கோவை:""விண்வெளியில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு ஆகும் செலவை குறைக்க வேண்டும் என்பதே என் திட்டம். "இஸ்ரோ' மற்றும் டி.ஆர்.டி.ஓ., இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளன,'' என, கோவை பாரதியார் பல்கலையில் நடந்த விண்வெளி திருவிழாவில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்தார்.
அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையம் (நாசா), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் (டி.ஆர்.டி.ஓ) சார்பில், விண்வெளி திருவிழா, "ஸ்பேஸ்-பெஸ்ட் 2012' பாரதியார் பல்கலை வளாகத்தில் நேற்று துவங்கியது; வரும் 14ல் நிறைவடைகிறது.பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் வரவேற்றார். தமிழக உயர்கல்வித்துறை கூடுதல் முதன்மை செயலர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.
"ஸ்பேஸ்-பெஸ்ட் 2012' ஒருங்கிணைப்பாளர் மங்கள்ராஜ் பேசுகையில், ""விண்வெளி ஆராய்ச்சித்துறை குறித்து, இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், நாட்டில் முதல் முறையாக இத்திருவிழா நடத்தப்படுகிறது. பள்ளி கல்லூரி மாணவர்கள் 30 ஆயிரம் பேர், திருவிழாவில் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். ஆறு நாட்கள் நடக்கும் இத்திருவிழாவை, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் விண்வெளி திருவிழாவை துவக்கி வைத்து பேசியதாவது:வாழ்க்கை தரம் மற்றும் லட்சியத்தை அடைய விண்வெளி திருவிழா உதவும் என்ற நம்பிக்கையில் இளைய சமுதாயத்தினர் கூடியுள்ளனர். உறக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு. அப்படிப்பட்ட கனவும், லட்சியங்களும் உங்களை உயர்த்தும்.பறக்க வேண்டும் என்ற உணர்வு, வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். ஒவ்வொரு இளைஞருக்கும் லட்சியம் வேண்டும். அந்த லட்சியம் நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டும். விடா முயற்சி வேண்டும், தோல்வி மனப்பான்மையை தோல்வியடைய செய்ய வேண்டும். இந்த நான்கு குணங்களும் கொண்டிருந்தால், கனவு நனவாகும். பூமிக்கு கீழே மற்றும் மேலே உள்ள எந்த ஒரு சக்தியை ஒப்பிடும்போதும், மனஎழுச்சி கொண்ட இளைஞன் தான் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி. 60 கோடி இளைஞர்களை நம் நாடு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விளக்கை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், விமானத்தை கண்டுபிடித்த ரைட் பிரதர்ஸ், தொலைபேசியை கண்டுபிடித்த கிரகாம் பெல், ராக்கெட்டை கண்டுபிடித்த வெர்னர் வென் பிரான் அண்ட் ஆர்தர் ருடால்ப் ஆகியோர் வரலாற்றில் இடம் பெற்று விட்டனர். அவர்கள் பெற்றிருந்த தனித்தன்மையே, அவர்களை வரலாற்றில் இடம் பெற வைத்தது.
நமது இளைஞர்களும், தனித்தன்மையுடன் செயல்பட்டு, வரலாற்றில் இடம் பெற முயற்சிக்க வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் ஒன்றரை கோடி இளைஞர்களை சந்தித்துள்ளேன். ஒவ்வொருவரும் தனித்தன்மையுடன் செயல்படவே விரும்புகின்றனர். போட்டி, பொறாமை நிறைந்த இவ்வுலகில் பல தடைகளை சந்திக்க நேரிடும். தடைகளை தகர்க்க தொடர்ந்து போராடும் ஆற்றல் வேண்டும்; அப்படி செயல்பட்டால், அதுவே தனித்தன்மை பெற வித்திடும்.
"பெரிய அளவிலான விண்வெளி செயல்திட்டங்களுக்கு, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் ஒத்துழைப்பு வேண்டும்' என, பரிந்துரை செய்து வருகிறேன். "விண்வெளி திட்டம் 2050'ல் பெரிய அளவிலான விண்வெளி திட்டங்கள்; குறைந்த செலவில் விண்வெளி ஓடங்கள் தயாரித்தல், ஒருங்கிணைந்த விண்வெளி பாதுகாப்பு, விண்வெளி பயணம் உள்ளிட்ட மூன்று பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்த சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியாளர்களிடம் தெரிவித்துள்ளேன்.விண்வெளியில் தடையின்றி கிடைக்கும் சூரிய சக்தியை பயன்படுத்த உதவும் வகையிலான, "கலாம்-என்.எஸ்.எஸ்.,' திட்டம் குறித்து 2010 நவ.,4ல் சர்வதே விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் எடுத்துரைக்கப்பட்டது. உலகம் பயன்படுத்தும் ஒட்டுமொத்த ஆற்றலை விட பத்து டிரில்லியன் மடங்கு அதிக ஆற்றல், சூரிய ஒளியால் வெளிப்படுத்தப்படுகிறது.
இத்தகைய அதிகப்படியான ஆற்றலை, சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை விண்வெளியில் அமைப்பதன் மூலம் நாம் பெற முடியும். மின் உற்பத்தி நிலையத்துக்கான பொருட்களை விண்வெளிக்கு கொண்டு செல்வதற்கு, ஒரு கிலோவுக்கு 20 ஆயிரம் அமெரிக்க டாலர் செலவிடும் நிலை உள்ளது. இதை இரண்டாயிரம் டாலராக குறைக்க வேண்டும் என்பதே எனது திட்டம். இந்தியாவில், இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ., இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளன.முடியாததை, முடித்து காட்டியவர்கள் சாதனையாளர்கள்; வரலாற்றில் இடம்பெறுகின்றனர். இதை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.இவ்வாறு, அப்துல் கலாம் பேசினார்.
முன்னதாக, விண்வெளி குறித்த புத்தகங்களை வெளியிட்டார். பல்கலை பதிவாளர் மனோகரன் நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவர் எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருப்பதால், திரு அப்துல் கலாம், புதிய யோசனைகளும், திட்டங்களும் உருவாகின்றன. இவர் பேசிகொண்டே இருக்கவேண்டும், இந்தியாவில் இல்லையெனிலும், உலகில் எங்கேயோ ஒரு நாடு இவரின் எண்ணங்களுக்கு உயிர் கொடுப்பர். ப்லெசிங் இன் டிச்கைஸ் - இவர் ஜனாதிபதி ஆகவில்லை. இளைஞர் சமுதாயத்துக்கு ஒரு வரப்ரசாதம். அரசியல்வாதிகளுக்கு இதை புரிந்துகொள்ளும் அளவுக்கு ஞானம் இல்லை. ஊக்குவிக்கவும் நேரமில்லை - பணம் பண்ணுவதிலேயே குறியாக இருப்பதால். அப்துல் கலாமையே வேறு நாட்டுக்கு விற்று பணம் பண்ணிவிடுவார்கள் சந்தர்ப்பம் கிடைத்தால். தேசியம் (தேச பற்று) அற்றுவிட்டது நம் நாட்டில். சுயநலம் மேலோங்குகிறது நம் பாரத திருநாட்டில்.
கதிரவன் ஒளில் இருந்து மின் உற்பத்தி தயாரிப்பது அணு மின்சாரத்தைவிட பல ஆயிரம் மடங்கு பாதுகாப்பு ஆனது. அணு உலைகள் என்றும் மனித இனத்துக்கு ஆபத்து ஆனவை. ஓர் அணு உலையின் வயது 30 முதல் 40 ஆண்டுகள்தான். அதற்குபின்பும் அந்த இடத்தில மனிதன் உயிர் வாழ முடியாது. ஆகையால் நாம் புதிய அணு மின் நிலையம் கட்டுவதை விட, கதிரவன் ஒளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டதை அமல் செய்ய வேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.