தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு தொடர்ந்து அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களாக வழங்கப்பட்டு வந்த போதிலும், அவற்றின் பயண நேரத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்பட வில்லை. அது மட்டுமின்றி பாடாவதி பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதால், பயணிகள் கடும் அவஸ்தையை சந்தித்து வருகின்றனர்.
சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும், தமிழக விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு, தமிழகம் முழுவதும், 23 டெப்போக்கள் செயல்படுகின்றன. குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள், அல்ட்ரா டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ் பஸ்கள் என, மொத்தம் 885 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.
டீலக்ஸ் பஸ்கள்:ஆட்சி மாற்றத்துக்கு பின் முதல் தவணையாக, 55 புதிய அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள் வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து கடந்த வாரம், 155 புதிய பஸ்கள், 22 மறு சீரமைப்பு செய்யப்பட்ட பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலான டெப்போக்களில் சூப்பர் டீலக்ஸ் பெயரில் இயக்கப்பட்டு வந்த, லக்சரி கோச் பஸ்கள் அனைத்தும் ஓரங்கட்டப்பட்டு விட்டன.தற்போது அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் நல்ல நிலையில் இயங்கக் கூடிய, 1,070 அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள் உள்ளன. இவற்றில், 35 சதவீத பஸ்கள் அனைத்தும் புதிய பஸ்கள். பழைய பாடாவதி பஸ்களுக்கு மாற்றாக இந்த புதிய பஸ்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.இதில் பெரும்பாலான பஸ்கள், நான்கு வழிச் சாலைகளிலேயே இயக்கப்படுகின்றன. அப்படி இருந்தும் அவற்றின் பயண நேரங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்பட வில்லை. மேலும், புதிய பஸ்கள் இயங்கும் வழித்தடங்களில், பழைய பாடாவதி பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.
பயணநேரம்:நான்கு வழிச்சாலை பயன் பாட்டுக்கு வருவதற்கு முன், கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, சென்னை, திருச்சி, சேலம், ஆகிய இடங்களில் இருந்து திருநெல்வேலிக்கு, ஒன்பது மணி நேரமாகவும், நாகர்கோவிலுக்கு, பத்து மணி நேரமாகவும் பயண நேரம் கடை பிடிக்கப்பட்டது.நான்கு வழிச்சாலை பயன் பாட்டுக்கு வந்த நிலையிலும், விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு, புதிய பஸ்கள் வழங்கப்பட்டு, அவை இயக்கத்தில் உள்ள நிலையில், அதே பயண நேரமே நீடிக்கிறது. இந்த பயண நேரத்தை டிரைவர், கண்டக்டர்கள் குறைத்துக் கொள்ளாத படி பஸ்களின் இன்ஜின், 60 கி.மீ.,க்கு மேல் செல்லாதபடி சீல் வைக்கப்பட்டு விட்டதாக டிரைவர், கண்டக்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இத்தகைய பஸ்கள் திருமண நாள், விசேஷ தினங்களில் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. ஆனால், அவற்றின் பராமரிப்பு சொல்லிக் கொள்ளும் படி இல்லாததால், அவை நடுவழியில் பழுதாவது தொடர்கிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பயண தூரத்தை சென்றடைய முடியாமல், பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
சேலம், ஈரோடுக்கு புதிய பஸ்கள் "அம்போ' :விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு, ஆறு மாத காலத்துக்குள், இது வரை, 210 புதிய பஸ்கள், 60 மறு சீரமைப்பு செய்யப்பட்ட பஸ்கள் என மொத்தம், 270 பஸ்கள் வழங்கப்பட்டு விட்டன. இந்த பஸ்கள் அனைத்தும் தேவையான வழித்தடங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.திருநெல்வேலியில் இருந்து ஈரோடு, சேலத்துக்கு இயக்கப்படும் பஸ்களுக்கு மாற்றாக புதிய பஸ்கள் எதுவும் வழங்கப்பட வில்லை. இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்கள், திருநெல்வேலி கிளையில் இருந்தே இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடங்களில் தொடர்ந்து பழைய பாடாவதி பஸ்களே இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பயணிக்கும் பயணிகளும் மிகுந்த சிரமத்தை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வேகத்தை விடுங்கள், முதலில் நிம்மதியாக, சௌகரியமாக இருக்கையில் உட்கார முடிகிறதா? ஜன்னல் ஓரம் இருப்பவர்கள் வெளியே வர வேண்டும் என்றால் மற்ற இருவரும் வெளியே வந்தே ஆக வேண்டும், அதே போல் அவர் ஜன்னல் ஓரம் உட்காரும் போதும். ஒரு மணி நேர பயணத்திற்கே முட்டிகள் வலிக்க ஆரம்பித்து விடுகின்றன. ஏதோ ரோலர் கோஸ்டில் செல்வதுபோல் ஆடாமல் அசையாமல் திரும்ப முடியாமல் பயணம் செய்ய வேண்டும். கேரளா செல்லும் அடிமாடுகள் போல ஒரு பயணம். மாதம் ஒருமுறை பெங்களூர் டூ சேலம் பயணித்து இந்த 30 வயதிலேயே எனக்கு முட்டி வலி வந்ததுதான் மிச்சம். மிகச்சிறந்த 4 வழி சாலையான பெங்களூர் டூ சேலம் சாலையில் அவர்கள் செல்லும் வேகம் இருக்கிறதே அட அட அட.. சாப்பிட நிறுத்துவது முதற்கொண்டு எல்லாம் சேர்த்து 6 மணிநேரம் பயணம் ஆகிறது.. நம்புங்கள் இப்பொழுது எல்லாம் நான் என்னுடைய இரு சக்கர வாகனத்திலேயே உயிரை பணயம் வைத்து ஊருக்கு சென்று வருகிறேன்( பயண நேரம் 3.5 hrs அதுவும் மிதமான வேகத்தில் சென்றாலுமே, நடுவில் இரு முறை ஓய்வு எடுத்துக்கொண்டே அவ்வளவு நேரம் தான் ஆகிறது )
60கிமீ க்கு சீல் வைக்கப்பட்டதற்கு காரணம், ஓட்டுனர்களின் மீதுள்ள நம்பிக்கையே. வோல்வோ பஸ்களில் 120கிமீ வேகத்தில் சென்றாலும் கூட, நல்ல கட்டுப்பாடு இருக்கும். ஆனால் லேலான்ட் பஸ்களில் 80 கிமீ போவதே நல்லது. ஆனால் நமது ஓட்டுனர்கள், புது வண்டி கிடைத்து விட்டால், சகட்டுமேனிக்கு ஓட்டி ஒருவருடத்தில் வண்டியை கெடுத்து விடுவார்கள் அல்லது விபத்து செய்து விடுவார்கள். சொகுசுப்பேருந்து வாங்குவதை விட, அதிக திறன் கொண்ட பஸ்களை வாங்கினால் மட்டுமே (வால்வோ, பென்ஸ், TATA etc) பயண நேரத்தை குறைக்க முடியும். அதே போன்று அவற்றைப் பராமரிக்கவும் வேண்டும், அதற்கு நமது ஓட்டுனர்களின் ஒத்துழைப்பும், அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கண்டிப்பாக கிடைக்காது. ஆகையால் பாதுகாப்பு கருதி, இருக்கும் வண்டியில் 60 கிமீ க்கு சீல் என்பது சரியான வழிமுறை, நமது விதி அவ்வளவே என் நினைத்துகொள்ள வேண்டியது தான்.
தூத்துக்குடி மற்றும் அதன் வழியாக சென்னை செல்லும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை ஐம்பது. அரசு பேருந்து மொத்தம் பதினைந்து. தனியார் பேருந்து பயண நேரம் அதிக பட்சம் பத்து மணி நேரம். அரசு பேருந்து குறைந்த பட்சம் 12. இத யாரும் மறுக்க முடியாது. நான் பல அனுபவம் அரசு பேருந்தில் பெற்றேன் ,,,சுத்தம் சுகாதாரம் இது அரசு பேருந்தில் பாக்க முடியாது. மக்கள் அதிக கட்டணம் வாங்கினாலும் தனியாரை நாட இது தான் காரணம். தனியார் பேருந்து கட்டணம் குறைந்த கட்டணம் 480 அதிக பட்சம் 850 தனியார் பேருந்துகளில் இடம் கிடைக்காது. அரசு பேருந்து காலியாக செல்ல காரணம் பயண நேரம், சுத்தம் கிடையாது. பதில் சொல்ல மாட்டார்கள். இது போன்ற காரணம். அதை விட ஒரு நல்ல காரணம் அரசு பேருந்து ஒழுங்கா போனால் தனியார் KATHU வாங்கும். ஆகவே கமிஷன் பிச்சை வராது. இதும் அரசு பேருந்து மெதுவாக செல்ல முக்கிய காரணம் ஆகும்
முதல் FC போறவரைக்கும் ...60 கி.மீ க்கு மேல ஸ்பீட் போகாம இருக்க சொல்லுரான்களோ?.. என்னவோ..? உங்க வண்டினா மட்டும் அப்டி தானே maintain பண்ணுறீங்க, அரசாங்க வண்டி அதெல்லாம் பார்த்தா மட்டும் உங்களுக்கு இவ்ளோ கோவம் வருது ..? பொறுமையா இருங்கப்பா? ஓவர் ஸ்பீடா போயி என்னத்த சாதிக்க போறீங்க?
டிரைவர் அண்ணே, கண்டக்டர் அண்ணே, புது வண்டி கொடுத்தா அதை கழுவி, சுத்தம் பண்ணி உங்க வண்டிமாதிரி பார்த்துக்கணும், நீங்களும் அரசாங்கமும் அப்போ தான் சந்தோசமா இருக்க முடியும்..நம்ம ஊருல மட்டும் தான் அரசாங்க வண்டியை, உங்க புண்ணியத்தால் ஈசியா அடையாளம் காணலாம்...
முதலில் இந்த டீலக்ஸ், சூப் டீலக்ஸ், அல்ட்ரா என்றெல்லாம் பெயர் சூடுவதை நிறுத்தி மூன்றே பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும்
சாதா, சொகுசு ( சாதா போல இருமடங்கு கட்டணம் ) ,A /C ( சாதா போல நான்கு மடங்கு கட்டணம் ) என்பதே அவை.
இவை எந்த உணவகத்தில் நிறுத்தப்படும் என்பதும் முன்கூட்டியே குறிப்பிடவேண்டும்.( தற்பொழுது ஓட்டுனர் நடத்துனர் விருப்பத்திற்கேற்ப அவை நிறுத்தப்படுகின்றன ) வழிததடங்களில் உள்ள கழிவறைகள் மிக மிக கேவலம். அதை சரி செய்ய வேண்டும்.
இதெல்லாம் நடந்தால் நான் மேற்கொண்டு சில ஆலோசனைகளையும் சொல்லுவேன்.
(இதில் ஒன்று கூட நடக்காது என்பதையும் நான் அறிவேன்)

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.