சேது சமுத்திரத் திட்டம் மற்றும் காவிரி பிரச்னை என, தமிழகத்தின் இரண்டு மிக முக்கிய பிரச்னைகள் தொடர்பாக வீசிய அனலால், பார்லிமென்ட் நேற்று தகித்துப்போனது. சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றும்படி தி.மு.க.,வும், ராமர் சேது பாலத்தை புராதன சின்னமாக்கும்படி அ.தி.மு.க., வும் முறுக்கிக் கொண்டு நின்றன. தவிர, காவிரி பிரச்னையாலும் அமளி ஏற்பட்டதால், சபை ஒத்திவைக்கப்பட்டது.
சேது சமுத்திரத் திட்டப் பிரச்னை குறித்து விவாதம் நடத்த வேண்டுமென, நேற்று லோக்சபா, ராஜ்யசபா என, இரண்டு சபைகளிலும் தி.மு.க., சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டது. இருந்தாலும், லோக்சபா துவங்கியதும் தி.மு.க., எம்.பி.,க்கள் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பியபடி சபாநாயகர் இருக்கையருகே வந்தனர்; சேது திட்டம் குறித்த போஸ்டர்களையும் தூக்கியபடி நின்றனர். உடன் அ.தி.மு.க., எம்.பி.,க்களும், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் விட மறுக்கும் பிரச்னை குறித்து, விவாதம் நடத்த வேண்டுமென வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஆந்திர எம்.பி.,க்கள் கோஷம்: தமிழகத்தைச் சேர்ந்த இரு கட்சி எம்.பி.,க்கள், இப்படி ஆளுக்கொரு பக்கம் பிரச்னையை கிளப்பிக் கொண்டிருந்த நேரத்தில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி சந்திரசேகர ராவும், விஜயசாந்தியும் தெலுங்கானா பிரச்னைக்காக குரல் எழுப்பினர். இதனால், தெலுங்கானா எம்.பி.,க்களும் சபையின் மையத்திற்கு வந்து கோஷமிட்டனர். இவர்களுக்கு மத்தியில், ஐக்கிய ஜனதாதள எம்.பி.,க்களும் கூச்சல் போட்டுக் கொண்டே இருந்தனர். பீகாரில் உள்ள அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி அளிக்காமல் இருப்பதை கண்டித்து, இந்த எம்.பி.,க்கள் ரகளையில் இறங்கினர். இந்த நேரத்தில், தமிழக காங்கிரஸ் எம்.பி.,க்கள் யாரும் சபையில் இல்லை. சித்தன் மட்டும் வந்து, சில நிமிடங்கள் இருந்து விட்டு வெளியேறி விட்டார். இப்படி மாநிலங்களின் பிரச்னைகள் சபையில் தலைதூக்கி, பெரும் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்ததால், சபையை நடத்த முடியாத சூழல் உருவானது. உடன், மதியம் 12 மணி வரை சபை நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டன.
மீண்டும் சபை கூடியபோது, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., எம்.பி.,க்கள் தத்தமது பிரச்னைகளை வலியுறுத்தி, கோஷமிட்டனர். இதனால் ஏற்பட்ட அமளியால், 2 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது. தண்ணீர் தர முடியாது பின்னர் சபை கூடி, பூஜ்ஜிய நேரம் துவங்கியது. அப்போது, கர்நாடக பா.ஜ., எம்.பி.,யான அனந்தகுமார் பேச அழைக்கப்பட்டார். அவர் பேசுகையில், "கர்நாடகாவில் விவசாயத்திற்கே தண்ணீர் இல்லை. விவசாயிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். தண்ணீர் பற்றாக்குறை நிலவும் இந்த நேரத்தில், தமிழகத்திற்கு காவிரியில் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட விட முடியாது. ஆனால், சுப்ரீம் கோர்ட் மூலமாக தமிழகம் நிர்பந்தம் அளிக்கப் பார்க்கிறது; இதை ஏற்க முடியாது,'' என்றார். இதைக் கண்டித்து அ.தி.மு.க., எம்.பி.,க்கள் கோஷமிட்டனர். சபாநாயகர் இருக்கை அருகே வந்து கோஷமிட்ட அவர்கள் அமளியில் இறங்கவே, வேறு வழியின்றி நாள் பூராவுக்கும் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
ராஜ்யசபாவில் கடும் ரகளை: சேது சமுத்திரத் திட்டம் குறித்த சர்ச்சை, ராஜ்யசபாவிலும் வெடித்தது. இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென தி.மு.க.,வும், இந்த திட்டத்தில் நடந்த ஊழல்கள் குறித்து, விசாரணை நடத்த வேண்டும் என, அ.தி.மு.க.,வும் குரல் கொடுத்ததால், சபையில் பரபரப்பு காணப்பட்டது. அத்துடன் இரண்டு முக்கிய மசோதாக்களையும் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. சபை ஒத்தி வைக்கப்பட்டது.
மத்திய அரசுக்கு தி.மு.க., எச்சரிக்கை: தி.மு.க., எம்.பி.,க்கள் சார்பில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், "சேது சமுத்திரத் திட்டம், பிரதமரால் துவக்கி வைக்கப்பட்டது. அரசின் கூட்டணி கட்சி என்ற முறையில், இந்த திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்துகிறோம். தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். காமராஜர், அண்ணாதுரை ஆகியோர் வலியுறுத்திய திட்டம் இது. தென் தமிழகத்தின் பொருளாதாரம் வளம் பெறுவதை தடுக்கும் நோக்கில், சில தீய சக்திகள் செயல்படுகின்றன. அதற்கு அரசு இடமளிக்கக் கூடாது. வழக்கு விசாரணையை விரைவுபடுத்தி, விரைவில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ராமர் சேது பாலம் பிரச்னையில், மத்திய அரசு உறுதியான முடிவை எடுக்க வேண்டும். அதைப் பலவீனப்படுத்தும் எந்த முடிவையும், மத்திய அரசு எடுத்து விடக்கூடாது. அப்படி எடுத்தால், அது தமிழக மக்களுக்கு துரோகம் செய்வது போன்றது' எனக் கூறப்பட்டுள்ளது. பின்னர் தி.மு.க., பார்லிமென்டரி கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அந்தக் கட்சி எம்.பி.,க்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரான சோனியாவையும் சந்தித்தனர். அப்போது, "சேது சமுத்திர கால்வாய் திட்டம் தொடர்பான, சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். அது, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது' என, வலியுறுத்தினர்.
இதுவல்லவோ மாநில நலன்: "காவிரியில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம்' என, லோக்சபாவில் அனந்தகுமார் பேசியது ஒருபுறம் இருக்க, கர்நாடக மாநில அனைத்து கட்சி எம்.பி.,க்களும், பார்லிமென்டில் உள்ள காந்தி சிலை முன், தமிழகத்திற்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தினர். காங்கிரஸ், பா.ஜ., மதச்சார்பற்ற ஜனதா தளம் என, முக்கிய கட்சிகளின் அனைத்து எம்.பி.,க்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, தமிழகத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர். "காவிரியில் தண்ணீர் அளிக்க முடியாது' என்று கோஷமிட்டனர். பிரதமருக்கு அனைத்து எம்.பி.,க்களும் கோரிக்கை மனுவையும் ஏற்கனவே அளித்துள்ள நிலையில், நேற்று இவர்கள் தங்களின் ஒற்றுமையை பார்லிமென்டில் காட்டினர். இது போன்ற ஒற்றுமையை தமிழகத்தின் மிக முக்கிய பிரச்னைகளில் அ.தி.மு.க., - தி.மு.க., எம்.பி.,க்கள் காட்டாமல் இருந்து வருகின்றனர். அதிலும், தமிழக காங்கிரஸ் எம்.பி.,க்கள் முக்கிய பிரச்னைகளில் எல்லாம் தள்ளியே இருக்கின்றனர். நேற்று கூட அ.தி.மு.க., - தி.மு.க., தான் முன்னணியில் நின்றனவே தவிர, தமிழக காங்கிரஸ் எம்.பி.,க்கள் வாய் திறக்கவில்லை.
- நமது டில்லி நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சர்க்காரியா வழக்குகளை இந்திரா தலைமையிலான மத்திய அரசு வாபஸ் பெறவேண்டும் என்றால் சில நிபந்தனைகளை கருணாநிதி நிறைவேற்றித் தரவேண்டிய கட்டாயம் அன்று கருணாநிதிக்கு இருந்தது. அவற்றில் தமிழக காவிரி டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் செய்து, கர்னாடக மாநில அரசுக்கு காவிரியின் குறுக்கே கபினி அணை கட்டிக்கொள்ள அனுமதிப்பதும், தமிழக மீனவர்களின் உரிமையைப் பலியிட்டு, இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்ப்பதும் அடங்கும். தான் வழக்கில் இருந்துவிடுபட வேண்டும் என்ற சுய நலத்துடன் கருணாநிதி செய்த துரோகங்களில் இரண்டு எடுத்துக்காட்டுகள் மட்டுமே இவை. இந்தத் துரோகங்களின் பலனை தமிழக மக்கள் இன்று வரை அனுபவிக்கிறார்கள். தமக்கு துரோகம் இழைத்த கருணாநிதிக்கு மக்கள் ஐந்து முறை முதல்வராகும்படி வாய்ப்புக் கொடுத்து நன்றி செலுத்தினர் இது வரலாறு
சேது சமுத்திர திட்டம் என்பது பல அறிஞர்களால அலசி ஆராயப்பட்டு பல ஆயிரம் கொடிகள் செலவழித்து உருப்படியான பயன் எதுவும் கிடைக்காது என்று தெளிவாக சொல்லி விட்டனர்.
ஆனால் கொள்ளை கும்பலோ அலைக்கற்றை ஊழல தவிர சேது சமுத்திர திட்டம் என்று கோடி கோடி கோடி யாக காண்டிராக்ட்களில் சம்பாதிப்பதற்குதான் என்பது நாடறிந்த ரகசியம்.
இதற்காக அவ்வப்போது ஆர்யா திராவிட மாயை என்று எடுத்த்துக்கொண்டு உளறுவது போல் ராமரையும் ராமாயணத்தையும் எடுத்துக்கொண்டு உளறுவார்கள். புலம்புவார்கள்.பொது மக்கள் இனிமேல் சும்மா இருக்க மாட்டார்கள். காலணி துடைப்பம் ஆகியவற்றால் செய்யப்படும் கண்ணியமான பூஜையை தெருத்தெருவாக செய்வார்கள். அப்போதும் திருந்தாது இந்த மானம் கேட்ட கொள்ளை குடும்பமும் அதன் விசுவாசிகளும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.