையும் எடுக்கலாம். தனி நபர் உரிமைகளை விட, நாட்டின் ஒற்றுமையே மிகவும் முக்கியம். உங்கள் தரப்பிலோ, எதிர் தரப்பிலோ எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும், நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடாது' என, நீதிபதி கூறினார்.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது வாதம் செய்த தமிழக அரசு வக்கீல் நவநீத கிருஷ்ணன், விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்தார். இப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் அளித்த குழுவைச் சேர்ந்தவர்கள் யாரும் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல என்றும், இந்த படத்தின் தணிக்கைச் சான்றிதழே முறைகேடானது என்றும் வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து பேசிய கமல் தரப்பு வக்கீல் ராமன், விஸ்வரூபம் படத்திற்காக கமல் இதுவரை தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் கொட்டியுள்ளார். இப்படத்திற்காக அவர் முழுமையாக உழைத்துள்ளார். சென்சார் போர்டு அனுமதியளித்து விட்ட நிலையில், தற்போது மாநில அரசு தடை செய்வது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்தார். இப்படம் கேரளா மற்றும் ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் வெளியிடக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் ஒரு படத்தை எதிர்த்து 31 மாவட்டங்களில் 144 தடை சட்டம் விதிக்கப்பட்டுள்ளது. அப்படி தடைவிதிக்கும் அளவுக்கு சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டதா எனவும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தமிழக தரப்பு வக்கீல், விஸ்வரூபம் என்ற படத்தை கமல், வினியோகஸ்தர்களுக்கு விற்றுவிட்டார். அதன் பின்னர் இப்படம் தொடர்பாக எந்த உரிமையும் தற்போது அவரிடம் இல்லை. எனவே இப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக வழக்கு தொடரும் உரிமை கமலுக்கு இல்லை என்றும், இப்படம் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்துக்கு எதிராக உள்ளதால் அரசு இந்த தடையை விதித்துள்ளது என்று கூறினார். பின்னர் வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து,இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து இரவு 8 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார். இந்நிலையில் தீர்ப்பு இரவு 10 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு 10:15 மணி அளவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிபதி வெங்கட்ராமன் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கின் ஒட்டு மொத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, குற்றவியல் நடைமுறை சட்டபிரிவு, 144ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த உத்தரவை அமல்படுத்த தடை விதிக்கப்படுகிறது. மேலும், இப்படத்தை வெளியிடும் மனுதாரரின் உரிமையில் குறுக்கிட அரசுக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வழக்கில் ஆரம்ப முகாந்திரம் உள்ளதால், இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பதில் மனு தாக்கல் செய்தபின், சட்டப்படி தகுதி அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், "சினி மோட்டே கிராப்' சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட உரிய அமைப்பில் மனு தாக்கல் செய்யலாம், அதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது. இவ்வாறு நீதிபதி வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை இன்று காலை வரை நிறுத்தி வைக்க வேண்டும் என, கூடுதல் அட்வகேட்-ஜெனரல் அரவிந்த் பாண்டியன் கூறினார். ஆனால், அதை நீதிபதி எற்கவில்லை. இந்த வழக்கு விசாரணையையொட்டி, சென்னை ஐகோர்ட்டில் நேற்று போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கிடையே, ஐ கோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதையொட்டி, இந்த மனு மீதான விசாரணை, இன்று நடைபெறும் என தெரிகிறது விஸ்வரூபம் படம் மீதான தடை விலக்கப்பட்டதை தொடர்ந்து, கமல் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
மேல்முறையீடு: விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு இன்று காலை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எலிபி தர்மாராவ் மற்றும் அருணா ஜெகதீசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை தலைமை நீதிபதி எலிபி தர்மாராவ் ஏற்க மறுத்து விட்டார். இதையடுத்து இந்த வழக்கு மதியம் 2.15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எலிபி தர்மாராவ், அருணா ஜெகதீசன் அடங்கிய பெஞ்ச், தடையை நீக்கி உத்தரவிட்ட தனிநீதிபதியின் உத்தரவிற்கு தடை விதித்தார். இவ்வழக்கின் விசாரணை வரும் பிப்ரவரி 6ம் தேதி மீண்டும் நடக்கிறது. தமிழக அரசு சார்பில் வரும் திங்கட்கிழமைக்கும் பதில் தரவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில், தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்ல கமல் முடிவு செய்துள்ளார்.
கமல் பேட்டி: இந்நிலையில், விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக சென்னையில் பேட்டியளித்த அவர், "என்னுடைய படம் நடக்கும் களம் ஆப்கானிஸ்தான். இது இந்திய முஸ்லிம்களை எப்படி கேலி செய்ய முடியும். என்னுடைய இந்த படத்தை எடுத்திருப்பதாக பெரும் செலவு செய்திருக்கிறேன். என்னுடைய திரையுலகை அனுபவத்தையும் எனக்கு இருக்கும் தொழில்நுட்பத்தை கொண்டும் இந்த படத்தை எடுத்துள்ளேன். இந்தபடத்துக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் அடகு வைத்துள்ளேன். படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் இப்போது நான் உங்களுக்கு பேட்டி அளித்து கொண்டு இருக்கும் இந்த வீடு எனது இல்லை. கோர்ட்டில் வழக்கு நடந்தபோது நீதிபதி கேட்டார். ஒருவரின் முதலீடுக்காக நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டுமா என்று கேட்டார். நான் இப்போதும் சொல்கிறேன். நாட்டின் ஒற்றுமை தான் முக்கியம். நாட்டுக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் இழக்க தயாராக இருக்கிறேன். எனக்கு மதம் கிடையாது, அரசியல் கிடையாது. எனக்கு மனிதநேயம் முக்கியம். மனதில் பட்டதை தைரியமாக எடுத்து சொல்பவன். இந்தப்படம் நிச்சயம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் கிடையாது. எதற்காக எனது படத்தை தடை செய்கிறார்கள் என்று புரியவில்லை. என்னை வீழ்த்தி விடலாம் என்று சிலர் கருதுகின்றனர். நான் விழுந்தால் விதையாக விழுவேன். மீண்டும் மீண்டும் எழுவேன். சுதந்திரப் பறவைகள் வந்தமரும் மரமாக உயர்வேன். இது சோலையாகும், காடாகும். ஆனால் விதை நான் போட்டது. எனது பட வசனமே எனக்கு உதவிக்கு வருகிறது. ஒருவேளை தமிழகம் மதச்சார்ப்பற்ற மாநிலமாக இல்லாமல் போய்விட்டால் நிச்சயம் வேறு ஒரு மாநிலத்தை தேடி போவேன். அதற்காக தமிழகத்தை விட்டு வெளியேறவும் நான் தயார். வேறு மாநிலமும் கிடைக்காவிட்டால் வேறு நாட்டை தேடி போவேன். இன்று படம் பார்க்கச் சென்ற எனது ரசிகர்களை தியேட்டர்களை விட்டு வெளியேற்றியுள்ளனர். அது ஏன் என்று விளங்கவில்லை. என்னிடம் இப்போது எதுவும் இல்லை. இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை. எனது ரசிகர்கள் அமைதியானவர்கள். அவர்களில் பலர் முஸ்லிம்கள். அவர்கள் அனைவரும் தொடர்ந்து அமைதியாகவே இருப்பார்கள். கேரளாவில் மலபார், ஐதராபாத்தில் படம் அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் எனது நீதி தாமதப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்". இவ்வாறு பேசினார். இதைத் தொடர்ந்து அவரிடம் கேள்வி எழுப்பிய நிருபர் ஒருவர், நீங்கள் தமிழகத்தை வெளியேற வேண்டும் என விரும்புகிறீர்களா என கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகம் தான் நான் வெளியேற வேண்டும் என விரும்புகிறது என கமல் வேதனையுடன் தெரிவித்தார்.