சென்னை: சென்னையில் கடந்த தி.மு.க., ஆட்சியின் போது கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தில், பல்நோக்கு மருத்துவமனை செயல்பட, பசுமை தீர்ப்பாய சென்னை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த, தி.மு.க., ஆட்சியின் போது, சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபைக்கான கட்டடம் கட்டப்பட்டது. 425 கோடி ரூபாய்க்கும் மேல், இதற்காக செலவிடப்பட்டது. 2010ம் ஆண்டு, மார்ச், புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலக கட்டடத்தை, பிரதமர் மன்மோகன் சிங், திறந்து வைத்தார். இந்தப் புதிய கட்டடத்தில், சட்டசபையும் கூடியது. தலைமைச் செயலகத்தில் உள்ள பல துறைகள், புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே, தலைமைச் செயலகமும், சட்டசபையும் மாற்றப்பட்டன.இதையடுத்து, புதிய கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவது என, தமிழக அரசு முடிவெடுத்தது. 2011ம் ஆண்டு, ஆகஸ்ட், 19ம் தேதி நடந்த, அமைச்சரவை கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், வழக்கறிஞர் வீரமணி, மியாஜன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இம்மனுக்களை, விசாரித்த நீதிபதிகள் பாஷா, என்.பால்வசந்தகுமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்': புதிய தலைமைச் செயலகத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற, சுற்றுப்புறச்சூழல் அனுமதியை, தமிழக அரசு ஏற்கனவே பெற்று விட்டது. தீ அணைப்புத் துறையிடம் இருந்து, ஆட்சேபணையில்லா சான்றிதழையும், பெற்று விட்டது.
சுற்றுப்புறச்சூழல் அனுமதி பெற்றதை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், மனுதாரர் மனு தாக்கல் செய்துள்ளார். அது, நிலுவையில் உள்ளது. எனவே, அதுகுறித்து ஆராய முடியாது. தற்போதுள்ள கட்டடத்தில், "ஏ' பிளாக்கில், மருத்துவமனைக்காக மாற்றம் செய்யும் நடவடிக்கையும், "பி' பிளாக்கைப் பொறுத்தவரை, அதில், மருத்துவக் கல்லூரிக்காக மேற்கொண்டு கட்டுமானம் செய்வது என, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.எந்த ஆதாரமும் இல்லாமல், அரசின் முடிவை, தன்னிச்சையானது என்றோ, அவசர கதியானது என்றோ, எங்களால் கருத முடியாது. பல்நோக்கு மருத்துவமனை அமைந்தால், பொது மக்களுக்கு பயன்படும்; பொது நலனுக்கு உகந்ததாக இருக்கும் என, அரசு தரப்பில் சரியாக வாதிடப்பட்டது. பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவது என, கொள்கை முடிவை அரசு எடுத்துள்ளது. அதை, தமிழக சட்டசபையும் அங்கீகரித்துள்ளது. இதில், கோர்ட் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
புதிய தலைமைச் செயலக கட்டடத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவதற்கு ஐகோர்ட் அனுமதியளித்ததையடுத்து அங்கு பொதுப்பணித் துறை உடனடியாக களமிறங்கியுள்ளது. பணிகள் மிக வேகமாக நடந்தன. இந்நிலையில், கடந்த 30ம் தேதி புதிய தலைமைச் செயலக கட்டடத்தில் பல்நோக்கு மருத்துவமனை செயல்படத்துவங்கியது. சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பானு, தண்டபாணி உள்ளிட்டோர் அடங்கிய, ஆறு பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், சிகிச்சை அளித்தனர்.நான்கு செவிலியர்கள் மற்றும் ஒரு மருந்தாளுனர் பணியில் இருந்தனர்.
இதனிடையே, புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற, சுற்றுச்சூழல் அனுமதி பெற்றதை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வீரமணி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், புதிய தலைமைச் செயலகத்தில் பல்நோக்கு மருத்துவமனை செயல்பட இடைக்கால தடை விதித்தது.