திருவள்ளூர்:மாவட்டத்தில் நேற்று நடந்த, 196 மதுபான குடி மையங்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகளை, ஆளும் கட்சியினர் அதிகளவில் ஒப்பந்தப் பெட்டியில் போட்டும், அதை "டாஸ்மாக்' அதிகாரிகள் கண்டும், காணாமல் இருந்தனர். படிவங்கள் பரிசீலனை இரவு வரை தொடர்ந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில், மொத்தம், 347 "டாஸ்மாக்' மதுபானக் கடைகள் உள்ளன. இக்கடைகளின் அருகில் குடி மையம் அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. நேற்று அம்பத்தூர், பள்ளிப்பட்டு, திருத்தணி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி ஆகிய தாலுகாக்களில் உள்ள, 196 "டாஸ்மாக்' குடி மையங்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
கோஷம்:
ஒப்பந்தப் புள்ளிகள் காலை, 7 முதல் பிற்பகல், 3 மணி வரை பெறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், காலை, 11.30 மணி வரை, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் ஒப்பந்தப் பெட்டி வைக்கப்படவில்லை. தொடர்ந்து, 11.40 மணிக்கு, மதுபானக் கடை மற்றும் குடி மைய கட்டட உரிமையாளர்கள் அங்கு ஒப்பந்தப் படிவங்கள் போட வந்தனர்.அலுவலகத்தில் ஒப்பந்தப் பெட்டி வைக்காததை கண்டித்து கோஷமிட்டனர். அரை மணி நேரத்திற்குள் ஒப்பந்தப் பெட்டி வைக்கப்படும் என, "டாஸ்மாக்' அதிகாரிகள் கூறினர். தொடர்ந்து, 12.40 மணிக்கு சீலிட்ட ஒப்பந்தப் பெட்டி வைக்கப்பட்டது. பின், ஒப்பந்தப் படிவங்களை போட உள்ளே அனுமதித்தனர்.ஒரு நபர், ஒரு ஒப்பந்தப் படிவத்தை மட்டுமே, பெட்டியில் போட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிகளவு ஒப்பந்தப் புள்ளி படிவங்களை பெட்டியில் போட்டனர். இதை, "டாஸ்மாக்' அதிகாரிகளும், போலீசாரும் கண்டும் காணாமல் இருந்தனர்.
பரபரப்பு :
ஒப்பந்தப் பெட்டி பிற்பகல், 3.30 மணிக்கு, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் முருகன் தலைமையில் திறக்கப்பட்டது. ஒரு கடைக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வந்தவை மட்டும் முதலில் பரிசீலனை செய்யப்பட்டது. அதன்பின், இரண்டு, மூன்று விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, தகுதியான ஒன்று மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தள்ளுபடி செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததையடுத்து, ஒரு சில மனுக்கள் மட்டும் பின், பரிசீலனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒப்பந்தப் புள்ளி படிவங்கள் பரிசீலனை இரவு வரை நீடித்ததால், ஆளும் கட்சியினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க, மாவட்ட குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி., செந்தில்குமார், டி.எஸ்.பி.,க்கள் பாலச்சந்தர், ஜோஸ் தங்கய்யா தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
* சீலிட்ட ஒப்பந்தப் புள்ளி பெட்டி வைத்த, ஐந்தாவது நிமிடத்தில் ஒருவர் ஒப்பந்தப் படிவத்தை போட உள்ளே சென்றார். அவரை போட விடாமல் மற்றொருவர் ஓடிச் சென்று, ஒப்பந்தப் பெட்டியை தள்ளி விட முயன்றார். போலீசார் அவரை பிடித்து வெளியே அனுப்பினர்.
* அம்பத்தூர் நகர அ.தி.மு.க., செயலர் அலெக்சாண்டர், கையில் ஒரு படிவத்தை வைத்துக்கொண்டு, மற்றொரு கையில் சூட்கேசுடன் உள்ளே சென்றார். முதலில் கையிலிருந்த மனுவை செலுத்தியவர், பின் சூட்கேசை திறந்து, அதில் வைத்திருந்த ஒப்பந்தப் படிவங்களை, கத்தை கத்தையாக எடுத்து, பெட்டியில் போட்டார்.
* ஆவடி நகர அ.தி.மு.க., செயலர் தீனதயாளனும் கத்தையாக ஒப்பந்தப் படிவங்களை பெட்டிக்குள் போட்டார். இதை தடுக்க வேண்டிய போலீசாரும், "டாஸ்மாக்' அதிகாரிகளும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்.
* காக்களூர் நுழைவு வாயிலில் தடுப்புகளை வைத்து, ஒப்பந்தப் படிவங்கள் வைத்துள்ளவர்களை மட்டுமே போலீசார் உள்ளே செல்ல அனுமதித்தனர். மற்றவர்களை விரட்டி அனுப்பினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆளும்கட்சியினர் அராசகம், எந்த கட்சி வந்தாலும் இதே கூப்பாடு, அரசியவாதிகளின் மனோபோவம் ரொம்ப மாறியுள்ளது...அவர்களின் கூட்டமும் அதிகரித்துள்ளது, நண்பர் ஒருவர் புலம்பினது.... நுங்கம்பாக்கம் காலேஜி ஓரமாக உள்ள பழ கடைகள் பற்றியது...... சாலைக்கு இடைஞ்சலாக இருந்தாலும் நிறைய கடைகள் நல்ல வியாபாரம்... நல்ல மாமுலும்......புது கவுன்சிலர் வந்தவுடன் மாமுல் தொகையை அதிக படுத்தி தொல்லை கொடுத்திருகிறார்கள். இப்போது கடைகள் காணும்...... இப்போது அவர்கள் குடித்து விட்டு வெட்டியாக சுற்றிகொண்டிருக்கிரர்கள். முன்பு கடைகள் இடைஞ்சலாக இருந்தாலும் எப்போதும் அப்பக்கம் செல்வோருக்கு பாதுகாப்பு இருந்தது ஏனென்றால் எப்போதும் நடமாட்டம் இருக்கும். இப்போது வியாபாரமும் போச்சு. பாதுகாப்பும் போச்சு......இதுபோன்ற உதாரணங்கள் தமிழகம் எங்கும் காணலாம், .வாழ்க ஆளும்கட்சி அரசியலும் அவர்கள் அராச்சகமும்.....
கட்சிகள் ஆட்சிக்கு வருவதன் நோக்கம் மக்கள் சேவைக்கு அல்ல, பணத்தை குறுக்கு வழியில் சுருட்டுவதற்குத்தான் . காற்று உள்ள போதே தூற்றி கொள்ளும் கலையை நன்கு அறிந்தவர்கள் நமது அரசியல்வாதிகள் . எனவே கத்தை கத்தையான டெண்டர்களை பற்றியோ ,கண்துடைப்பு டெண்டர்களை பற்றியோ கவலை கொள்ள மாட்டார்கள். ஆனால் பாவப்பட்டவர்கள் பரிதாபத்திற்குரிய குடியால் நொந்து நூலான குடும்பங்களே....
குடி குடியை கெடுக்கும் இந்த காசு மட்டும் எப்படி டா உங்களுக்கு செமிக்கும் என்று தெரியவில்ல எத்தனையோ குடும்பங்களின் கதறல்கள், ஒரு வேலை சாப்பாட்டிற்கு கூட வழி இல்லாமல் அழிந்து போயி கொண்டு இருக்கின்றன .........அவர்களின் வயத்தெரிச்சல் இப்படி சம்பாதிக்க வேண்டுமா.இதை இந்த அரசாங்கமும் தேர்ந்தெடுத்து செய்கிறதே கொடுமை கொடும நு கோவிலுக்கு போன அங்க தலைய விரிச்சு அடிச்சான் .................
குடி குடியைக் கெடுக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த உண்மையை மக்களிடம் பரப்பவேண்டிய அரசே குடியை வளர்ப்பது கொடுமை. ஐம்பெரும் பாதகங்களில் குடியும் ஒன்று. இந்து மதத்தின் அடிப்படைகளில் இதுவும் ஒன்று. இந்துக்கள் அதிகள் உள்ள இந்தியாவில் மதுவை வளர்ப்பதன் மூலம் இந்து மதத்தையே கேவலப்படுத்துகிறது மத்திய மாநில அரசுகள். மக்களை மாக்களாக மாற்றி மறைமுகமாக அவர்களை மடையர்களாக்கும் நிலை அரசியல்வாதிகளால் மாற்றப்படவேண்டும். நடக்குமா?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.